பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன் முனைவர் இ.அங்கயற்கண்ணி
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் இசைத்துறை அறிமுகம்: தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறையின் முதல் பேராசிரியராக விளங்கித் தமிழிசையின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன் இவர் தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதரின் கொள்ளுப் பேரனாவார். இவர் 24.10.1921 அன்று தஞ்சையில் துரைப் பாண்டியன் - மரகதவல்லியார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பணிவிவரம்: செய்தி மற்றும் விளம்பரத் துறையில் பட்டயம், இவற்றோடு கருநாடக இசையில் ஆழ்ந்த புலமையும் பெற்று விளங்கினார். மத்திய அரசின் ஒலிபரப்புத் துறையின் செய்திப் பிரிவில் செய்தி ஆசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். தமிழிசை ஆய்வு:
தம்முடைய கொள்ளுப் பாட்டனார் ஆபிரகாம் பண்டிதர் வகுத்த இசை நெறிகளின் அடிப்படையில் 32 புதிய இராகங்களை உருவாக்கி அவற்றில் கீதம், சுவரஜதி, வர்ணம், கீர்த்தனைகளை இயற்றினார். இவை “புதிய இராகங்கள்” என்ற பெயரில் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளன. இசைக் கலைஞர்: வாய்ப்பாட்டுக் கலைஞராகப் பல இசை நிகழ்ச்சிகளை அளித்துள்ளார். சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது இவர் தயாரித்த 25 இசை நிகழ்ச்சிகள் வானொலியில் ஒலி பரப்பப்பட்டுள்ளன. கதா காலட்சேபத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு 30 இசைச்சொற்பொழிவுகளையும், 60 பக்தி இசைப் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பெற்ற விருதுகள், பட்டங்கள்: மேற்கண்ட இவரது தொண்டுகளைப் பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்குக் “கலைமா மணி” விருதினை 1990இல் வழங்கியது. 1976இல் மதுரை இறையியல் கல்லூரி, “இசைக்கதைச்செல்வர்” என்ற பட்டத்தையும், 1981இல் நடைபெற்ற உலகத் தமிழ்க் கிறித்துவ மாநாடு, “அருட்கலைஞர்” என்னும் பட்டத்தையும் அளித்துப் போற்றிப் புகழ்ந்தன. முடிவுரை: ஆக, கர்நாடக இசையைக் கற்பிக்கும் பேராசிரியர், இசைத்துறை ஆய்வினை மேற்கொண்ட அறிஞர், இசை பாடும் கலைஞர், புல்லாங்குழல் விற்பன்னர், கதா காலட்சேப வல்லுநர் ஆகிய பல பரிமாணங்களைப் பெற்று தம் வாழ்நாளில் தமிழிசைக்குச் சீரிய பணிகளை ஆற்றிய பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன் அவர்களின் நினைவு போற்றுதற்குரியது. |