பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்

சேய் நன்னன்

முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை

ஒரு குறுநில மன்னன் பல்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்த செங்கண்மா என்ற ஊரின் தலைவனான வேள் நன்னன் என்பானின் மகனாகிய நன்னன் என்று இவன் பெயருக்கு விளக்கம் காணலாம். பல்குன்றக் கோட்டம் என்பது தொண்டை நாட்டின் பல பெரும் பிரிவுகளாகிய 24 கோட்டங்களுள் ஒன்று. குன்றங்களைத் தன்பால் கொண்டிருத்தலின் இப்பெயர் பெற்றது. ‘குன்றுசூழ் இருக்கை நாடுகிழவோனே’ என்ற மலைப்படுகடாம் (583) தொடரும் இதனை வலியுறுத்தும். செங்கணமா என்னும் ஊர் திருவண்ணாமலைக்கு மேற்றிசையில் இக்காலத்துச் செங்கம் எனவும், செங்கமா எனவும், செங்கண்மான் எனவும் வழங்குவதாய் உள்ளது. வேள் என்பதனால் இந்நன்னனது குடிமரபு விளங்கும். தந்தை பெயரே இவனுக்கும் அமைந்தது. இவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கூத்தரை இவனிடத்தே ஆற்றுப்படுத்தி, இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் மலைபடுகடாம் என்ற கூத்தராற்றுப் படையைப் பாடியுள்ளார். புனைந்த மாலையாற் பொலிவு பெற்ற வண்டுகள் மொய்க்கும் மணமிக்க மார்பினையுடையவன், மங்கையின் கணவன், பகைப்புலங்களைப் பாழ்படுக்கும் கிட்டுதற்கரிய வலிமையுடையவன், பரிசிலர்க்கு மென்மையமைந்தவன். தனது அறிவின் ஆக்கத்திற்கு மாறாகிய கேட்டினை நினையாது ஆக்கத்தினையே உணரும் நினைவினையுடையவன், விற்றொழிலிலே பயின்ற பெரிய கையினையும், பேரணிகலன்களையும் உடையவன், பகைவரைப் பொறாமல் போரிடுகின்ற போரினையும் வெற்றியுண்டாக்கும் வலிய முயற்சியினையும், மானத்தையும், வெற்றியினையுடைய வேள், போரைச் செய்கின்ற வலியமைந்த தலைவன் திருந்தும் வேலினையுடைய அண்ணல், பலவாய் மாட்சிமைப்பட்ட வஞ்சி முதலிய போர்த்தொழில் மிக்க நடத்தலால் உலகம் புகழும் திருமகள் நிறைந்த மார்பினன், தேன் சொரிகின்ற கண்ணி அணிந்தவன், தேர்களை வழங்கும், கொடுத்துக் சிவந்த கைகளையுடையவன், தனக்கென்று ஒரு பொருளையும் ஒம்பாத வள்ளல் தன்னை வணங்காதாரை அழித்தவன், தாழ்ச்சியில்லாதவன்.

பகைவரையாளும் ஆண்மையன் கற்பினுக்கு அடையாளமாக உயர்த்திய கொடியினையுடையோள் கணவன், வண்டுகள் படியும்படி மணங்கமழும், தேன்சொரியும் கண்ணியினையும், திண்ணிய தேரினையும் உடையன். வெல்லும் போரை வல்ல முருகனைப் போலும் பெரிய வெற்றியமைந்தவன். வஞ்சினங்களில் குறையாத நற்புகழிலே நடந்தோர் வழி வந்தவன்.