மல்லசந்திரம்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

மல்லசந்திரம் (மல்ல சமுத்திரம்) தமிழகத்தில் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையிலுள்ள, சிறந்த ஈமச்சின்னங்களை உடைய பெருங்கற்கால ஊராகும்.

அமைவிடம்

மல்லசந்திரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் வட்டத்தில் தருமபுரியிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பெங்களூர் சாலையில் பீர்பள்ளியிலிருந்து இவ்வூருக்குச் செல்லலாம். இவ்வூருக்கு அருகில் உள்ள மலையின் மீது இருநூற்றுக்கும் மேற்பட்ட கல்திட்டைகளும், பிற ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன. இவை பாண்டவர் கோயில் என்று அழைக்கப்படுகின்றன. இவை மலை மீது அமைந்து இப்பகுதிக்கு அழகூட்டுகின்றன.
மலைமீது கல் திட்டை, மல்லசந்திரம்

இங்கு காணப்படும் கல் திட்டைகள் மிகப் பெரியதாகவும், வடிவமைப்பில் வேறுபட்டும் காணப்படுகின்றன. இங்குள்ள கல்திட்டைகளைச் சுற்றிலும் கற்பலகைகள் வட்டமாக நடப்பட்டுள்ளன. இவற்றின் மேல்பகுதி அரைவட்ட வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. இது போன்ற அரைவட்ட வடிவ கற்பலகைகள் அரிதாகவே காணப்படுகின்றன.

இந்த வகை ஈமச்சின்னங்கள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாகும். இங்குள்ள கல் திட்டைகளில் சில சேதமடைந்துள்ளன. இவற்றுள் இடுதுளைகள் உள்ளன.

இக்கல் திட்டைகள் 1மீ முதல் 2.6 மீ உயரத்துடனும் காணப்படுகின்றன. நான்கு புறமும் கற்பலகைகளை வைத்து, மேலே ஒரு மூடுகல் வைக்கப்பட்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சுற்றி உள்ள கல்வட்டம் மிக அழகாகக் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கல்திட்டைகள் சிறிய பெரிய அளவில் உள்ளன. இவற்றின் சில பலகைகளில் ஓவியங்கள் காணப்படுகின்றன

சிலவற்றில் இடுதுளைகள் உள்ளன.இவை பொ.ஆ.மு.1000லிருந்து பொ.ஆ.மு.500 வரையான காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

மேற்கோள் நூல்

Rajan,K. 1997. Archaeological Gazeteer of Tamil Nadu, Thanjavur, Manoopathipakam.