தும்பிசேர் கீரனார்

முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை


தும்பிசேர் கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாக 7 பாடல்கள் உள்ளன. அவை குறுந்தொகை 61, 315, 316, 320, 392, நற்றிணை 277, புறநானூறு 249 ஆகியவை ஆகும்.

இந்தப் புலவர் கீரனார் தம் பாடல் ஒன்றில் (குறுந்தொகை 392) ‘மனிச்சிறைத் தும்பி’ பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பாடலில் (நற்றிணை 277) தும்பி தனக்குத் தூது சொல்லவில்லை என்று தலைவி தும்பியைத் திட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கீரனார் என்னும் பெயர் கொண்ட புலவர் பலருள் இவரை வேறுபடுத்திக் காட்ட எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்த பெருமக்கள் இவருக்குத் ‘தும்பிசேர்’ என்னும் அடைமொழியைச் சேர்த்துப் பெயரிட்டுள்ளனர்.

தச்சன் சிறுவர்கள் விளையாட வண்டி செய்து தருவான். சிறுவர்கள் அதில் ஏறிச் சென்று இன்பம் காண்பதில்லை. இழுத்துச் சென்று இன்பம் காண்பர். தலைவன் பரத்தையோடு வாழ்கிறான். அக்காலத்தில் தலைவனைத் தழுவித் தலைவி இன்புறுவதில்லை என்றாலும் தன் தலைவன் இருக்கிறான் என்று எண்ணி எண்ணி இன்பம் துய்க்கிறாளாம். அதனால் அவள் கையிலுள்ள வளையல்கள் கழலவில்லை. அவளது கையில் செறித்துள்ளனவாம்.

தலைவன் கடலில் தோன்றும் நிலா வெளிச்சம் போல் அருவி ஒழுகும் மலைநாட்டுப் பெருமகனாம். அவன் ஞாயிறு போன்றவனாம். அவனுக்குத் தலைவியின் தோள் வெயிலில் கிடக்கும் நெருஞ்சி முள் போல் ஆயிற்றாம். திருமண நாள் தள்ளிப் போன போது தலைவி இவ்வாறு சொல்கிறாள்.

தலைவிக்குத் தலைவனோடு உள்ள உறவு அன்னைக்குத் தெரியவந்தால் தான் உயர் வாழ இயலாது என்று தலைவி சொல்கிறாள். மகளிர் தம் தோழிமாரோடு ஓரை விளையாடுவர். அப்போது ஓராங்கு காட்டி நண்டோடும் விளையாடுவர்.

பரதவர் இறால் மீனைப் பிடித்து வந்து மணல் பரப்பில் காயவைப்பர், அது மணலெல்லாம் நாறும். அதுபோல நெய்தல் நிலத் தலைவனோடு நெய்தல் நிலத் தலைவிக்கு உள்ள உறவு சேரியெல்லாம் நாறுகிறதாம். இறால் நாற்றத்தைப் பலரும் விரும்புவது போல ஊரார் அலர் தூற்றுவதைத் தலைவி எண்ணி எண்ணி மகிழ்கிறாளாம் என்பன போன்ற கருத்துகள் குறுந்தொகையில் காணப்படுகின்றன.

நற்றிணை சொல்லும் செய்தி

தும்பியே! நீ கொடியை வேலியில் படர்ந்திருக்கும் பீர்க்கம் பூவில் தேன் உண்கிறாய். அந்தப் பீர்க்கம் பூவைப் போலவே என் மேனியில் அவர் பிரிவால் பூத்துக் கிடக்கும் பசலைப் பூவில் உட்காரவும் மறுக்கிறாய். அதனால் நீ அறன் இல்லோய். அன்றியும் என்னைப் பிரிந்திருக்கும் அவரிடம் சென்று என் நிலைமை பற்றி எடுத்துச் சொல்லாமலும் இருக்கிறாய். இது அறம் அன்று என்கிறாள் தலைவி. (நற்றினை)

புறநானூறு வழி மீனவர் வாழ்க்கையைக் கீழ்க்காணுமாறு பதிவு செய்கிறார்.

• ஆரல் – கதிர் போன்ற மூக்கினைக் கொண்டது. சேற்றுக்குக் கீழ்ப் பதுங்கி வாழும்.

• வாளை – பருத்த கொம்பு போல் இருக்கும். நீரின் மேல் பரப்பில் மேயும்.

• ஆமை – தடாரிப் பறை போல் மிதந்து மேயும்.

• வரால் – பனங்குருத்து போல் இருக்கும்.

கணவனோடு வாழ்ந்தபோது அவள் இவற்றின் கறியோடு புகா என்றும் அரசியால் சமைத்த வெண்பொங்கலையும் சேர்த்து விருந்தூட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தாள்.

கணவன் உயர்நிலை உலகம் எய்தினான். மனைவி முறம் அளவுப் பரப்புள்ள நிலத்தை மெழுகினாள். அழும் கண்ணீரால் அதனை மெழுகினாள். (அந்தத் தரையில் தான் உண்ணும் உணவைப் போட்டுத் தன் கணவனுக்குப் படைத்துவிட்டு அவள் உண்பாள்) எனக் கணவனை இழந்தப் பெண்ணின் துயரினைப் புறநானூறு வழி தும்பிசேர் கீரனார் எடுத்துரைப்பது சிறப்பு.