பானை இசை

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

தமிழக நாட்டுப்புறக் கலைகளில் நிகழ்த்துக் கலைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பானையின் வாய்ப்பகுதியிலும், துளையிடப்பட்ட கீழ்ப்பகுதியிலும் தோல்களைப் போர்த்தி இசைக்கும் கருவியைக் கொண்டு பானை இசை நிகழ்ச்சியை நிகழ்த்தி வரும் இவரது கலை நிகழ்ச்சியின் தன்மைகளை அறிவது பண்டைய மக்களின் பழக்கவழக்கங்களை நினைவூட்டுகிறது.

பானையை வைத்து இசையை உருவாக்கும் முறையைத் தமிழகத்தில் நாம் கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் காணமுடிகிறது. அதில் கடம் (குடம்) என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கடம் என்பது மண்ணால் உருவாக்கப்பட்ட திட்பமான மண் பானையாகும். அதில் மண்ணைத் தவிர வேறு எதையும் சேர்க்கமாட்டார்கள். ஆனால், இசைக்கும் பானை இசைக்கருவி என்பது பானையின் வாய்ப்பகுதியிலும் பின்பகுதியிலும் துளையிட்டும் தோல் போர்த்தப்பட்டும் இசைக்கப்படுகிறது.

தமிழகத்தில் பானையின் வாய்ப்பகுதியில் தோல் போர்த்தப்பட்டு இசைக்கும் முறை இருந்தது. அவை, குடமுழா, ஒருமுகவாய், மும்முகவாய், பஞ்சமுக வாத்தியம் என்பவைகளே. இவற்றில் பஞ்சமுக வாத்தியம் மட்டும் ‘திருவாரூர்’ கோயிலிலும், திருத்துறைப்பூண்டி ‘பிறவிமந்தீர்’ கோயிலிலும் சோழர் காலத்தவையாகப் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் பானையின் வாய்ப்பகுதியில் மட்டும் தோல் போர்த்தி இசைக்கப்பட்டன.

பானை இசை படம் :

இசைக்கருவியை உருவாக்க வலிமையான திட்பமான பானைகள் தேர்வு செய்யப்படுகின்றன. இத்தகைய பானைகள் தஞ்சை மற்றும் மதுரை மாவட்டங்களில் கிடைக்கின்றன. பானையின் வாய்ப்பகுதிக்கான மாட்டுத் தோலைப் புதியதாகப் பயன்படுத்த வேண்டுமெனில் மயிர்கள் உள்ள பகுதியைச் சுண்ணாம்பு தடவி அகற்றவேண்டும். இல்லையேல் மிகக்குறைந்த அளவே தோல் தேவைப்படுவதால் பறை இசைக்கலைஞரிடமும் பெற்றுக்கொள்கின்றனர். பதப்படுத்தப்பட்ட தோல் தேவையான அளவு வெட்டி எடுக்கப்பட்ட பின் பானையின் கழுத்துப் பகுதி சூடான நிலையில் உள்ள சோறும், இட்லியும் சேர்த்துப் பிசையப்பட்ட பசையால் இறுக்கமாக ஒட்டப்படுகிறது. மேலும், ஒட்டிய பிறகு இறுக்கமாக இருக்கச் சணல் கயிறுகளால் தோலோடு சேர்த்துக் கழுத்துப்பகுதி கட்டப்படுகிறது.

பானையின் பின்புறத்தில் அளவு குறிக்கப்பட்ட இடத்தில் கூர்மையான ஆணியினைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டியும் அகழ்ந்தும் அறுத்தெடுக்கப்படுகிறது. பின்னர், முன்போலவே பசையுடன் தோல் பின்பக்கம் ஒட்டப்படுகிறது. பின்பகுதி மட்டும் உறுதியாகப் பிடித்துக் கொள்ளும் வரை கைகளால் அழுந்தப் பிடிக்கப்படுகிறது. பின்னர், கழுத்துப் பகுதியின் கீழே ஒரு ஆணி செல்லும் அளவுக்கு ஓட்டை இடப்படுகிறது. இது இசைக்கும் போது ஏற்படும் காற்றழுத்தத்தைச் சரி செய்யப் பயன்படுகிறது. இல்லையேல் தோல் கிழிய வாய்ப்பிருக்கிறது.

இக்கருவியை இசைக்கும் போது மிருதங்கத்தைப் போலவே கிடைமட்டமாக வைத்து வலக்கால் கருவியின் கீழேயும், இடக்கால் கருவியின் மேலேயும் மடக்கிய நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வலக்கை கருவியின் வாய்ப் பகுதியிலேயும், இடக்கை கருவியின் கீழ்ப்பகுதியான பின்பகுதியிலும் ஆளப்படுகிறது. மேலும், இடக்கையின் கட்டை விரலில் அணிந்துள்ள மோதிரம் போன்ற இரும்பு அணி அணியப்படுகிறது. இது சிறப்பு ஒலியெழுப்பப் பயன்படுகிறது.

இக்கருவியை இசைக்கும் போது பல்வேறு இசைக் கருவிகளின் இசை ஒலியைக் கேட்க முடிகிறது. அவ்வொலிகள் துல்லியமாக இல்லாவிட்டாலும் அவற்றை நினைவுப்படுத்தும் ஒலிகளை ஏற்படுத்துகிறது. அவையாவன பறை, பம்பை, தண்டோரோ, தவில், உடுக்கை, உறுமி, மிருதங்கம், சாப்பறை போன்றவைகளோடு தபேலா, பேங்கூஸ், ரிபிள் கேங்கோ மற்றும் டிரம்ஸ் ஒலிகளைக் கேட்க முடிகிறது.

கதை சொல்லும் நிகழ்ச்சியில் பெரும்பாலும் நகைச்சுவைக் கதைகளே சொல்லப்படுகின்றன. இந்நிகழ்வு மக்களோடு இணைந்துள்ளது. கதையில் வரும் பாத்திரங்களை எதிரே இருப்பவர்களோடு ஒப்பிட்டுச் சொல்வதால் கதை சிறப்பு பெறுகிறது.

மேலும், மழை, கட்சிக் கூட்டம், காவல் துறையினரின் கட்டுப்பாடு, குடிகாரர்களின் தொல்லை போன்ற காரணங்களாலும் நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள வேண்டியுள்ளது. இக்காரணங்களால் நலிந்து போன கலைகள் மேலும் நசுக்கப்படுகின்றன.