வித்தைகள்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

‘வித்தை’ என்ற சொல்லுக்கு வியப்படையச் செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் செயல் சாகசம் என்று தற்காலத் தமிழ் அகராதி பொருள் கூறுகின்றது.

அடவுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட வேண்டிய கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் ஆட்டம் போன்ற பல்வேறு கலைகளிலும் இன்றைய நிலையில் வித்தைகள் அதிகளவு இடம்பெறுவதைக் காணலாம். இக்கலையில் வித்தைகள் ஒரு அங்கமாக்க் கருதப்படுகின்றன. மேலும், வித்தைகளையே தனி நிகழ்ச்சியாக நிகழ்த்திக் காட்டும் குழுக்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. இவ்வித்தைகளைக் காட்டுவோர் நிலையாக ஓரிடத்தில் தங்கியிருக்காமல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளைத் நிகழ்த்துவர். நாட்டுப்புறத் தொழில் முறை கலைஞர்கள் மக்களின் அழைப்பின் பேரில் பல்வேறு இடத்திற்குச் சென்று நிகழ்ச்சிகளை நிகழ்த்துவர். ஆனால் வித்தைக் காட்டும் கலைஞர்கள் பொதுமக்கள் மிகுதியாகக் கூடும் இடங்களைத் தெரிவு செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றனர். பொதுமக்கள் தருகின்ற பல பொருள்களைப் பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்கள் குரங்கு, பாம்பு, கீரி, கரடி முதலான விலங்குகளைக் கொண்டு வித்தைகளை நிகழ்த்துகின்றனர். பொருட்களை விற்பதற்கும் வித்தைகள் செய்து காட்டுகின்றனர்.

அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை மேஜிக் என்ற பெயரில் பொதுவிழா, வழிபாட்டுத் தலம், பள்ளி, கல்லூரிகளில் நிகழ்த்திக் காட்டுகின்றனர். பகுத்தறிவு சிந்தனைகளைத் தூண்டும் நிலையிலும் மூட நம்பிக்கைகளை விரட்டும் நிலையிலும் வித்தைகள் காட்டப்படுகின்றன.

பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் சிறார்களைச் சிந்திக்கத்தூண்டும் நிகழ்ச்சியாவும் தொலைகாட்சிகளில் இடம் பெற்று வருகிறது.