திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்கள்

முனைவர் செ.கற்பகம்
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

திருஞானசம்பந்தர் இயற்றியருளிய பதிகங்கள் பண்சுமந்த பதிகங்கள் என்கிற தனிச்சிறப்புடன் விளங்குகின்றன. திருஞானசம்பந்தரால் அருளிச்செய்யப் பெற்ற இத்திருப்பதிகங்கள் பிற்காலத்தில் எழுந்த பாடல் வகைகளுக்கு முன்னோடியாகக் காணப்படுகின்றன.
திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்களை இரு வகையாகப் பாகுபடுத்தலாம். அவை,

1. பொருள் நிலையில் சிறப்பு வாய்ந்தவை
2. இசை நிலையில் சிறப்பு வாய்ந்தவை
3. பொருள் நிலையில் சிறப்பு வாய்ந்தவைகளாக
வினாவுரைப் பதிகங்கள், நமச்சிவாயத்திருப்பதிகம், மொழிமாற்று,
கோளறு திருப்பதிகம், திருப்பாசுரம், திருஇயமகம், திருநீற்றுப்பதிகம் ஆகியனவாகும்.

இசை நிலையில் சிறப்பு வாய்ந்தவைகளாக திருத்தாளச்சதி, திருவிராகம், யாழ்மூரி போன்றவை விளங்குகின்றன.

திரு இயமகம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்):

இயமகம் என்பது ஓரடியில் முன்வந்த சொல்லோ, தொடரோ வேறொரு பொருள்பட மீண்டும் அதே அடியில் மடக்கி வரும் அமைப்பாகும். ‘யமகம்’ என்ற வடசொல் தமிழில் முறைப்படி இயமகம் என்றும், திரு இயமகம் என்றும் அழைக்கப்படுகின்றது.
திருஞானசம்பந்தர் இயற்றிய நான்கு பதிகங்கள் ( 113-116) இவ்வமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன. இவை பழம்பஞ்சுரம் என்ற பண்ணில் அமைந்துள்ளன.

“உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே”

திருவெழுக் கூற்றிருக்கை:

(இணைக்குறள் ஆசிரியப்பா): ஒன்று முதலாக ஏழு வரை படிப்படியாக ஒவ்வொன்றும் ஏற்றியும் இறக்கியும் ஏழு கூறுகளில் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள் அமைப்பே “திருவெழுக் கூற்றிருக்கை” (128) என்ற பெயரால் வழங்கப்படுகிறது. இது சித்திரக்கவிகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதனைத் “தேர்பந்தம்” என்று சித்திரக்கவியில் வழங்குவர்.
“ஓருருவாயினை” எனத் தொடங்கும் வியாழக்குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகம் திருவெழுக் கூற்றிருக்கை அமைப்பில் அமைந்துள்ளது.

மொழிமாற்று: (கட்டளைக்கலி):

ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
ஞானசம்பந்தரின், “யாமாமா நீ யாமாமா யாழீகாமா” என்ற கௌசிகப் பண்ணில் அமைந்த பதிகம் (375) மாலை மாற்று அடிப்படையில் அமைந்துள்ள பதிகமாகும்.

மாலை மாற்று: (அறுசீர் ஆசிரிய விருத்தம்):

ஒரு பாடலில் உள்ள இரண்டடிகளை முன்னாலிருந்து பாடினாலும், பின்னாலிருந்து பாடினாலும் சொல்லும் பொருளும் மாறுபடாமல் இருப்பது மாலை மாற்றாகும்.
“ காடக தணிகலம் (117)” என்ற வியாழக்குறிச்சிப் பண்ணில் அமைந்த பதிகம் மொழிமாற்று அடிப்படையில் அமைந்துள்ளது.
ஞானசம்பந்தரின், “யாமாமா நீ யாமாமா யாழீகாமா” என்ற கௌசிகப்பண்ணில் அமைந்த பதிகம் (375) மாலை மாற்று அடிப்படையில் அமைந்துள்ள பதிகமாகும்.

கோமூத்திரி: (அறுசீர் ஆசிரிய விருத்தம்):

கோமூத்திரியும் சித்திரகவிகளில் ஒன்றாகும். இரண்டிரண்டு வரியாக ஒரு செய்யுளை எழுதி மேலுங்கீழும் ஒன்றை விட்டுப் பாடினாலும், அச்செய்யுள் சிறிதும் மாறுபடாமல் இருப்பது கோமூத்திரியாகும். அதாவது பசு நடந்து கொண்டே நீர் விடும்போது அந்நீர் ஒழுகிய தரையானது இவ்வாறே தெளிந்த வடிவமாக இருக்கும். அதன் காரணமாக இப்பெயர் பெற்றது.
“பூமகனூர் புத்தேனாக்கிறைவனூர்” என்ற காந்தாரப்பண்ணில் அமைந்த பதிகம் (210) கோமூத்திரிக்கு சிறந்த உதாரணமாகும்.

ஏகபாதம்:

நான்கு அடிகளைக் கொண்ட ஒரு செய்யுளில் எல்லா அடிகளிலும் சொற்களில் மாற்றம் இல்லாமல் பொருள்களில் மாற்றம் பெற்று வருவது ஏகபாதபாகும் (127). இப்பாடலில் ஓரடியில் உள்ள சீர்களே மீண்டும் மீண்டும் வந்து அச்சீர்களைப் பிரித்து உச்சரிக்கும் பொழுது வெவ்வேறு பொருள் தருமாறு அமைவதாகும்.

எ.கா
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

ஈரடி:

இரண்டடிகளால் பாடப்பெறும் பாக்களாகும். அதாவது முதலடி நான்கு சீர்களாகவும், இரண்டாமடி மூன்று சீர்களாகவும் அமைத்துப் பாடப்படுதலாகும்.
ஞானசம்பந்தரின் பழம் பஞ்சுரப்பண்ணில் அமைந்த “பரசு பாணியர்” என்ற பதிகம் (263, 264) ஈரடி அமைப்பில் அமைந்துள்ளது.

நாலடி மேல் வைப்பு:

முதல் நான்கு அடிகள் மூன்று சீர்களாகவும், இறுதி இரண்டடிகள் நான்கு சீர்களாகவும் அமையப்பெறும் (261, 262, 366) ஞானசம்பந்தரின் “இயலிசையென்னும் பொருளின் திறமாம் என்னும் காந்தார பஞ்சமப்பண் நாலடி மேல் வைப்பு முறையில் அமைந்துள்ளது.

யாழ்மூரி:

திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தலயாத்திரைச் சென்றபோது, யாழில் வாசிக்க முடியாத ஒரு பண்ணைப் பாடினார். அதனால் யாழ்ப்பாணர் யாழை முறிக்கச் சென்ற போது, அவரைத் தடுத்தாட் கொண்டார். எடுத்த தாளம் முரிய வேறு ஒரு தாளத்திலும், எடுத்த பண் முரிய வேறு ஒரு பண்ணிலும் மாற்றி இசைக்கும் முறை வரி எனப்படும்.
ஞானசம்பந்தரின் “மாதர்மடப்பிடியும்” (136) என்ற மேகராகக்குறிஞ்சிப் பண் யாழ்மூரியாகும்.

திருத்தாளச்சதி:

தாளத்துக்கேற்ற ஓசையுடையவாய் விளங்குகின்ற பாடல் வடிவம் திருத்தாளச் சதியாகும். இப்பாடலின் நான்கு வரிகளில் முன்னிரண்டு வரிகள் ஒரு அமைப்பிலும், பின்னிரண்டு வரிகள் ஒரு அமைப்பிலும் அமையும். திருத்தாளச்சதி என்ற பதிகத்தை (126) முதன் முதலில் படைத்தவராக ஞானசம்பந்தர் விளங்குகின்றன.

பந்தெத்தால் வந்தெப்பால் பயின்று நின்ற வும்பர் அப்
பாலே சேர்வாய் ஏன் ஓர் காண் பயில் கண முனிவர்களும்

திருஞானசம்பந்தர் கையாண்ட இந்த வடிவங்கள் பிற்காலத்தில் வர்ணம், கிருதி, கீர்த்தனை போன்ற பல்வேறு உருப்படிகள் தோன்றவும், இசை இலக்கணங்கள் தோன்றவும் வழிவகுத்துள்ளன.