நெடும்பல்லியத்தன்

முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை

சங்ககாலத்தே திகழ்ந்த பெண்பாற் புலவர்களுள் இவர் ஒருவர் நெடும்பல்லியத்தனார் என்னும் புலவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும் (64), குறுந்தொகையில் ஒன்றும் கிடைத்துள்ளன. நெடும்பல்லியத்தை இவர் தம் உடன் பிறந்தவரோ என்று ஊகிக்கப்படுவதாக டாக்டர் உ.வே.சா தம் குறுந்தொகை பாடினோர் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். பல்லியம் என்பது பல வாத்தியங்களைக் குறிக்கும். நெடிய பல வாத்தியங்களை உடைமையின் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம். நெடும்பல்லியத்தனார் என்ற பெயரும் இக்காரணம் குறித்து எழுந்ததாகக் கருதலாம். ‘நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி’ என்று நெடும்பல்லியத்தனார் தம் பெயருக்கேற்ப புறநானூற்றுப் பாடலில் (64) கூறியிருத்தல் நோக்கத்தக்கதாகும்.

குறுந்தொகை 203 ஆம் பாடல் ஆசிரியர் நெடும்பல்லியத்தன் என்று காணப்படினும் பாட வேறுபாடாக நெடும்பல்லியத்தை என்ற பெயரும் உண்டு. ஆகவே இவர் குறுந்தொகையில் பாடியனவாக இரண்டு பாடல்களைக் (178, 203) கருதலாம். 178 ஆம் பாடல் கடிநகர் புக்க தோழி தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர் களவுக் காலத்து ஒழுகலாற்றை நினைந்து அழிந்து கூறியது என்னும் துறையிலும், 203 ஆம் பாடல் வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது என்னும் துறையிலும் அமைந்துள்ளன. தலைவனின் களவுக் காலத்துக் காம நிலையை ‘ஆம்பல் குறுநர்நீர் வேட்டாங்கு இவள் இடைமுலைக் கிடந்தும் நடுங்கலானீர்’ எனத் தோழி ஏற்ற உவமையுடன் சுட்டிக் காட்டுவது நயம் பயப்பதாகும். தலைவி தலைவனுக்குக் களவுக் காலத்தில் அரியளாய்த் தோன்றியதற்கு மூன்றாம் பிறைத் திங்கள் கண்டு தொழுவோர்க்கு அரியதாதலை உவமையாக்கியும் (178) தலைவியின் கற்புத் தூய்மை கண்டு பரத்தமைத் தலைவன் நீங்கி ஒழுகுவதற்கு முனிவரது தூய்மையைக் கண்டு தூய்மையிலாதார் அஞ்சி விலகிச் செல்வதை உவமையாக்கியும் (203) பாடியிருத்தல் நூனயம் தருவதாகும்.