பெங்களூர் நாகரத்தினம்மாள்


முனைவர் செ.கற்பகம்
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

பழங்காலத்திலிருந்து தற்காலம் வரை பெண்கள் இசைத் துறையில் புலமை பெற்றவர்களாகவும் சிறந்த பங்கினை ஆற்றி வருபவர்களாகவும் இருந்துள்ளனர். சிறந்த கலைஞர்களாகவும், படைப்பாளர்களாகவும், தியாகச்சீலர்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களில் குறிப்பாக தேவதாசி குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் பலர் இசையிலும் நாட்டியத்திலும் செய்த பணிகள் சிறப்பானவை. இவர்களில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராசரின் சீடராக வாழ்ந்தவர் பெங்களூர் நாகரத்தினம்மாள் ஆவார்.

பிறப்பு :

பெங்களூர் நாகரத்தினம்மாள் 1878 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி வழக்குரைஞர் சுப்பராவ் மற்றும் புத்துலட்சுமி அம்மாளுக்கு மகளாகப் பெங்களூரில் பிறந்தார். இவரது தாய் சிறந்த இசைப் பாடகியாவார். இவர் தேவதாசி குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது முன்னோர்கள் மைசூர் அரண்மனையில் கலைஞர்களாக விளங்கினர்.

கலைகள் பயிற்சி் :
பெங்களூர் நாகரத்தினம்மாள்

நாகரத்தினம்மாள் மைசூர் அரண்மனையில் இசைக்கலைஞராக இருந்த கிரிபத்த தம்மையாவிடம் இசைப் பயிற்சியையும், சமசுகிருதப் பயிற்சியையும் பெற்றார். வயலின் கலையை மைசூர் அவையில் வயலின் கலைஞராக விளங்கிய தம் மாமாவான வெங்கடசாமியிடம் பயின்றார். மேலும், முனுசாமி அப்பாவிடமும், கிருஷ்ணசுவாமி பாகவதரிடம் இசையும், வயலினும் கற்றார். சிறந்த கலைஞராக விளங்கினார்.

நாட்டியக் கலையைப் பெங்களூர் கிட்டண்ணாவிடம் பயின்றார். மேலும், சென்னை வெங்கடாசாரியிடம் அபிநயப் பயிற்சியையும் பெற்றார்.

இவர் தமது 15 வது வயதில் வீணை சேஷண்ணா இல்லத்தில் முதல் இசை நிகழ்ச்சியை வழங்கினார். இவரது இசைக்குப் பிடாரம் கிருஷ்ணப்பா மிகவும் ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தார். சிறந்த இசைப்பாடகியாக இவர் வெளிவரக் காரணமாகினார். நாகரத்தினம்மாள் மென்மையான குரலுடையவர். சிறந்த இசைப் பின்னணி உடையவர். இவற்றால் இசை உலகில் மிக உயர்வான நிலையை அடைந்தார். இவர் எந்நேரமும் தியாகராசரின் கீர்த்தனைகளைப் பாடிய வண்ணமே இருந்தார்.

நாகரத்தினம்மாள் எதுகுலகாம்போதி இராகம் பாடுவதில் வல்லவர். எல்லா அரங்கிலும் இவரின் எதுகுலகாம்போதியும், தியாகராசரின் எதுகுலகாம்போதி இராகக் கீர்த்தனையான “ஸ்ரீ இராமஜெயராமா” என்ற கீர்த்தனையும் ஒலித்த வண்ணம் இருக்கும்.

இவர் தமது ஒன்பது வயதிலேயே இசையிலும், நாட்டியத்திலும், வடமொழியிலும் சிறந்த புலமை பெற்றிருந்தார்.

நூலாசிரியர் :

இவர் தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழிகளை அறிந்தவர். இவர் “மத்யா பானம்” என்னும் தெலுங்கு மொழி நூலையும், சமசுகிருதத்தில் “ஸ்ரீதியாகராஜ அஷ்டோத்திட நாமாவளி” என்ற நூலினையும், தமிழில் “பஞ்சகீரண பௌதீக” என்ற நூலினையும் வெளியிட்டுள்ளார். மேலும், 18 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த முத்துப்பழனி என்பவரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட “இராதிகாஸ்வயம் வரம்” என்ற நூலை 1947 மற்றும் 1952 ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளார்.

கதாகாலட்சேபக் கலைஞர் :

இவர் இசையோடுக்கூடிய கதாகாலட்சேபம் செய்வதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் மட்டும் கதாகாலட்சேபம் செய்த நிலை இருந்தது. அதனை மாற்றி முதன்முதலாகப் பெண் கதாகாலட்சேபக் கலைஞராக இவர் திகழ்ந்தார். இவரது தாயும் சிறந்த கதாகாலட்சேபக் கலைஞராவார். இவரின் இசைப் பயணத்திற்கு மைசூர் மகாராசா ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தார். சென்னை மக்களாலும் இவர் பெரிதும் ஆதரிக்கப் பெற்றார். வீணைதனம்மாள், ஏனாதி லட்சுமி நாராயணி, கோயம்புத்தூர் தாயி, பெங்களூர் தாயி, திருவாரூர் இராஜாயி போன்ற கலைஞர்களுடன் ஒப்பிட்டுக்கூறும் அளவிற்கு இசையுலகில் சிறந்த விற்பன்னராகத் திகழ்ந்தார். இசை உலககத்தார் இவரை பி.என்.ஆர் என்று அழைத்தனர்.

இவர் தமிழ்நாடு, ஆந்திரா முழுவதும் பயணம் செய்து சுமார் 1235 இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். 1929 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற “சநாதன தர்ம மாநாட்டில்” இவர் இசை நிகழ்ச்சியை வழங்கினார். இங்கு இவர் சமசுகிருதப் பாடல்களை மொழி சுத்தத்துடன் பாடி, அனைவரின் பாராட்டினையும் பெற்றார்.

தியாகராசர் சமாதி கண்டெடுப்பு :

நாகரத்தினம்மாள் 1920 ஆம் ஆண்டு காவிரி பாயும் திருவையாறு தலத்திற்கு வந்தார். அப்பொழுது தியாகராசரின் சமாதி இடம் வெறும் பிருந்தாவனமாகவே காட்சித் தந்தது. நாகரத்தினம்மாள் தியாகராசரின் சமாதியைக் காணாது வருந்தியபோது, தியாகராசர் இவரது கனவில் தோன்றி தமது சமாதி உள்ள இடத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் சமாதியை நினைவாலயமாகக் கட்டினார். 1925 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி தியாகராசரின் சமாதி ஆலத்திற்குத் திருக்குட முழக்குச் செய்தார். சமாதிக்குரிய இடத்தைத் திருவாளர்கள் மன்னா சாகேப் மற்றும் இராஜாராம் போன்றவர்களிடம் இருந்து பெற்றார். தியாகராசரின் சமாதியைச் சுற்றிலும் மண்டபம் கட்டினார். அங்கு தியாகராசரின் பாடல்களைக் கல்வெட்டுக்களில் வடித்தார். இவை இன்றும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவரின் பாடல்களை உலகோர் அறியும் வண்ணம் செய்தார்.

தியாகராசர் ஆராதனை நிகழ்வு :

திருவையாற்றில் தியாகராசர் மறைவுற்ற பகுலிபஞ்சமி நாளன்று குருநாள் நினைவு நாள் வழிபாடு நடத்தப் பெற்று வந்தது. அக்காலத்தில் இசைக் கலைஞர்கள் சின்ன கட்சி, பெரிய கட்சி என்ற இரு பிரிவுகளாக இருந்து இவ்விழாவை நடத்தி வந்தனர். அம்மையார் பெரிய கட்சியுடன் இணைந்து தியாகராச ஆராதனை நிகழ்வை 5 நாள் விழாவாக நடத்தினார். இந்நிகழ்விற்காகத் தான் தேடிவைத்திருந்த செல்வங்களைச் செலவழித்தார். குரு தியாகராசர் நினைவோடு வாழ்ந்து வந்தார். பெங்களூர் அம்மையார் திருவையாற்றிலேயே தங்கினார்.

நாகரத்தினம்மாள் தமது இறுதிக் காலத்தைத் திருவையாற்றிலேயே கழித்தார். தியாகராசரின் பாடல்களைப் பாடுவதே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்த இவர் 1952 ஆம் ஆண்டு தமது 74வது வயதில் காலமானார். தமது கடைசி ஆசையாகத் தன்னுடைய சமாதியைத் தியாகராசரின் சமாதிக்கு எதிரில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று திருவையாற்றில் தியாகராசரின் சமாதிக்க நேரெதிரில் இவரின் சமாதி உள்ளது. தியாகராசரின் ஆராதனையின் பொழுது இவருக்கு இன்றும் ஆராதனை செய்யப்படுகின்றது.

பெற்ற விருதுகள் :

இவர் தம் வாழ்நாளில் விருதுகள் பலவற்றைப் பெற்றார். 1932 ஆம் ஆண்டு “வித்யா சுந்தரி” விருதினையும், 1949 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இவருக்கு “தியாக சேவ கத்தா” விருதினையும் வழங்கி கௌரவித்தார்.

கலைஞர்கள் இசையின் மூலம் சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் தொண்டாற்றினர். இவர்களில் நாகரத்தினம்மாள் “தியாகராசரின் தாசி” எனத் தன்னை அழைத்துக்கொண்டார். இதனை மையமிட்டுத் தற்பொழுது “தியாகராசரும் தேவதாசியும்” என்ற ஆங்கில நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, “தேவதாசியும் மகானும்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

நாகரத்தினம் அவர்களின் வாழ்க்கையில் முற்பகுதியை இசைக்காகவும், பிற்பகுதியைத் தியாகராசரின் புகழ் பரப்பிற்காகவும் செலவிட்டார். இவர் ஆரம்பித்து வைத்த ஆராதனை விழா நிகழ்வு திருவையாற்றில் மிகச்சிறப்போடு இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. மிகச்சிறந்த இசையஞ்சலி விழாவாக அமைந்து விளங்குகிறது. பல நூறு இசைக் கலைஞர்கள் இச்சமாதியின் முன்பு இசையஞ்சலி செலுத்தி வருகின்றனர். குருவிற்குச் செய்யும் சிறப்பு விழாவாக நடந்து வருகிறது. பல்லாயிரம் சுவைஞர்கள் போற்றிவரும் மிகச்சிறந்த விழாவாக நடந்து வருகிறது. நேரில் கண்டு களிப்போர் பலர். தொலைக்காட்சி செய்தித்தாள்கள் வழி அறிந்து மகிழ்ந்து வருவோர் பலர். உலகில் தலை சிறந்த இசை விழாவாக நடந்து வருகிறது. இத்தகு விழாவை நடத்திய மங்கையர் மாணிக்கம் பெங்களூர் நாகரத்தினம் அம்மாள் பணியை இசை உலகம் நன்றியோடு வணங்கி மகிழ்கிறது.