பிற்காலப் பாண்டியர் காசுகள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

பிற்காலப் பாண்டியர் (பொ.ஆ. 13-14 ஆம் நூற்றாண்டு):

சங்ககாலத்தில் தோன்றிய பாண்டிய அரசு இடையில் ஒரு முன்னூறு ஆண்டுகள் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் மறைந்து மீண்டும் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டில் வெளிப்பெற்றது. பொ.ஆ. 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களது எழுச்சியினால் அழிவுற்று மீண்டும் 13 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு வலுவற்றிருந்த நேரத்தில் உயிர்த்தெழுந்தது. இவ்வாறாக இப்பேரரசு 14 ஆம் நூற்றாண்டு வரையிலான ஒரு தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டுள்ளது. பொ.ஆ. 1218 வரை சோழ அரசுக்குத் திரை செலுத்திய பாண்டிய அரசு மூன்றாம் குலோத்துங்கனின் மறைவிற்குப் பின் தன்னுரிமை பெற்றது. இவருக்குப் பின் மூன்றாம் இராசராசன் வரை ஆட்சியேற்ற ஆட்சியாளர்களிடையே வலிமைக் குன்றியிருந்ததால் பொ.ஆ. 1218 ஆம் ஆண்டு சோழ நாட்டின் மீது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியர் படையெடுத்து வெற்றிப்பெற்றார். அன்று முதல் அவர் சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியர் என்ற பட்டம் பெற்றார். இவரது தலைமையில் அமைந்த இவ்வரசு குறைந்தது ஒரு நூற்றாண்டு காலமே நிலைத்தது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத வாரிசுரிமைப் போர் மாறவர்ம வீரபாண்டியன் சடையவர்ம சுந்தரபாண்டியன் இவர்களுக்கிடைய நிகழ்ந்தது. அதன் விளைவு பொ.ஆ. 1314இல் தக்காணத்தில் ஆட்சி செய்த சுல்தான்களின் ஆட்சி மதுரையில் ஏற்பட்டது.

சின்னங்கள்:

பாண்டியரது காசுகளில் வெண்கொற்றக்குடையின் கீழ் இரு விளக்குக் கம்பங்களுக்கு நடுவே ஒரு மீன், செங்குத்தாக நிற்கும் இரு மீன்கள், இடது பக்கம் நகரும் யானை, சோழர்களது காசுகளில் இடம்பெறுவது போல் ஒரு பக்கம் அமர்ந்த உருவத்துடன் எழுத்துப்பொறிப்பு (இலங்கை மனித உருவம்). இரு கயல்களுக்கிடையில் செண்டு, புள்ளியிட்ட வட்டத்திற்குள் மீன்கள், சக்கரம், திரிசூலம், குத்துவாள், செங்குத்தான இரு மீன்களுக்கு நடுவில் செங்கோல் மேல் பிறை, நிற்கும் மனித உருவத்தின் இடது கையில் சிறிய மீன், வணங்கும் நிலையில் மன்னர் ஒரு பக்கமும் வெண்கொற்றக்குடையின் கீழ் எழுத்துப்பொறிப்பு, செங்கோலினால் பிரிக்கப் பெற்ற செங்குத்தான இரு மீன்கள் யானை, அமர்ந்த நிலை மனித உருவம் (சோழர் காசுகளில் இடம்பெறுவதைப் போன்ற இலங்கை மனிதன்), வலது பக்கம் நோக்கி நிற்கும் பன்றியோடு சங்கு சக்கரம், சூரியன், சந்திரன் நிற்கும் உருவம், படுக்கைவாட்டில் இரு கயல்கள் போன்ற பல உருவங்கள் பாண்டியர் காசுகளில் இடம்பெற்றாலும், வெண்கொற்றக்குடையின் கீழ் இருபுறமும் வெண்சாமரங்கள் சூழ நடுவே செங்கோலுடன் இரு கயல் சின்னங்களே பெரும்பாலும் இடம்பெறுகின்றன. இச்சின்னங்களின் ஒரு பக்கத்தில் எழுத்துப்பொறிப்புகள் காணப்பெறுகின்றன. முன்னர் சுட்டியபோல் சோழர்களது காசுகளில் இடம்பெறுவதைப் போலவே பாண்டியரது காசுகளிலும் ஒரு பக்கம் நிற்கும் நிலையிலும் மறுபக்கம் அமர்ந்த நிலையிலும் உள்ள இலங்கை மனித உருவம் இடம்பெற்றுள்ளன. பிற்காலத்தைச் சேர்ந்த (பொ.ஆ. 13-14 ஆம் நூற்றாண்டு) பாண்டிர்களது காசுகளில் ஒரு புறம் “ராஜ ராஜ” என்ற நாகரி சொற்றொடருன் மறுபுறம் குலசேகர போன்ற பாண்டிய மன்னர்களின் பெயர்களும் இடம்பெறுவதுமுண்டு. பாண்டியர்கள், சோழர்களது காசுகளை அப்படியே பின்பற்றியுள்ளனர் என்பது சுட்டத்தக்கது.

எழுத்துப்பொறிப்புள்ள காசுகள்:
நிற்கும் மனித உருவம்
சுந்தர பாண்டியன்

ஸ்ரீ அவனிபசேகரன் கோளக, ஸ்ரீ வரகுண என்ற எழுத்துப்பொறிப்புள்ள காசுகள் முற்காலப் பாண்டியர்களைச் சேர்ந்தது (பொ.ஆ. 7-8 ஆம் நூற்றாண்டு). குலசேகரன், ஸ்ரீ குலசேகர, விக்கர, பூதல, சுந்தரபாண்டியன், கொற்கை ஆண்டார், சோணாடு கொண்டான், கச்சி வழங்கும் பெருமாள், எல்லாந்தலையான, கோதண்டராமன், வீர பாண்டியன், ராஜராஜ, வீர பாண்டியன், முட்த்தியவேம பெருமாள் போன்ற எழுத்துப்பொறிப்புள்ள காசுகள் (பொ.ஆ. 13-14 ஆம் நூற்றாண்டு) பிற்கால பாண்டியப் பேரரசர்களுக்கு உரித்தானவை.

எழுத்து & மொழி:

பாண்டியர்கள் தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் மன்னர்கள் என்பதற்கு அவர்களது காசுகளே சிறந்த சான்றாகும். சங்க காலந்தொட்டு பாண்டியர்கள் தமிழ் மொழி, தமிழ் எழுத்துக்களையே காசுகளில் பொறித்துள்ளனர்.

கிடைத்துள்ள இடங்கள்:

பாண்டியரது காசுகள் தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் கிடைக்கப் பெறினும் மதுரையில் அதிக அளவில் கிடைக்கின்றன.

எடையும் உலோகமும்:

ஸ்ரீ வரகுண என்ற ஒரு தங்கக் காசைத் தவிர பிற அனைத்தும் செப்பு உலோகத்தாலானவை. இவர்களது காசுகளும் குவியலாகக் கிடைக்காததால் துல்லியமான எடை அளவுகளை அறிய இயலாது.