கிரந்தம்

முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை

கிரந்தம் என்பது ஒரு வகை எழுத்து ஆகும். கிரந்தம் என்ற சொல் வடமொழியில் நூல் என்று பொருள்படும். எனவே, நூலை எழுதுவதற்கு அடிப்படையான எழுத்தையும் கிரந்தம் என்றே குறிப்படுகின்றனர். பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் நாட்டில் தமிழில் பழமையான வடிவமான தமிழி எழுத்திலிருந்து வளர்ச்சி பெற்ற எழுத்துக்களான தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் ஒரு சேர கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் தமிழ் மொழியின் ஒலி அல்லாது வடமொழியின் ஒலிவரும் இடங்களிலும் வடமொழிச் சொல்லை எழுத நேர்கின்ற பொழுதும் கிரந்த எழுத்தைத் தமிழ் நாட்டில் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இக்கிரந்த எழுத்தை ஆந்திராவில் சாதவாகனர்களை அடுத்து ஆட்சி செய்த இக்ஷ்வாகு மன்னர்கள் பெருபான்மையாகப் பயன்படுத்துகின்றனர். அவர்களது கல்வெட்டுக்களில் இவ்வெழுத்தைப் பொறித்திருப்பதை நாகர்ஜூனகொண்டா அமராவதி கல்வெட்டுக்களில் காணலாம். இவர்களைத் தொடர்ந்து பல்லவர் இவ்வெழுத்தை அதிக அளவில் கையாண்டுள்ளனர். பொ.ஆ.மூன்றாம் நூற்றாண்டில் வாக்கில் ஆட்சிபுரிந்த பல்லவர்கள் பிராகிருத, சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தி தங்களது செப்பேடுகளை எழுதினர். அம்மொழியை எழுத வளர்ச்சிபெற்ற "தமிழி" (Archaic grantha or Southern variety) மற்றும் "கிரந்த" எழுத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் இவ்வெழுத்து பல்லவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பல்லவர் ஆட்சியில் பிராகிருத மொழி செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. நான்கு, ஐந்தாம் நூற்றாண்டில் சமஸ்கிருத நூல்கள் பல இயற்றபட்டன. இவ்வகையில் பொதுவாகக் காலத்தால் முற்பட்டது துவக்ககாலப் பல்லவ மன்னன் சிம்மவர்மனின் (பொ.ஆ. 295) மஞ்சிக்கல்லுக் கல்வெட்டைக் (குண்டூர், ஆந்திரா) கூறலாம் . அடுத்த நிலையில் சிவஸ்கந்தவர்மனின் மயிதவோலு, கிரஹடகள்ளி (ஆந்திரா) போன்ற செப்பேடுகளைக் கூறலாம். தமிழகத்தில் கிடைத்தனவற்றுள் காலத்தால் முற்பட்ட கிரந்த எழுத்துக்களைச் சிம்மவிஷ்ணுவின்(பொ.ஆ.650) பள்ளன்கோயில் செப்பேட்டிலேயே காணமுடிகிறது. தமிழகத்தில் கிடைக்கும் செப்பேடுகளில் பெரும்பாலும் முதற்பகுதி சமஸ்கிருதத்திலும், பிற்பகுதி தமிழிலுமே உள்ளன என்பதற்குப் பின்வரும் செப்பேடுகளைக் கூறலாம். பள்ளன்கோயில் - சிம்மவிஷ்ணு, கூரம் - பரமேஸ்வரவரமன், காசாக்குடி, தண்டந்தோட்டம், புல்லூர் - நந்திவர்மன், கொற்றங்குடி, வேலூர்பாளையம் - மூன்றாம் நந்திவர்மன் , உன்னக்குரவயம் - முதலாம் பரமேஸ்வரவர்மன்.

பல்லவர் காலம் :

பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆட்சி புரிந்த பல்லவர்களும் தொடர்ந்து கிரந்தத்தைத் தங்கள் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் எழுதியிருக்கின்றனர். செப்புப் பட்டயங்களில் சமஸ்கிருதப் பகுதியை எழுதுகையிலும், குடைவரைக் கோயில்களில் தங்கள் பட்டப் பெயர்களைப் பொறிக்கையிலும் கிரந்த எழுத்தையே கையாண்டுள்ளனர். குறிப்பாகக் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்திலும், மாமல்லபுரத்துக்கு அருகிலுள்ள சாளுவன்குப்பம் அதிரண சண்டேஸ்வர கிருஹத்திலும் கிரந்த எழுத்திலேயே கல்வெட்டுக்களை இராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்மன் பொறித்திருந்தான். கைலாசநாதர் ஆலயத்தில் கிரந்த எழுத்தை மூன்று வடிவில் காணலாம். கொடிகள் வடிவத்திலும், பறவைகள் வடிவத்திலும் மற்றும் தலைக்கட்டுக்களோடு எழுதி "பல்லவ கிரந்தம்" என்ற ஒரு தனி கிரந்த வகையையே பல்லவர்கள் உருவாக்கியிருக்கின்றனர். கிரந்த எழுத்துக்கள் தனிச் செல்வாக்குப் பெற்றிருந்தது பல்லவர் காலத்திலேயே ஆகும்.

பல்லவர்களுக்குப் பிந்தைய காலம் :

முற்காலப் பாண்டியர்கள், முத்தரையர்கள், கொடும்பாளூர் வேளிர், வேணாட்டு வேளிர் ஆகியோரும்கூட கிரந்தத்தைப் பயன்படுத்தியுள்ளனர். முற்காலப் பாண்டியர்களில் மாறவர்மன் அரிகேசரி கலாத்திலேயே கிரந்த எழுத்தைக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தியிருந்ததைப் பார்க்க முடிகிறது.

1. மதுரை வைகைக் கரையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிகேசரியின் கல்வெட்டில் முதற் பகுதி கிரந்த எழுத்திலேயே எழுதப்பெற்றிருக்கிறது.
2. ஜடிலப் பராந்தக நெடுஞ்சடையனின் காலத்திய செப்பேடுகளிலும், அவன் காலத்தில் பொறிக்கப்பெற்ற ஆனைமலை, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களிலுள்ள கல்வெட்டுக்களிலும் கிரந்த எழுத்தைக் காணமுடிகிறது. அவனுக்குப்பின் ஆட்சி செய்த இரண்டாம் இராஜசிம்மனின் சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டிலும், அவனது தம்பியான பராந்தக வீர நாராயணனின் தளவாய்புரச் செப்பேட்டிலும் சமஸ்கிருதப் பகுதியைக் கிரந்த எழுத்திலேயே எழுதி உள்ளனர்.
3. பொ.ஆ. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நாமக்கல் குடைவரைக் கோயிலில் அதிய மன்னன் சோமன் என்பான் தம் கல்வெட்டைக் கிரந்த எழுத்தில் பொறித்திருக்கின்றான்.
4. பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டில் ஆட்சிப்புரிந்த முத்தரைய மன்னன் சுவரன் மாறன் தமது பட்டப் பெயர்களையும், தம் வெற்றிச் சிறப்புகளையும் கிரந்த எழுத்தில் பொறித்திருப்பது செந்தலையில் காணப்பெறும் தூணில் உள்ள கல்வெட்டினால் புலனாகிறது. அதே போன்று சோழர்களுக்கு அடங்கிய குறுநில மன்னர்களாக விளங்கிய கொடும்பாளூர் வேளிரும் தம் கல்வெட்டுக்களில் சிலவற்றைக் கிரந்த எழுத்தில் எழுதியுள்ளனர். குறிப்பாகப் பூதிவிக்கிரம கேசரியின் கொடும்பாளூர் கல்வெட்டை கூறலாம்.
5. பாண்டிய மன்னர்களுள் அடங்கிய சிற்றரசர்களாக விளங்கிய ஆய் மன்னர்களில் சிலரும் தம் காலத்திய செப்புப் பட்டயங்களில் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தினர்.

பாண்டியர் காலம் :

முற்காலப் பாண்டியர்கள், முத்தரையர், கொடும்பாளூர், வேளிர், வேணாட்டு வேளிர் ஆகியோரும் கூட கிரந்தத்தைப் பயன்படுத்துகின்றனர். முற்காலப் பாண்டியர்களில் மாறவர்மன் அரிகேசரி காலத்திலேயே கிரந்த எழுத்தைக் கல்வெட்டுக்களில் காணமுடிகிறது. ஜடிலப்பராந்தக நெடுஞ்சடையனின் காலத்திய செப்பேடுகளிலும் அவன் காலத்திய ஆனைமங்கலம், திருப்பரங்குன்றம் கல்வெட்டுக்களிலும், அவனுக்குப் பின் ஆட்சிசெய்த இரண்டாம் இராஜசிம்மனின் சின்னமனூர் , மற்றும் அதன் வெளியிடப்பெற்ற எல்லா செப்பேடுகளிலும் சமஸ்கிருதப் பகுதி கிரந்த எழுத்திலேயே இடம்பெறுகிறது. சோழர்களை பின்பற்றி பிற்காலப் பாண்டியர்களும் சமஸ்கிருத மொழி கையாளப்படும் இடங்களில் கிரந்த எழுத்தையே பயன்படுத்தியுள்ளனர்.

சோழர் காலம் :

1. விஜயாலயன் முதல் ஆட்சிக்கு வந்த சோழ மன்னர்களின் செப்புப்பட்டயங்களிலும் சமஸ்கிருதப் பகுதியைக் கிரந்த எழுத்திலேயே காணமுடிகிறது.
2. முதலாம் இராஜராஜனின் காலத்திய கல்வெட்டுக்களில் சிலவற்றில் (தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு) முதல் வரி கிரந்த எழுத்திலும், சமஸ்கிருத மொழியிலும் எழுதப்பெற்றிருக்கிறது.
3. சோழ மன்னர்கள் மற்றும் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுக்களிலும் சமஸ்கிருத மொழி கையாளப்படும் இடங்களில் கிரந்த எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. உத்தம சோழன், இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற சோழ மன்னர்கள் தங்கள் காசுகளில் கிரந்த எழுத்தையேப் பொறித்துள்ளனர்.

விஜய நகர காலம் :

விஜயநகர மன்னர்களை அடுத்து ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும் தங்கள் பேரரசர்களான விஜயநகர மன்னர்களைப் பின்பற்றிச் செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும் கிரந்த எழுத்தை வெகுவாகப் பயன்படுத்தினர். இவர்களும் ஆந்திரப் பகுதியிலிருந்து வந்தவர்கள் ஆதலால் சமஸ்கிருத மொழியையும், கிரந்த எழுத்தையும் தொடர்ந்து கையாண்டிருக்கின்றனர்.

கிரந்த எழுத்தின்வளர்ச்சி நிலை :

தமிழகத்தில் வழங்கி வந்த கிரந்த எழுத்தின் வளர்ச்சியை நடனகாசிநான் மூன்று கட்டமாகப் பிரித்து கூறுகிறார்.
1. பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய கிரந்த எழுத்தை பழமையான கிரந்த எழுத்து (Archaic Grantha Script) என்று வழங்குவர். சிலர் இதை பிராமி தெற்கத்திய வகை என்றும் கூறுவர்.
2. பொ.ஆ.7ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ.9ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய கிரந்த எழுத்தைப் பல்லவ கிரந்தம் என்று அழைப்பர். இதை இரண்டாம் கட்ட வளர்ச்சியாகக் கொள்வர். முதற்காலக் கட்டத்திலிருந்தே பல்லவர்களது கிரந்த பொறிப்புக்கள் கிடைக்கின்றன. கிரந்த எழுத்தை முதலில் பயன்படுத்தியதும் இவர்களேயாவர்.
3. பொ.ஆ.10ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை வழங்கிய கிரந்த எழுத்தை மூன்றாம் கட்ட வளர்ச்சி என்று கூறலாம்.