இராமநாடகக் கீர்த்தனை


முனைவர் இ.அங்கயற்கண்ணி
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இசைத்துறை

அறிமுகம்:

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீர்காழி அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெருவழக்கில் இருந்த இராம நாடகக் கீர்த்தனை, தமிழில் இராம காதையைக் கீர்த்தனை வடிவில் அமைப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முதல் முயற்சியாகும். அக்காலத்தில் தமிழ் நாடெங்கும் நடைபெற்று வந்த கூத்துக்கும் நாடகத்துக்கும் ஏற்ற முறையில் பாமர மக்களும் பார்த்து கேட்டு, சுவைப்பதற்கென்று எழுதப்பட்ட முதல் நூலாகும்.

அமைப்பு:

கம்ப இராமாயணத்தைப் பின்பற்றியே அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனையும் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்றவாறு ஆறு பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது.

இராம நாடகக் கீர்த்தனையில் தோடயம், தரு, திபதை என்றவாறு இசைப்பாடல் வகைகள் மொத்தமாக 258 காணப்படுகின்றன.

இயற்றமிழ் யாப்பு வகைகளாக விருத்தங்கள் 268, கொச்சகம் 6, வெண்பா 2 , கலித்துறை 1, என்றவாறு இதில் இடம் பெறுகின்றன. வசனப் பகுதி இல்லை.

விருத்தம் முதலான பகுதிகள் இராம நாடகக் கீர்த்தனையின் ஆசிரியர் கூற்றாக வருகின்றன. இவை கதையின் தொடர்பினைக் காட்டும் பகுதிகளாகும். தரு என்ற கீர்த்தனைப் பகுதி முழுமையும் கதாபாத்திரங்கள் பேசிப் பாடி ஆடுகின்ற பகுதிகளாக அமைந்துள்ளன.

இடம்பெறும் இராகங்கள்:

இராம நாடகக் கீர்த்தனையில் 40 இராகங்கள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் அசாவேரி, கல்யாணி, சாவேரி, தோடி, மத்தியமாவதி, மோகனம் ஆகிய இராகங்கள் ஒவ்வொன்றும் 15 முதல் 20 பாடல்களில் வருகின்றன. ஆனந்த பைரவி, சங்கரா பரணம், சௌராஷ்ட்ரம், புன்னாகவராளி, பைரவி போன்ற இராகங்கள் ஒவ்வொன்றும் 11 முதல் 13 பாடல்கள் வரை வருகின்றன. கமாசு, காபி, சயிந்தவி, நாட்டைக் குறிஞ்சி, நாட்டை, பரசு, பிலகரி, மங்கள கௌசிகம், துஜாவந்தி ஆகிய இராகங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

தாளங்கள்:

ஆதிதாளம், அடதாளசாப்பு, ரூபக சாபு, ஜம்பை ஆகிய தாளங்களில் இராம நாடகக் கீர்த்தனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 146 பாடல்கள் ஆதி தாளத்திலும், 78 பாடல்கள் அடதாள சாபு தாளத்திலும், மற்றவை ரூபகம், ஜம்பை முதலானதாளங்களிலும் அமைந்துள்ளன.

இராம நாடகக் கீர்த்தனையில் வரும் மங்களம் பாடல் மிகவும் பிரபலமானது. மத்தியமாவதி இராகம். ஆதி தாளத்தில் அமைந்த “ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம் - நல்ல திவ்விய முகச் சந்திரனுக்குச் சுபமங்களம்” என்ற மங்களப் பாடல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி வரை இசைக் கலைஞர்கள் தங்கள் கச்சேரியின் இறுதியில் விரும்பிப் பாடக்கூடிய பாடலாகவே இருந்துள்ளது..

கீர்த்தனை:

இசை நாடகங்களில் இடம் பெறும் இசை வடிவங்களுள் கீர்த்தனையே மிக முக்கியமானது. இறைவனையும், இறைத்தன்மை பெற்ற மேலோர்களையும் பற்றி அவர்தம் சிறப்புக்களை விரித்துப் புகழ்ந்து பாடும் இசைப்பாட்டு கீர்த்தனை எனப்படும். (கீர்த்தி = மிகு புகழ். அப்புகழை உடையது கீர்த்தனை) திருப்புகழ் என்பதன் அடி நிலையில் கீர்த்தனை என்ற இசை வடிவம் வந்ததாகவும் கருதலாம்.

தெய்வங்களின் திருநாமங்களை மட்டும் வரிசைப்படுத்திப் பாடும் பாடல் ‘நாம சங்கீர்த்தனம்’ எனப்படும். இதனை நாமாவளி என்றும் கூறுவர்.

பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் உறுப்புக்களை உடையது. பல்லவியை எடுப்பு என்றும், அநுபல்லவியைத் தொடுப்பு என்றும், சரணத்தை முடிப்பு என்றும் கூறுவர். ஒரு கருத்தின் முடிந்த முடிவைச் சுருக்கி முன் மொழிவது பல்லவி. அதற்கு விளக்கம் தருவது அநுபல்லவி , அதன் காரணத்தை விளக்கி வருணிப்பது சரணம்.
எதுகை, மோனை, இயைபு ஆகிய யாப்பு அணிகள் கீர்த்தனைகளில் சிறப்பாக இடம்பெறும்.

சான்று : பல்லவி : ஆடிக் கொண்டா ரந்த ……….
அநுபல்ல்வி : நாடித் துதிப்பவர் …………....
சரணம் : ஆர நவமணி மாலைகள் ஆட …………

இதில் பல்லவிக்கும் அநுபல்லவிக்கும் இடையே மோனை உள்ளது. பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையே எதுகை காணப்படுகிறது.
கீர்த்தனையின் இசை மிகவும் எளிமையாக அமைந்திருக்கும் சொற்கள் நிறைந்து காணப்படும். ஆதிதாளம், ரூபகதாளம், திச்ர நடை ஆகிய தாளங்களில் கீர்த்தனைகள் இருக்கும்.

தோடயம்:

தொடக்க இசைப்பாடல் என்பது இதன் பொருள். அஃதாவது கடவுள் வணக்கப் பாடலாகும். இராம நாடகக் கீர்த்தனையில் நான்கடி கொண்ட ஆறு தனிப்பாடல்கள் கொண்ட அமைப்பினை உடையது. ஒவ்வொரு பாடலின் இறுதியும் ஜய ஜயா என்ற சொல்லுடன் நிறைவடைகிறது. இப்பாடல்களில் முறையே விநாயகர், சரசுவதி, ஆழ்வார் பதின்மர், மணவாள மாமுனி, அநுமன், கருடன், சேனையர்கோன், வேதாந்ததேசிகர், இராமானுஜர், பஞ்சாயுதங்கள் ஆகியோருக்கு வணக்கம் கூறுவதாக அமைந்துள்ளன.

சான்று: நாட்டை இராகம் - ஆதிதாளம்
“எவரும் வணங்கிய ரகுராமன் எதுவும் நினைத்தது தரு ராமன்”
ரவிகுல சுந்தர ஜய ராமன் - நாடகத்தைச் சொலவே
கவளநெடுங் கரதலசாமி - கமல திரியம்பகம் உளசாமி
பவனிவரும் கசமுகசாமி - பாதபற்பந் துணையே.

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம், அரங்கேற்று காதையில் காப்பியத் தலைவி மாதவியின் அரங்கேற்றத்தின்போது, “நன்மையுண்டாகவும் தீமை நீங்கவும் தெய்வத்தை வேண்டிப் பாடும் தேவபாணி என்னும் ஒருவகைப் பாடலைப் பாடிய தோரிய மடந்தையர் என்பவரின் வழிவந்த இசை மரபு “தோரியம்” என்றும், அதுவே பிற்காலத்தில் திரிந்து “தோடயம்” என்றாயிற்று என்றும் கூறுவர்.

பெரும்பாலும் இசை நாடகங்களிலும் நாட்டிய நாடகங்களிலும் இடம்பெறும் தோடயம் பாடல் நாட்டை இராகத்தில் பாடுவது வழக்கம். இந்த இராகத்தில் தோடயத்தைத் தொடங்குவதால் நிகழ்ச்சிகளைக் கட்டி ஓர் இசைச் சூழல் உடனடியாக அரங்கில் ஏற்பட்டு வருகிறது. இன்றைக்கும் இசை அரங்குகளிலும் நாட்டிய அரங்குகளிலும் பண்டைய தோடயம் நாட்டை இராகத்திலேயே தொடங்குவது வழக்கில் உள்ளது.