திரு.வி.கலியாண சுந்தரனார்

(1883 – 1953)

முனைவர் த.கலாஸ்ரீதர்
உதவிப்பேராசிரியர்
ஓலைச்சுவடித்துறை

இவர் திருவாரூர் விருத்தாசல முதலியாருக்கும் சின்னம்மாளுக்கும் ஆறாவது பிள்ளையாகச் செங்கற்பட்டு மாவட்ட சைதாப்பேட்டைத் தாலுக்காவிலுள்ள துள்ளம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். இளமையில் தந்தையாரிடமே இவர் கல்வி பயின்றார். அடுத்து இராயப்பேட்டை இராஜகோபால் நாயகர் பள்ளியிலும் பின்னர் வெஸ்லி கல்லூரிப் பள்ளியிலும் படித்தார். திரு ந.கதிரைவேற் பிள்ளையின் தொடர்பால் வழக்கொன்றிற்குச் சான்று கூற திரு.வி.க செல்ல நேரிட்டதால் பள்ளி இறுதித் தேர்விற்குச் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டு விட்டது என்றாலும் மயிலைத் தணிகாசலம் முதலியாரிடத்தும் பிறரிடத்தும் பாடங்கேட்டுத் தம் கல்வியறிவை உயர்த்திக் கொண்டார்.

இவர் சிறிது காலம் ஆயிரம் விளக்குப் பள்ளியிலும் வெஸ்லி கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சிம்சன் நிறுவனத்தின் கணக்கராகவும் பணியாற்றினார்.

பதிப்பு நூல்கள்

சிறந்த தமிழறிஞரான இவர் பதிப்புத் துறையிலும் குறிப்பிடத்தக்கவர். 1908 இல் உமாபதி குருப்பிரகாசம் அச்சகமும் 1920 இல் சாது அச்சகமும் நிறுவி நூல்களை அச்சிட்டு வழங்கியவர் பெரியபுராணத்துக்குக் குறிப்புரையும், வசனமும் எழுதிப் (1907 – 1910) பதிப்பித்தார். திருமந்திரம் பட்டினத்துப் பிள்ளையார் பாடற்றிரட்டுக்குப் பொழிப்புரையும் விருத்தியும் எழுதிப் பதிப்பித்தார். 1934 இல் புதிதாக ஒரு பெரியபுராணம் பதிப்பையும் வெளியிட்டார்.