செய்பொருள்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

கைக்கோடரி முதல் கைப்பேசி வரை அனைத்தும் செய்பொருள் ஆகும். செயற்கையாகச் செய்பொருளே செய்யப்பட்ட பொருள் ஆகும். இது ஆங்கிலத்தில் Artifact (Arteficially made) என்று அழைக்கப்படுகின்றது. இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, மனிதர்கள் தங்களது திறமையால் பல பொருட்களைச் செய்யத் துவங்கினார்கள். இதுதான் நாகரிக, பண்பாட்டு வளர்ச்சிக்கு வித்திட்டது.

நாம் காணும் அனைத்துப் பொருட்களும் அதாவது மனிதனால் செய்யப்பட்டவை, செய்பொருட்களாகும் . மேசை, பேனா, குண்டூசி, விமானம், செயற்கைக்கோள், செங்கல் என அனைத்தும் செய்பொருளில் அடங்கும். கைக்கோடரி முதல் கைப்பேசி வரை எல்லாப் பொருட்களும் செய்பொருட்கள். தொன்மையான பொருள் தொல்பொருளாகும்.

பழங்காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகளை இரண்டாகப் பிரிக்கலாம். அவற்றில்,

1. செய்பொருள் – பழமையான செய்பொருள் = தொல்பொருள்

2. எழுத்துக்கள், குறியீடுகளடங்கிய ஆவணங்கள்.

இந்த எழுத்துக்களை நிலையாக (அழியாச் சான்றாக) ஆக்க வேண்டுமென்றால், அவற்றைப் பொருட்களில் குறித்து செய்பொருளாக ஆக்கவேண்டும். எனவே செப்பேடுகள், கல்வெட்டுகள் மற்றும் நாணயங்கள், எழுத்துக்கள், குறியீடுகள் உள்ளவையும் தொல்பொருட்கள் எனப்படும்.

இந்தச் செய்பொருட்களின் தொகுப்பே தொல்பொருட்குழுமம் எனப்படும். இது ஆங்கிலத்தில் Assemblage எனப்படும். அதாவது ஒரு காலகட்டத்தில், ஒரு மண்ணடுக்கில், ஒரு பகுதியில் கிடைக்கும் தொல்பொருள்கள் ஒரு தொல்பொருட்குழுமம் ஆகும்.

இவ்வாறு பல தொல்பொருட்குழுமங்கள் சேர்ந்தது ஒரு தொழிற்கூடம் (Industry) எனப்படும். பல தொழிற்கூடங்கள் சேர்ந்தது ஒரு தொல்லியல் பண்பாடு (Archaeological culture) ஆகும்.