பாரதம் பாடிய பெருந்தேவனார்

முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை

ஒரு புலவர். பெருந்தேவனார் என்பது இவர் இயற்பெயர். பெருந்தேவனார் என்ற பெயருடைய பிறபுலவர்களினின்றும் வேறானவர் என்று அறிய, பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பட்டார். தொகை நூல்களின் உள்ளே பெருந்தேவனார் பாடிய பாடல் ஒன்று கூட இல்லை. ஆதலாலும், அந்நூல்களின் கடவுள் வாழ்த்தை மட்டும் இவர் பாடினார். ஆதலாலும் இவரைப் பாயிரம் பாடிய பெருந்தேவனார் என்று அழைப்பதே பொருத்தம் என்பர் டாக்டர் மொ.அ.துரை அரங்கசாமி. பல்லவர் காலத்தில் இருந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் இவருக்கு முற்றிலும் வேறானவர். பிற்காலத்தில் இவர் இருவரையும் ஒருவராகக் கருதி குழப்பமுற்றுப் பாயிரம் பாடிய பெருந்தேவனார் என்று திருத்திவிட்டனர் என்றும் அவர் விளக்கம் தருகிறார்.

வியாச பாரதத்தை வெண்பாவும் அகவலும் உரைநடையும் விரவிவரப் பாடி வெளியிட்டமையால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பெற்றார். இவர் பிறந்தது தொண்டை நாடு எனத் தொண்டை மண்டல சதகத்தால் அறிகிறோம். இப்பொழுது அச்சிட்டு வழங்கும் பாரத வெண்பாவில் முதலில் விநாயக வணக்கமும், அடுத்து தெள்ளாற்றில் போர் வென்ற அரசன் சிறப்பும் கூறுவது காரணமாகப் படிக்காசுப் புலவர் இவரைத் தொண்டை மண்டலத்தார் என்று எழுதி வைத்தார். தெள்ளாற்றில் போர் வென்ற நிகழ்ச்சி கடைச் சங்கம் அழிந்த பல்லாண்டுகளுக்குப் பின்னரே ஆகும். ஆதலின் இப்பிற்காலப் பாரத நூலுக்கு வேறாகச் சங்ககாலத்தில் தோன்றிய பாரத நூல் ஒன்று இருந்திருத்தல் வேண்டும். நச்சினார்க்கினியராலும், தொல்காப்பியத்தின் பிற உரையாசிரியர்களாலும் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்ட பாரத நூற் செய்யுள்கள் முற்காலத்தனவாகலாம். பாண்டியர்களின் வேள்விக்குடிச் சாசனம், தமிழ்ச் சங்கம் நிறுவிய சில ஆண்டுகளுக்குப் பின் வந்த பாண்டிய மன்னன் ஒருவன் பெருமுயற்சியால் பாரதம் தமிழில் ஆக்கப்பட்டது என்று கூறுகின்றது. எனவே இந்நூல் சங்ககாலத்தின் முடிவில் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர். இவர் பாடியவை ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய ஐந்து தொகை நூல்களிலுமுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள் ஆகும். இவற்றுள் புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய மூன்றிலே சிவபெருமானையும், குறுந்தொகையில் செவ்வேளையும், நற்றிணையில் திருமாலையும் இவர் வாழ்த்தியுள்ளார். எல்லா உயிர்க்கும் ஏமமாகிய நீர் தொலைவறியாத கரகத்தாலும் தாழ்ந்த திருச்சடையாலும் சிறந்த செயற்கருந்தவத்தோன் என்றும், யாழிசையுடன் பொருந்திய மணிமிடற்றினையுடைய அந்தணர் என்றும், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் என்றும் சிவனைக் குறித்து, அவன் தாள் நிழலில் மூவகையுலகும் முறையே முகிழ்த்தன என்றும் தங்கின என்றும் கூறி, அப்பெரியோனை மனம், மொழி மெய்களான் வணங்குதற் கருத்தாக இவர் வாழ்த்தியுள்ளார்.