ஆண்டாள்

முனைவர் இரா.மாதவி
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

பாண்டி நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் விட்டுணு சித்தர் என்ற பெரியாழ்வார் தாம் செய்து வந்த திருமாலைப் பெரும்பணிக்காக நந்தவனத்திலே திருத்துழாயடியில் மண்வெட்டிக்கொண்டு கொத்தியபோது, பெண்குழந்தையை கண்டெடுத்ததால் ஆடிப்பூரத்தில் கண்டெடுத்த அக்குழந்தைக்கு கோதை எனப் பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை வளர்ந்து கன்னியான போது இறைப் பக்தி மிகுந்து அரங்கனை ஆராதித்து அவனை நாயகனாக அடைந்துய்ய வேண்டும் என விரும்பினார். கட்டிய மாலைகளை தந்தை இல்லாத சமயத்தில் கோதை தானே அணிந்து கொண்டு அழகு பார்ப்பது வழக்கம். மீண்டும் அம்மாலைகளைக் குடலையுள் வைத்து விடுவாள். ஒருநாள் வெளியில் சென்ற பெரியாழ்வார் விரைவில் வீட்டிற்கு வந்தபோது மலர்மாலையைக் கோதை சூடியிருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். அன்று இறைவனுக்கு அவர் மாலை அணிவிக்கவில்லை. அன்று நள்ளிரவில் இறைவன் ஆழ்வாரது கனவில் தோன்றி “அவள் சூடிக்கொடுத்த மாலையே நம் உள்ளத்திற்கு விருப்பமானது” என்று அருளினான். கோதையின் பெருமையை உணர்ந்த ஆழ்வார் அவளுக்கு ‘ஆண்டாள்’ என்றும் “சூடிக்கொடுத்த நாச்சியார்” என்றும் பெயரிட்டு அழைத்து வந்தார்.

பெரியாழ்வார் ஆண்டாளது மணவினையைப் பற்றிப் பேசியபோது ஆண்டாள் “மானிடர்க்கொன்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்றும் “யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன்” என்றும் கூறிவிட்டாள்.

ஆயர்பாடியில் வாழ்ந்த ஆயர்குலப் பெண்கள் மார்கழித் திங்களில் நோன்பு நோற்றுக் கண்ணபெருமானை அடைந்து இன்புற்றதைப் போலவே ஆண்டாளும் தம்மை ஆயர் குலப் பெண்ணாகவே பாவித்து நோன்பு நோற்று இறைவன் மீது கொண்டுள்ள அளவு கடந்த பக்திப் பெருக்கால் அவர் திருப்பாவைப் பாடல்களைப் பாடியருளினார். “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்” எனக் கூறி இளம் பெண்களை நீராட எழுப்பி “நாராயணனே நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரம்பாவாய்“ என்று அறிவிக்கிறார். அவர் அருளிய 30 பாடல்கள் கொண்ட திருப்பாவை வைகறையில் இசையுடன் பாடுவதற்குரிய தெள்ளுதமிழிப் பாடல்களாகும். அவர் அருளிய முதல் ஆறுபாடல்கள் உலகியல் பண்புகளை உணர்த்தும் பாடல்களாக அமைந்துள்ளன. 6 முதல் 15 வரையிலான பாசுரங்கள் மறந்து உறங்கும் பெண்களைத் தட்டி எழுப்பி அவர்களுக்குக் கண்ணபெருமானின் அரிய பண்புகளைக் கூறும் வகையில் அமைந்துள்ளன. 16 முதல் 30 பாசுரங்களில் இறைவனின் திருவருளாகிய பறையைப் பெற அவர் வேண்டுகிறார்.

 

கண்ணனை அடைய வேண்டும் என விரும்பிய ஆண்டாள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு நோற்றாள். கண்ணன் வரவில்லை. மன்மதனின் உதவியை நாடுகிறாள். “காமனே வேங்கடவற்கு என்று என்னை விதி” என்று கேட்கிறாள். ஆண்டாள் அருளிச் செய்த “நாச்சியார் திருமொழியில்” இப்பாடல்களையெல்லாம் காணலாம். வெண்சங்கைப் பார்த்து “வெண்சங்கே பாஞ்ச சன்னியமே! நீ பெற்ற பேறே பேறு” எனக் கூறி பின்வருமாறு பாடுகிறாள்.

“கற்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய் தான்
தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன்
வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி வெண்சங்கே”

ஆண்டாளின் துன்பமெல்லாம் தீரும் வகையில் கண்ணபிரான் அவளுக்குக் காட்சி அளித்து அவளை ஆட்கொண்டாள். அதனை அவள் “விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே” என்று பாடி அகமகிழ்வெய்துகிறாள். கண்ணபிரான் மீது ஆண்டாள் காதலாகிக் கசிந்துருகிப் பாடிய தெய்வமணம் கமழும் தீந்தமிழ்ப் பாடல்கள் எல்லாம் நாச்சியார் திருமொழியில் காணக்கிடைக்கின்றன.