முகவை இராமானுசக் கவிராயர்

(-1852)

முனைவர் த.கலாஸ்ரீதர்
உதவிப்பேராசிரியர்
ஓலைச்சுவடித்துறை

இவர் இராமநாதபுர மாவட்ட முகவை என்னும் ஊரில் பிறந்தவர். பட்டாளத்தில் சேர்ந்து போர் வீரராக இருந்தவர். பின்னர் மாதவச் சிவஞான முனிவரின் மாணவரான திரு சோமசுந்தரப் பிள்ளையிடம் தமிழ் கற்றுக் கொண்டார். சென்னையில் சஞ்சீவிராயன் பேட்டையில் பிற்காலத்தில் வாழ்ந்தவர். வைணவப் பற்று மிகுந்த இவர் சென்னையில் சொந்தமாக அச்சுக்கூடம் ஒன்றை சஞ்சீவிராயன் பேட்டையில் நிறுவி நடத்தி வந்தார்.

இவரிடம் திருவாளர்கள் வீராசாமி செட்டியார், களத்தூர் வேதகிரி முதலியார் திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் மற்றும் ஐரோப்பியரான தாம்சன் கிளர்க்கு, ராஜஸ்துரு, போப்பு, இரேனியூஸ் முதலியோர் தமிழைப் பயின்று வந்தனர். இவர் திருக்குறளுக்கு வெள்ளுரையும், புத்துரையும் (1840) ஆத்திச்சூடி (1840), கொன்றை வேந்தன் (1847), வெற்றி வேற்கை (1847) ஆகிய நறுந்தொகைக்குக் காண்டிகை உரையும் (1847), நீதி நூல்களுக்கு உரையும் எழுதி அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். இவ்வுரைகள் இவரது இலக்கண இலக்கியப் புலமையைக் காட்டுவனவாக அமைந்துள்ளன. 1845 இல் இனியவை நாற்பது – பழைய உரையுடன் பதிப்பித்துள்ளார். நன்னூலுக்கு விருத்தியுரையும், 1847இல் காண்டிகையுரையும் எழுதிப் பதிப்பித்துள்ளார். இலக்கணச் சுருக்கம் எனும் நூலை 1848இல் எழுதி வெளியிட்டுள்ளார். உவின்சுலோ ஆங்கில தமிழ் அகராதி தொகுப்புக்கு இவர் முழுவதும் உதவி செய்துள்ளார். பச்சையப்ப வள்ளல் மீது பஞ்ச ரத்ன மாளிகை எனப் புதுவது புனைந்து காண்டிகையுரை செய்து 1848இல் அச்சுப்படுத்தியுள்ளார். மேலும், பார்த்தசாரதி மாலை, வரதராசப் பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி முதலியவற்றையும் செய்து வெளியிட்டுள்ளார்.

இவருடைய நன்னூல் விருத்தியுரைக்குச் சாத்துக்கவி கொடுத்துள்ளவர்கள் தொல்காப்பிய வரதப்ப முதலியார். அஷ்டாவதானம் வீராசாமி (செட்டியார்) கவிராயர் களத்தூர் வேதகிரி முதலியார் ஆகியோராவர். இவர் ஆத்மபோதம் எனும் வடமொழி நூலைத் தமிழில் மொழிபெயர்த்தும் 1848இல் வெளியிட்டுள்ளார். இவர் திருக்குறள் 63 அதிகாரங்களைப் பரிமேலழகர் உரையுடனும் தமது தெளிபொருள் விளக்கத்துடனும் துரு (Drew) என்னும் ஐரோப்பியர் எழுதித் தந்த ஆங்கில மொழிபெயர்ப்புடனும் பகுதி பகுதியாக 1840 முதல் 1862 ஆம் ஆண்டுக்குள் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். இந்நூலை வெளியிட முன்கூட்டியே பலரிடம் கையொப்பம் பெற்று அவ்விவரத்தையும் தமது வெளியீட்டில் தந்துள்ளார். இவர் இயற்றமிழாசிரியர் இராமானுசக் கவிராயர் எனப் புகழ்பெற்றவராவர்.