லிங்கம்

முனைவர் கி.கந்தன்,
துறைத்தலைவர்,
சிற்பத்துறை.

வரலாறு:

லிங்க வழிபாடு என்பது இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டே இருந்து வரும் வழிபாடாகும். சிந்து சமவெளி நாகரிகத்தில் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே சிவலிங்கவழிபாடு இருந்திருக்கலாம் என்று அவ்விடத்தில் கிடைக்கப்பெற்ற கூம்பு(Conical) வடிவ மற்றும் வட்ட (Ring) வடிவக் கற்களை அடிப்படையாகக் கொண்டு சர்ஜான்மார்ஷல் என்ற ஆய்வாளர் கருதுகிறார்.
லிங்கம்

கந்த என்ற அகநானூற்றிலும். கந்திர்ப்பாவை என்று மணிமேகலையிலும் குறிப்பிடப்படும் சொற்றொடர்கள் லிங்கத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதுவரையில் கிடைக்கப்பெற்ற சிவலிங்கங்களில் ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குடிமல்லம் என்ற இடத்தில் உள்ள கோதண்டராமேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள லிங்கத்திருமேனி கி.மு. ---- முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதுவே காலத்தால் தொன்மையானதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். தமிழகத்தில் பிற்காலப் பல்லவர் குடவரையில் சிவலிங்கம் என்பது மைய வழிபாட்டுப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

படிமக்கலை:

சிவ லிங்கம் என்பது பொதுவான நிலையில் தொன்மைக் கால மக்களின் குறியீட்டுவழிபாட்டின் தொடர்ச்சி என்று கூறலாம். இது சிவனின் அரூப திருமேனியாக கருதப்படுகிறது. ( படிமங்களின் அடிப்படையில் சிவலிங்கம் என்பது ஆவுடை (அடிப்பகுதி ) மற்றும் லிங்கம் (மேல்பகுதி) என்னும் இரு பகுதியாக அமைந்துள்ளது. பிருக்கிருதி மற்றும் புருஷா என்ற கோட்பாட்டின் உருவகமாக இது அமைகிறது. பானம் அல்லது லிங்கம் என்றும் கூறப்படும் பகுதி சிவபாகம், விஷ்ணுபாகம் மற்றும் பிரம்ம பாகம் என்று 3 ஆக அழைக்கப்படுகிறது. சிவஆலயங்களில் கருவறைப் படிமமாக அரூப வடிவத்தில் உள்ள லிங்கமே வழிபடப்பட்டு வருகிறது.