அர்த்தநாரீஸ்வரர் புராண வரலாறு: சிவபுராணம் அர்த்தநாரீஸ்வரரைப் பற்றிக் கூறுகையில்,
பிரம்மன் இப்பிரபஞ்சத்தைப் படைக்கையில் உயிரினங்களையும் தாவர, விலங்கினங்களையும்
படைத்தார். அவை அனைத்தும் ஆண் உயிரினங்களாகவே தோன்றின. ஆகையால் பிரபஞ்ச உற்பத்தியானது
தடைப்பட்டது. சிவன் தனித்திருப்பதனால் உயிர் உற்பத்தி இல்லை என்பதனைப் பிரம்மன்
உணர்ந்தார். பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவனுடலில் பாதியைச் சக்திக்கு
அளித்து ஒன்றிணைந்த உருவத்தின் தேவையை அறிந்து பாதி ஆணாகவும் (சிவன்) பாதி
பெண்ணாகவும் (பார்வதி தேவி) படைத்து பிரபஞ்சத்தின் உயிர் உற்பத்தியினைச்
செவ்வனே நடைபெறச் செய்தனர்.
மற்றொரு குறிப்பில், ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், சிவபெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது சிவனைக் காண வந்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கி வலம் வந்தார். ஆனால் பார்வதி தேவியை வணங்கவில்லை. அதனால் பார்வதி தேவி கோபமடைந்தார். சினம் கொண்ட பார்வதி தேவி பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் இரத்தம் நீங்குமாறு சாபமளித்தார். பிருங்கி முனிவர் சதையும் இரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார். சிவன் தம்முடைய தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார். சிவன் பிருங்கி முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார். அதனைப் பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து சிவனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார். இதனைக் கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி சிவனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி சிவனை நோக்கிக் கடுமையான தவத்தினை மேற்கொண்டார். சிவன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார். பார்வதி தேவி சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார். பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வணங்கினார். படிமக்கலை: அர்த்தநாரீஸ்வரரின் படிமக்கலைக் கூறினை அம்சுமத்
பேதாகமம், காமிக்காகமம், சுப்ரபேதாகமம், சில்பரத்னம், காரணாகமம் ஆகியவைகளில்
விளக்கப்பட்டுள்ளது. சிவனின் வலது பாதி ஆண் உருவமாகவும் பாதி பெண் உருவமாகவும்
இருக்கும் . சிவன் வலது பாதியும், பார்வதி தேவி இடது பாதியினையும் பெற்றிருப்பர்.
வலது பாதியின் தலையில் சடாமுடி தரித்திருக்கும். அதன் மேல் பிறைச்சந்திரன்
அணிவிக்கப்பட்டிருக்கும். வலது காதில் சர்ப்ப குண்டலமும் (நாககுண்டலம்) வலது
நெற்றியில் பாதி கண்ணும் காணப்படும். பொதுவாக இரண்டு, மூன்று, நான்கு கரங்களுடன்
அமைக்கப்பட்டிருக்கும். வலது கைகளில் அபயமும், பரசும் தரித்திருக்கும். அல்லது
வரதமும், சூலமும் அல்லது மழுவும், அபயமும் அல்லது ஒரு கை இடபத்தின் தலையின்
மீது ஊன்றியவாறும், மற்றொன்று அபயம் தாங்கியவாறும் இருக்கும். அல்லது சூலமும்
அக்கமாலையும் வலது கைகளில் தரித்திருக்கும் இரண்டு கரங்கள் மட்டுமே தரித்திருந்தால்
சிவனின் பாகத்தில் வரதம் அல்லது கபாலம் பிடித்திருக்கும். வரலாறு: இச்சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜரதத்தில் பல்லவர்களால் அமைக்கப்பட்டிருப்பது பழமையானதாகும். இங்குள்ள சிற்பம் நான்கு கரங்களைப் பெற்றது. வலது கரங்களில் பரசு மற்றும் அபயமும் இடது புறம் தேவியின் கரங்களில் ஒன்று தொங்கவிடப்பட்டும் மற்றொன்று சற்று மடக்கி உயர்த்திய கரங்களில் நீலோத்பலம் (நீல அல்லி) பிடித்தவாறும் காதில் பெரிய குண்டலமும், கைகளில் கங்கனம் (அதிக எண்ணிக்கை) அணிந்தும் காணப்படும். சிறப்பு: இச்சிற்பம் சக்தியும் சிவமும் இணைந்து இப்பிரபஞ்சத்தைச் செலுத்துவதாகக் குறித்துக்காட்டுவதாகும் மற்றும் உயிர்களைப் படைத்தல் ஆண் பெண் சமத்துவத்தை உலகுக்குரைக்கும் சிறப்பு பெற்றது. சில சிவாலயங்களில் வலது, இடது பாகங்களில் சிவன் மற்றும் பார்வதி தேவி மாறிய நிலையில் தோன்றியிருப்பது சிறப்பானதாகும். சோழர்காலக் கோயில்களில் முற்கால, இடைக்கால, பிற்காலக் கோயில்களின் தேவ கோஷ்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும். |