பைரவர்

முனைவர் வே.லதா
உதவிப்பேராசிரியர்
சிற்பத்துறை

புராண வரலாறு:

பிரம்மன், சிவனை கபாலி என்று கேலி செய்ததனாலும், சிவனாகிய ருத்ரனை படைத்தது தாம் தான் எனச் செருகுற்று உலகுக்கு உரைத்ததால் பிரம்மாவின் ஐந்தாவது தலையைத் தம் இடது சுண்டு விரல் நகத்தால் கிள்ளியதால் “பிரம்மச் சிரச்சேதகர்” ஆனார். இதனால் சிவனை பிரம்மஹத்தி தோஷம் (பிராமணரைக் கொன்ற பாவம்) பற்றியது. கபாலியாக அலைந்து திரிந்து இறுதியாக காசியில் கங்கை நதியில் நீராடி. கபாலம் கங்கையில் சேர. சாப விமோட்சம் பெற்று. காசி விசுவநாதரை வணங்கி. கயிலை அடைந்ததாக வராஹ புராணம் குறிப்பிடுகிறது. பிரம்மன் உலகைப் படைத்தது தாமென்று பொய்யுரைத்ததால் ரிஷிகளின் முன் ஒளி வடிவாய் உருவெடுத்த சிவனை வேதங்கள் ஏற்ற நிலையிலும் பிரம்மன் மறுத்ததால், ஐந்தாவது தலையைக் கிள்ளியதாககூர்மபுராணம் குறிப்பிடுகிறது.

மயூரபாஞ்சம் இவரை சேத்திரபாலர் என்கிறது. ஆலயங்களை காப்பவர் என்றும் கூறுகிறது. சாரஸ்வதீய சித்ரகர்ம சாஸ்திரம் பைரவர் சாத்வீக, ராஸச, தாமச குணங்களில் வெள்ளை, சிவப்பு, கருப்பு நிறங்களில் காணப்படுவார். சைவப்படிமங்களில் பிட்சாடனரைப் போன்றிருப்பார். தத்ரிகா, கௌரிகா ஆகிய இரு தேவியர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சதுர்புஜ பைரவர்


வரலாற்று சிறப்பு:

சிவனின் பூர்ண ரூபமென்று சிவபுராணத்தில் கூறப்படுகிறது. பைரவரின் படிமமானது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரந்து விளங்கி வந்திருக்கின்றது. ருத்ரயாமளத்தில் விளக்கப்பட்டுள்ள சிவனின் அம்சமான, மறு உருவமான பைரவரின் கோலங்கள், பாசுபத காபாலிக, காளாமுக சைவப் பிரிவினரின் இஷ்டத் தெய்வமாகும். பைரவர் படிமமானது. தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலப் பகுதிகளில் போற்றப்பட்டு வந்துள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோயில், முற்கால, இடைக்கால, பிற்காலச் சோழர் கோயில்களில் இடம்பெற்றுள்ளது. மேலும், திருப்புலிவனம் தஞ்சைப்பெரியகோயில், கங்கைகொண்டசோழபுரம், திருப்பாச்சூர், திருச்செங்காட்டங்குடி, திருவாசி, ஆனைக்கா, மதுரை ஆகிய கோயில்களில் பல்வேறு காலக்கட்டங்களில் சிற்பங்களாக உருவெடுத்துள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் பைரவர் சிற்பம் உருவாக்கப்பட்டும், சாளுக்கியர்களிடமிருந்து கொண்டு வந்தும் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்பகுதிகளில் பாண்டியர், விசயநகர, நாயக்க மன்னர்களுக்குப் பிறகும் பைரவர் சிற்பங்களும் வழிபாடும் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். திருத்தொண்டர் புராணத்தில் இறைவனுக்காக பிள்ளைக்கறி படைத்த்தை சிறுதொண்டரின் பக்தியை உணரலாம்.

படிமக்கலை:

பைரவரின் படிமமானது சிவாலங்களில் வட கிழக்கு திசையில் ஈசனை நோக்கியவாறு அமைந்திருக்கும். சிவனின் நிருத்த கோலங்களில் பக்கவாட்டில் நடராசரைப் போன்றே நடனம் ஆடுவது போலவும், தனித்தும் அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் திவிபுஜம் (இருகரங்கள்), சதுர்புஜம் (நான்கு கரங்கள்), சத்புஜம் (ஆறு கரங்கள்), அஷ்டபுஜங்களில் (எட்டு கரங்கள்) காணப்படுவர். சாத்வீக பைரவர் இரண்டு அல்லது நான்கு கரங்களிலும், ராஸச பைரவர் ஆறு கரங்களுடனும், தாமஸப் பைரவர் எட்டுக் கரங்களுடன் காணப்படுவார். மூன்று கண்கள் உள்ளவர், கபாலம், சூலம், தரித்து யானைத் தோலை ஆடையாக அணிந்து தலையில் கேசபந்தம், காதில் மகரகுண்டலம், பாதங்களில் பாதஸரம் அணிந்து தம் வாகனமாகிய நாயைப் பக்கவாட்டில் அமையப் பெற்றிருப்பார். மேலும், சொர்ண கர்சன பைரவர், வடுக பைரவர் என்ற பெயர்களில் அழைக்கப்படுவார். ரூபமந்தணம் வடுக பைரவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவரது எட்டுக் கரங்களில் கட்வாங்கம், பாசம் (கயிறு) சூலம், டமரு, கபாலம், நாகம், மாமிசம், அபயம் தரித்து, சிவந்த மேனியராக காணப்படுவார். மூன்றுகண்களுடன் சடைமுடி தரித்து நாயை வாகனமாகப் பெற்றிருப்பார்.

ருத்ரயாமளம், பைரவரின் அறுபத்து நான்கு கோலங்களை விளக்குகிறது. அசிதாங்க, ருரு, சண்ட, குரோத, உன்மத்த, கபால, பீஷண, சம்ஹார ஆகிய எட்டு வகையான பைரவரும் மேலும் எட்டு வகையான அம்சங்களில் சிவாலயங்களில் அமையப் பெற்றுள்ளனர்.