மயிலாடும் பாறை

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்

மயிலாடும்பாறை நுண்கால புதிய கற்கால/பெருங்கற்கால/இரும்புக்கால மக்கள் வாழ்ந்த ஊராகும்.

அமைவிடம்

மயிலாடும்பாறை கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி வட்டத்தில் கிருஷ்ணகிரியிலிருந்து போச்சம்பள்ளி போகும் நெடுஞ்சாலையில், சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைப் பேராசிரியர் க.இராசன் அவர்கள் தலைமையில் அகழாய்வுகள் நடைபெற்றன.

தொல்லியல் சான்றுகள்

இவ்வூரில் உள்ள பாறை மறைவிடத்தில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் என்ன என்பது தெரியவில்லை. இங்கு அகழாய்வுகளில் புதிய கற்காலச் சான்றுகளும், பெருங்கற்காலச் சான்றுகளும் வெளிப்பட்டுள்ளன.

இங்குள்ள பாறைமறைவிடத்தில் (Rockshelter) இடப்பெற்ற அகழாய்வுக்குழியில் குவார்ட்ஸ் கற்களால் செய்யப்பட்ட நுண்கற்கருவிகளும், செதில்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. துளைப்பான்கள், கூர்முனைகள், பிளேடுகள் மற்றும் பிற கருவிகள் கிடைத்துள்ளன. இவை பொ.ஆமு.1000க்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. இங்கு ஆலோசீன் எனப்படும், சுமார் கி.மு. 10,000இல் துவங்கிய காலத்திலிருந்து மக்கள் வாழ்ந்துள்ளனர். தமிழகத்தில் நுண்கற்காலச் சான்றுகள் மண்ணடுக்குகளில் கிடைத்த ஒரு சில இடங்களில் இது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு ஒரு கற்பதுக்கை அகழாய்வு செய்யப்பட்டது. இதன் உள்ளே கருப்பு–சிவப்புப் பானைகளும், இரும்புப் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கற்பதுக்கையில் “ப” வடிவ இடுதுளை காணப்படுகின்றது.

இங்கு நுண்கற்கால, புதியகற்கால, இரும்புக்கால, வரலாற்றுத் துவக்ககாலப் பண்பாட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன.

மேற்கோள் நூல்

Rajan.K., N.Athiyaman, and P.Jayakumar 2004. Excavation at Mayiladumparai, Tamil Nadu. Man and Environment 29(2):74-89.