கொங்கு சேரர்கள் காசுகள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

கொங்கு சேரர்கள் (பொ.ஆ. 12 ஆம் நூற்றாண்டு):

கோயம்புத்தூர், சேலம், கரூர் மற்றும் நாமக்கல் போன்ற மாவட்டங்கள் அடங்கிய பகுதி கொங்குப் பகுதி என அழைக்கப்படுகிறது. சோழர்களின் சிற்றரசர்களாக விளங்கிய சேரர்கள் பொ.ஆ. 10-11 ஆம் நூற்றாண்டில் இங்கு ஆண்டு வந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த அவர்களது வழியினர் கொங்கு சேரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் கோயம்புத்தூரின் வடமேற்குப் பகுதியை ஆண்டனர். கொங்கு சேரர்களின் காசுகளில் எழுத்துப்பொறிப்புள்ள காசுகள் இதுவரை கிடைக்கவில்லை. இவர்களது காசுகளில் பெரும்பாலும் வில் மற்றும் பனைமரம் இடம்பெற்றுள்ளது.

காசுகள்:
பனைமரம்
குத்துவாள்

இவர்களது காசுகளில் ஒரு பக்கம் கடவுளின் கோட்டுருவம், வில் மற்றும் பனைமரம் பெண் தெய்வத்தின் கோட்டுருவம், அமர்ந்த நிலையில் பெண் தெய்வம், அமர்ந்த நிலை நரசிம்மம், விளக்கு போன்றவையும் மறுபக்கம் பெண் தெய்வம் அல்லது யக்ஷி, வில் மற்றும் பனை இரு படைக்கலன்கள், விளக்கு, குத்துவாள், பிறை, வில்லும் பனைமரமும், நடுவில் நரசிம்மர் உருவம், வில் அம்புடன் நிற்கும் ராமர், ஆமை, பரசு, கட்டாரி, மீன் நான்கு புள்ளிகள், பிறை, சைத்யம் போன்றவை இடம்பெறுகின்றன.

கிடைத்துள்ள இடங்கள்:

கரூர், பேரூர், கோயம்புத்தூர், பாலக்காடு ஆகிய இடங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன.

உலோகம்:

செம்பு உலோகத்தாலானது.

எழுத்துப்பொறிப்புகள்:

கொங்கு சேரர்களின் காசுகளில் எழுத்துப்பொறிப்புள்ள காசுகள் இதுவரை கிடைக்கவில்லை. கிடைக்கும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு கொங்கு சேரர்களது என்று இக்காசுகள் அடையாளப்படுத்தப் பெற்றுள்ளன.