கொலைச்சிந்து

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

நாட்டுப்புறவியலில் நாட்டுப்புறப் பாடல்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள நிகழ்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட ஒரு கருவூலமாக நாட்டுப்புறப் பாடல்கள் திகழ்கின்றன.

பிறப்பு, மணம், பரிவு, தாயக நாட்டம், போர், இயற்கை, காதல், தொழில், விழா, இறப்பு, ஒப்பாரி எனப் பல பதிவுகளையும் நாட்டுப்புறப் பாடல்கள் பெற்றுள்ளன.

கொலைச்சிந்து :

நாட்டுப்புறங்களில் கொலை செய்யப்பட்டு இறந்து போன நல்லவர்கள், கொடியவர்கள் என இருவகையினரைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த மக்கள் முற்பட்டனர். அதனைப் பாடல் வாயிலாக உரக்கப் பாடினார். அதுவே கொலசிந்து அதாவது கொலைச்சிந்து என அழைக்கப்பட்டது.

பாடுபொருள் :

கொலை செய்யப்பட்டவரது பெயர், ஊர், குடும்பம், வாழ்க்கை, கொலை செய்யப்பட்டதற்கான காரணம், அவரது குணநலன்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட விதம் போன்றவை பாடுபொருளாக எடுத்துக்கொள்ளப்படும்

பாடும் முறை:

கொலச்சிந்து பாடுபவர்கள் குறைந்த பட்சம் இரண்டு பேர். ஒருவர் பாடுபவர் மற்றொருவர் கையில் ‘டேப்’ என்னும் கருவியைத் தட்டிக் கொண்டு பின்பாட்டும் பாடுவார். ‘டேப்’பின் ஒரு பகுதியில் சலங்கை கட்டியிருக்கும்.

பாடப்படும் இடம்:

பெரும்பாலும் கொலைச்சிந்து ஊர் மக்கள் கூடும் இடங்களிலேயே பாடப்படும். சந்தை, கோயில் திருவிழா போன்ற இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் மாட்டு வண்டியின் (கட்டை வண்டி) பின் பகுதியில் ஏறி நின்றுக்கொண்டு கொலைச்சிந்து பாடப்படும். சுற்றி நின்று பாடலைக் கேட்கும் மக்கள் சில நேரம் உணர்ச்சி வசப்பட்டு அழுவதும் உண்டு. ‘சிந்து’ என்னும் பா வகையில் இப் பாடல் பாடப்படுவதால் இதற்கு ‘கொலைச்சிந்து’ என்ற பெயரும் வந்திருக்கிறது.

பாடல் நாயகர்கள்:

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் பகுதியில் கொலை செய்யப்பட்டு இறந்துபோன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைப் பற்றி கொலைச்சிந்து பாடப்பட்டிருப்பதாகச் செவி வழிச் செய்தி கூறுகிறது.

1950 களில் தூத்துக்குடி விரைவு தொடர்வண்டி ஒரு ஆற்றுப் பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளான செய்தியும் அதில் பெரும்பாலானோர் இறந்து போனார்கள் என்ற செய்தியும் கொலைச்சிந்தாகப் பாடப்பட்டுள்ளது.

ஊடகங்களில் கொலைச்சிந்து:

திரைப்படங்களாக வெளிவந்த மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன் போன்றவர்களின் வாழ்க்கை அந்தப் படங்களில் இடம்பெற்ற ஒரே பாடலின் மூலம் நாம் அறிந்துகொள்ளும் நிலையில் பாடப்பட்டிருக்கிறது.

திரை இசையமைப்பாளர் இளையராஜா கிட்டத்தட்ட ‘கொலைச்சிந்துப்’ பாடல் முறையிலேயே அந்தப் பாடலுக்கு இசைக்கோர்வை செய்திருக்கிறார். கரிமேடு கருவாயன் திரைப்படத்தில்,

கதகேளு கதகேளு

கரிமேட்டுக் கருவாயன்

கதகேளு கதகேளடி ……

………உண்மையில அவங்கள்ளனில்ல

மதுரஜில்லாவுக்கே அவன் செல்லப்புள்ள

………………………………………..

சர்க்காரு சொன்னாங்க அவனோ கொலயாளி

சனங்கள்ளா சொன்னாங்க அவனே கொடையாளி

அவனே தேடித்தேடி தினமும் பாடிப்பாடி

வாய்க்காலா ஓடுதாம் வைகை நதி ………

என்று கரிமேடு கருவாயனது வாழ்க்கையைக் ‘கொலைச்சிந்துப்’ பாடல் போலவே பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைப் பதிவு:

கொலைச்சிந்துப் பாடலும் ஒரு மனிதனின் அல்லது மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கைப் பதிவாகவே விளங்குகிறது. மலையூரில் வாழ்ந்த மம்பட்டியான் என்பவரது வாழ்க்கை அந்தப் பகுதி மக்களிடையே செய்தியாக பரவி இருந்தது. பிறகு கதையாகச் சொல்லப்பட்டது. திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கொலைச்சிந்து’ வகையிலான பாடல்கள் அவரது வாழ்க்கையை மக்களுக்கு எடுத்துரைக்கிறது.

இந்த வகையில் நல்வழியிலோ அல்லது தீய வழியிலோ வாழ்ந்து கொலை செய்யப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கையை, வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை, முறைகளையெல்லாம் ‘கொலைச்சிந்து’ எனும் இசைப்பாடல் மூலம் பாடி தெரிவித்து மக்களுக்கு ஒரு பாடமாக நாட்டுப்புறக் ‘கொலைச்சிந்து’ விளங்கியிருக்கிறது. கும்பகோணம் டேப் குருசாதிதாஸ் கொலைச்சிந்து பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.