நக்கண்ணையார்

முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை

ஒரு புலவர். பெண்பாலர். பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் எனவும் குறிக்கப் பெறுதலால் உறையூரின்கண் தலைமையுற்றிருந்த மரக்கல வணிகனொருவனின் மகனென்று இவரை அறியலாம். இவ்வூரை ஆண்ட தித்தன் என்பானுக்கு மகனான போர்வைக் கோப்பெருநற் கிள்ளியிடத்தே இவர் ஒருதலைக் காதலுற்றுப் பாடிய பாடல்கள் மூன்று. புறநானூற்றில் (83, 84, 85) இடம்பெற்றுள்ளன. அவனிடத்துக் காதலால் ஏங்கித் தொடிகள் கழலுமாறு தான் உடல் மெலிதலைத் தன் அன்னை காண்பதற்கு அஞ்சியும், அவனுடைய தோள்களைத் தழுவுவதற்கு அவனைச் சார்ந்த அவையோரைக் கண்டு நாணியும் இவருற்ற பெருவிருப்பினை ஒரு பாடலில் (புறம். 83) பொதிந்துரைப்பர், தந்தையொடு வெறுத்து விலகி வந்து. முக்காவல் நாட்டு ஆமூரின்கண் தங்கியிருந்த அவன், வறியனாய்ப் புல்லரிசிக் கூழை உண்டும் வலிய பெருந்தோளனாயிருக்கையில், அவனுடைய சிறைப் புறத்திலேயிருந்து பலகாலும் அவனைக் கண்டும் மெய்யுறப் பெறாத வேட்கையால் வருந்தித், தான் பொன்போற் பசலை பூத்ததை மற்றொரு பாடலில் (புறம். 84) மொழிவர். அவன் ஆமூர் மல்லனொடு பொருத போரில் அவனுக்கு இயல்பாய் வாய்த்த வெற்றியை அவனது வெற்றியாகவே மிகுத்து ஒரு சாரோரும், அவனது வெற்றியன்றொன இழித்து மற்றொரு சாரரும் ஒத்தும் ஒவ்வாமலும் கூறிய நிலையில், இவர் தாமே தம் கண்டு பாடிய பாடலில் (புறம். 85) அவனிடத்தேயமைந்த இவரது ஆதரவு நன்கு வெளிப்படுகிறது.

புறநானூற்றில் அமைந்த இம்மூன்று பாடல்களேயன்றி அகநானூற்றில் 252 ஆம் எண்ணில் அமைந்ததொன்றும், நற்றிணையில், 19,87 ஆகிய அமைந்தனவிரண்டும் ஆக வேறு மூன்று பாடல்களும் இவருடையனவாய் உள்ளன. இவரது அகவாழ்வின் ஆற்றாமை அவ்வகப் பாடல்களின் தலைவி நிலையிலும் இயல்புறப் படிந்துள்ளன. தன்னை அருங்கடிப்படுத்தி இரவெல்லாம் துயில் மறந்து காத்திருக்கும் அன்னைக்கு, மழை நள்ளிரவில் சிறுகரைப் பெருங்குளத்துக் காவலனைத் தலைவி உவமிப்பது (அகம் 252). இவர் பாடலில் அமைந்த நயமான உவமையாகும். ஊரினுள்ளிருக்கும் மாமரத்திலே தொங்கித் துயிலும் வௌவால், சோழர் மரபினனான அழிசியின் ஆர்க்காட்டு நெல்லியம் புளிச்சுவையைக் கனவு காண்பதுபோல் தானும் தலைவன் கூட்டத்தைக் கனவு கண்டு ஏங்கி மொழியும் தலைவியின் கூற்றினை இவர் உணர்வுற வடித்துள்ளார் (நற். 87).

மழை பெய்து கொண்டிருக்கும்போது ஊரின் பெருங்குள ஏரிக் கரையைக் காவல் காப்பவன் போல யாய் தூங்காமல் என்னைப் பாதுகாக்கிறாள். புலிக்கு அஞ்சாமல் திரியும் யானையின் தந்தத்தைப் புய்த்துச் சிலர் எடுக்கும் வழியில் தலைவன் என்னை அடைய வருகிறான். அவன் வரும் வழியை எண்ணித் தலைவி துன்புறுகிறாள். வரவேண்டாம் என்று சொல்லி விட்டுத் தனியே இருக்கவும் அவளால் முடியவில்லை. என்ன செய்யலாம் என்பதே தலைவியின் கவலை. (அகம். 252).

தலைவன் சில நாள் வந்து போகிறான். அவன் வாராமல் போனால் தலைவி உயிர் வாழமாட்டாள். எனவே, திருமணம் செய்து கொண்டு தலைவியைக் காப்பாற்ற வேண்டும் என்று தோழி தலைவிக்கு எடுத்துரைக்கிறாள் போன்ற அகத்தினைப் பாடல்கள் இவருடையவை.

• தடவு என்னும் மரம் இறால் மீனின் செதில்கள் போல் இருக்குமாம்.

• தாழை மரம் சுறா மீனின் கொம்புகள் போல் இருக்குமாம்.

• தாழம் பூ யானைத் தந்தம் போலப் பூக்குமாம் (நற். 19).

என்பன போன்ற உவமைகளால் நக்கண்ணையார் தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் நீடுவாழ்வார்.