மாவெலிக் கூத்து

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

‘மகாபலிச் சக்கரவர்த்தி’ தொடர்பான கதையைக் கூத்தாக நடத்திக் காட்டுதல் மாவெலிக் கூத்து என அழைக்கப்பட்டது. இது ‘மாபலிக் கூத்து’ என்றும் கூறப்பட்டது. இவை புராணக் கதையுடன் தொடர்புடைய கூத்தாகும். இது பாட்டும் நடனமும் சார்ந்த கலையாக அழைக்கப்படுகிறது. இக்கலையில் ஒரு கதை மையமாகக் கூறப்படுகிறது.

பாம்பன் என்பவன் ஒரு திருடன். அவன் வயல் பகுதிகளிலுள்ள நெல்லை திருடுபவன். அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, அவனது திருட்டுத் தனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஊர் மக்களெல்லாம் அவனைத் திட்டினார்கள். கடவுளாகிய சிவனிடம் வேண்டினார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நாள் பாம்பன் இறந்தான்.

முந்தையப் பிறவியில் அவன் தீமை செய்ததால் அடுத்த பிறவியில் பாண்டிய நாட்டில் கூலியாளாகப் பிறந்தான், முந்தையப் பிறவியில் வாகனம் தூக்கும் வேலையைச் செய்தான், பின்பு அவன் எலியாகப் பிறந்தான். அந்தப் பிறவியில் இந்த எலி ஒரு சிவன் கோவிலே கதி எனக் கிடந்தது. ஒரு முறை கார்த்திகை மாதத்தில், அக்கோவிலின் விளக்குத் திரியைத் தூண்டிவிட்டது எலி. அப்போது விளக்கின் தீக்கொழுந்து அதன் முகத்தில் பட்டு இறந்தது. பின்பு அடுத்த பிறவியில் ஒரு அரசனுக்கு மகனாகப் பிறந்து மாவெலி எனப் பெயர் பெற்றது அவ்வெலி.

இந்த நிகழ்ச்சியைக் கூத்தாக நடத்திக் காட்டுவது ‘மாவெலிக் கூத்து’ என்று அழைக்கப்படுகிறது. பழைய தஞ்சை மாவட்டத்தில் திருமறைக்காடு ஊரை ஒட்டிய பகுதியில் சிவன் கோவிலின் முன் பகுதிகளில் இக்கூத்து நிகழ்த்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியைத் தேவதாசி சமூகத்தைச் சார்ந்த பெண்களே நிகழ்த்துவார்கள், தேவதாசி ஒழிப்பிற்குப் பிறகு மறைந்த கலைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.