திருமயிலை சண்முகம் பிள்ளை

(1858 – 1905)

முனைவர் த.கலாஸ்ரீதர்
உதவிப்பேராசிரியர்
ஓலைச்சுவடித்துறை

இவர் சென்னையில் வாழ்ந்தவர். புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடத்தும், கோமளபுரம் இராசகோபால் பிள்ளையிடத்தும் கல்வி பயின்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் மகாவித்துவான் என்னும் பட்டம் சூட்டப் பெற்றவர். இவர் தொண்டமண்டலம் துளுவவேளாளர் பள்ளியிலும் திருமயிலை சென்தோம் கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் இயற்றிய நூல்கள்

திருமுல்லைவாயிற் புராணம், திருமயிலை உலா, சிற்றிலக்கண வினாவிடை, கந்தபுராண வசனம், கபாலீசர் பஞ்சரத்தினம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் கம்பராமாயணம் அயோத்தியா காண்டவுரை (1891), பொன்வண்ணத்தந்தாதி, திருக்கயிலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பிச்சாடான நவமணிமாலை என்னும் நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

பதிப்பு நூல்கள்

இவர் நன்னூல் விருத்தியுரை, தஞ்சைவாணன் கோவையுரை, மச்சபுராணம் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய மாயப்பிரலாபம், சிவவாக்கியர் பாடல் முதலிய பழைய நூல்களை அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். 1894இல் மணிமேகலை என்னும் பௌத்த சமய காவியத்தை முதன் முதலில் அச்சிட்டுப் பதிப்பித்தவர் இவரே ஆவார். இவர் இதனைப் பதிப்பித்ததற்குப் பின்னர் நான்காண்டுகள் கழித்து திரு உ.வே.சாமிநாத ஐய்யர் அவர்கள் மணிமேகலையைப் பதிப்பிக்க முற்பட்டார்.

வித்திய விநோதினி என்னும் இதழை (1889 – 1892) இராமசாமி நாயுடு வாசுதேவ முதலியாருடன் சேர்ந்து நடத்தி வந்துள்ளார். மகாவித்துவான் சண்முகம் பிள்ளையிடம் பயின்றவர்கள் பேராசிரியர் க.நமச்சிவாய முதலியாரும் மயிலை சீனி கோவிந்தசாமி அவர்களும் குறிப்பிடத்தக்கவராவர்.