சானூர்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

சானூர் ஒரு பெருங்கற்கால (இம்புக்கால-வரலாற்றுத் துவக்கக்கால) ஈமச்சின்ன இடமாகும்.

அமைவிடம்

இந்த இடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டிலிருந்து, திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சிறு மலைகள் அமைந்துள்ளன.

சிறப்பு

இங்கு நூற்றுக்கணக்கான இறந்தவர்களுக்காக எழுப்பப்பட ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.

அகழாய்வுகள்

இந்திய அரசுத் தொல்லியல் ஆய்வுத்துறை இந்த இடத்தில் பல ஈமச்சின்னங்களை அகழாய்வு செய்துள்ளது. இந்த ஈமச்சின்னங்களிலிருந்து பல அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இங்கு காணப்படும் கற்பதுக்கைகள், கற்பலகைகளில் உருவாக்கப் பெறவில்லை. பெரிய பாறைகள் கொண்டு அமைக்கப் பெற்றுள்ளன. எனவே, இவை சற்று கரடுமுரடாக உள்ளன.

ஈமச்சின்ன வகை

இங்கு கற்பதுக்கைகள் காணப்படுகின்றன. இவை நாற்புறமும் கிரானைட் கற்களைக் வைத்து ஓர் அறை போல உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் உள்ளே சுடுமண்ணால் செய்யப்பட்ட ஈமப் பேழைகள் கிடைத்துள்ளன. இந்த அறைகள் மூடுகற்களால் மூடப்பட்டுள்ளன. இங்கு இரும்பாலான பொருட்களும், மனித எலும்புகளும், சங்கால் செய்யப்பட்ட காதணிகளும் கிடைத்துள்ளன.

பானை வகைகள்

இங்கு கருப்பு-சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்புப் பானைகள் கிடைத்துள்ளன. பானைகளில் குறியீடுகள் கோட்டுருவங்களாக எழுதப்பட்டுள்ளன. இவை சிந்துவெளி நாகரிக முத்திரைகளில் காணப்படும் குறியீடுகளை ஒத்திருப்பதாக ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.

மேற்கோள் நூல்

Leshni,L.S 1974, South Indian Megalithic Burials, The Pandukal Complex. Wesbaden.