மதுரை கே.என்.எம்.பொன்னுசாமி பிள்ளை

முனைவர் செ.கற்பகம்
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

மங்கல இசை வளர்த்த மாமேதைகள் பலர். இவர்கள் ஆலயம் வளர்த்த அருங்கலை வாணர்களாக விளங்கினர். இவர்களுள் மதுரை பொன்னுசாமி பிள்ளையும் (1877 - 1929) ஒருவராவர். தமிழ்நாட்டின் மங்கல இசைக் கருவியாக நாகசுரம் விளங்குகிறது. இக்கருவி இசைப்பவர்களை நாயனக்காரர் என்று அழைப்பர். இவ்வகையில் இவரை மதுரையார் என்றும், பொன்னுசாமி நாயனக்காரர் என்றும் இவரை அழைப்பர்.
மதுரை பொன்னுசாமி பிள்ளையின் மூதாதையர் திருமங்கலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இவரது மூதாதையர்கள் நாயக்க மன்னர்களின் அவைக் கலைஞர்களாகத் திகழ்ந்துள்ளார். அவர்களில் ஒருவரான திருவேங்கடம் பிள்ளையின் கொள்ளுப் பேரனான முத்துக் கருப்பப் பிள்ளையின் நாதசுவர நிகழ்ச்சியைக் கேட்டு, எட்வர்டு மன்னர் அவருக்கு நூறு வெள்ளி நாணயங்களைப் பரிசாகத் தந்துள்ளார். இவ்வாறு பல பெருமைகள் அடங்கிய இசை மரபைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவர்கள் மதுரையில் குடியேறிய பின்பு மதுரையார் குடும்பம் என்று அழைக்கப்பட்டனர்.

எம்.கே.எம் பொன்னுசாமி பிள்ளை

பிறப்பும் இளமையும்:

பொன்னுசாமி பிள்ளை மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலம் என்ற ஊரில் முத்துக் கருப்பப் பிள்ளைக்கும், அலமேலு அம்மாளுக்கும் கி.பி.1877 ஆம் ஆண்டு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அய்யா சுவாமி பிள்ளை, சின்னசாமி பிள்ளை, செல்லையா பிள்ளை ஆகிய சகோதரர்கள் இருந்தனர்.

இசைப்பயிற்சி:

மரபு வழியில் வந்த நாகசுரக் கலையைப் பொன்னுசாமி பிள்ளை முதலில் தன் தந்தையிடமும் பின்னர் மதுரையில் மிகப்பெரும் புகழோடு விளங்கிய அவரது உறவினரான சௌந்தர பாண்டிய நாகசுரக்காரரிடமும் பயின்றார். மேற்பயிற்சிக்குக் கும்பகோணம் பெரியத்தெரு சுப்பிரமணிய பிள்ளையின் சித்தப்பாவான நாராயண நாகசுரக்காரரிடமும் பயிற்சிப் பெற்றார். மதுரையில் நாகதசுரப் பயிற்சிப் பெற்ற காலத்திலேயே எட்டையபுரம் இராமசந்திர பாகவதரிடம் வாய்ப்பாட்டும், வீணையும் கற்றார்.

திருமண வாழ்க்கை:

பொன்னுசாமி பிள்ளை மாரியம்மாள் என்ற பெண்மணியை மனைவியாகப் பெற்றார். இவர்களுக்கு நடேச பிள்ளை, சண்முகம் பிள்ளை என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர்.

நாகசுரக் கச்சேரிகளும், பெற்ற பாராட்டுகளும்:

பொன்னுசாமி பிள்ளை 1895 ஆம் ஆண்டு இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் அவையில் வாசித்த பொழுது இவரது வாசிப்பைக் கேட்ட வித்வானான உறையூர் முத்துவீரு சுவாமி நாகசுரக்காரர் இவரை மிகவும் பாராட்டினார்.
இவர் ஒரு சமயம் வீணை தனம்மாள் முன் இராமநாதபுரத்தில் வீணைக் கச்சேரி செய்தார். அக்கச்சேரியினைக் கேட்ட வீணை தனம்மாள் “நாதசுரத்தில் சக்கைப் போடு போடுகிறீர்கள் என்றால் என்னுடைய வாத்தியத்திலும் இத்தனை தேர்ச்சியோடு வாசிக்கிறீர்களே….. நீங்கள் நாகசுர வித்வானாக இருப்பதனால் சொல்லுங்கள், வீணை வாசிப்பதாக முடிவு செய்தீர்களேயானால் நாங்கள் வீணையை விட்டுவிடுவதைத் தவிர வேறுவழி இருக்காது” என்றார். இதன் மூலம் இவரின் வீணை வாசிக்கும் முறையும் புலப்படுகின்றது.
1916 ஆம் ஆண்டில் மைசூர் அரசர் சாமராஜ உடையார் இராமேசுவரத்திற்கு வந்தார். அவரை வரவேற்கும் இசைக்குழுவில் இவரின் மங்கல நிகழ்ச்சி இடம் பெற்றது. இவரின் இசையைக் கேட்ட மைசூர் அரசர் இவரை தனது அரசவைக் கலைஞராக்கி கௌரவித்தார். இவர் தனது நாகசுர இசைக் கச்சேரியை ஏராளமான இசைத்தட்டுகள் மூலம் இவ்வுலகிற்கு தந்துள்ளார்.

தனிச்சிறப்புகள்:

இசையுலகில் வெங்கடமகியவர்களால் தோற்றுவிக்கப்பட்ட 72 மேளகர்த்தா முறையை மறுத்து அதில் 32 மேளமே உண்மை என்று கூறியுள்ளார். தனது இசை அனுபவத்தின் வாயிலாகக் கண்டறிந்த சான்றுகளைத் தொகுத்து “பூர்வீக சங்கீத உண்மை” என்ற பெயரில் அரிய நூலைத் தந்துள்ளார்.
இராகங்களைப் பாடி ஆலாபனை செய்வோரும், இசைக்கருவி வல்லுநர்களும் சட்ஜ சுருதியில் இசைப்பது வழக்கம். ஒரு சிலர் மத்திமத்தை சட்ஜமாக வைத்துக் கொண்டு ஆலாபனைச் செய்வர். ஆனால் இதில் தனிச்சிறப்பாக பொன்னுசாமி பிள்ளை அவர்கள் ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் சுவரங்களை வைத்து வாசிக்கும் திறமைப் பெற்றிருந்தார். இம்முறையில் வாசிப்பது பழங்காலத்திலிருந்து இன்று வரை இவர் ஒருவர் மட்டுமே வாசித்து சாதனைப் படைத்துள்ளார் என்பதும் சிறப்பான தொன்றாகும். இவர் நாகசுரம் மட்டுமல்லாமல் வாய்ப்பாட்டு, வீணையிலும் சிறந்த தேர்ச்சிப் பெற்றிருந்தார்.
நாகசுர இசை உலகில் முடிசூடா மன்னனாகவும், மைசூர், இராமநாதபுரம் அரசவைக் கலைஞராகவும் இருந்த மதுரை பொன்னுசாமி பிள்ளை 1904 ஆம் ஆண்டு தான் வசித்து வந்த தெருவில் “சங்கீத ரத்ன விநாயகர்” ஆலயம் கட்டினார். தலை சிறந்த நாதசுவர மேதையான பொன்னுசாமி பிள்ளை 27.11.1929 அன்று காலமானார். இவரின் மகன் மதுரை நடேச பிள்ளையின் மகன்களான கலைமாமணி எம்.கே.என்.சேதுராமன், பொன்னுசாமி பிள்ளை சகோதரர்கள் தற்காலத்தில் புகழ் மிக்க நாதசுவரக் கலைஞர்களாகத் திகழ்ந்துள்ளனர். இவர்களில் மதுரை சேதுராமன் அவர்கள் காலமானார். இவர்கள் இந்திய அரசின் பத்மஸ்ரீ கலைமாமணி போன்ற பல விருதினைப் பெற்றுள்ளனர். மதுரை பொன்னுசாமி பிள்ளை மிகச்சிறந்த நாகசுரக் கலைஞராக வாழ்ந்து வருகிறார். தேனினும் இனிமையான நாகசுர இசையை வாழையடி வாழையாக மதுரையின் மரபினர் வளர்ந்து வருகின்றனர்.