மன்னார்கோயில் சங்க காலத் தமிழ் (தமிழி) கல்வெட்டு

முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை

அமைவிடம் :திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மன்னார்கோயில் என்ற ஊரில் உள்ள குகையில் இக்கல்வெட்டு உள்ளது. இக்குகைப்பாறை ராஜாக்கள் பாறை என்று அழைக்கப்படுகிறது.
எழுத்து: சங்க காலத்தமிழ் (தமிழி) எழுத்து
மொழி: தமிழ்
காலம்: பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டு(தோராயமாக)

கல்வெட்டுப்பாடம்

1) பள்ளி செய்வித்தான்
2) கடிகை கோவின் மகன்
3) பெருங்கூற்றன்
பொருண்மை: இந்தப் பள்ளியைச் செய்தது கடிகை தலைவனின் மகன் பெருங்கூற்றன்.

சிறப்பு :

இதுவரை சமணர் படுக்கைகள் அமைத்துக்கொடுத்தது பற்றிக் கூறும் அனைத்துக் கல்வெட்டுகளிலும் படுக்கை என்பதற்குச் சமமான சொல் பாளிய் அல்லது பளிய் என்றே கொடுக்கப்பெற்றிருக்கும். ஆனால், இந்தக் கல்வெட்டில் முதன்முறையாகப் ‘பள்ளி’ என்ற சொல்லாட்சி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. கடிகை என்பது கல்வியில் திறம்பெற்றோர் இருக்கும் நிறுவனம் அல்லது குழு என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகின்றார். கடிகை என்பதே தொன்மைக் காலச் சமயப் பள்ளிக்கூடங்களாக அதாவது உயர் ஆய்வு மையங்களாக இருந்து செயல்பட்டுள்ளன.