அப்பிரகம்
[ மருத்துவ பயன்கள் மற்றும் அறிவியல் ஆய்வுகள் ]

முனைவர் வீ.இளங்கோ
உதவிப்பேராசிரியர்
சித்த மருத்துவத்துறை

சித்த மருத்துவ இலக்கியங்கள் கூறும் பலவகை மருந்துகளில் அப்பிரகத்திலிருந்து செய்யப்படும் பற்ப, செந்துரங்களும் அடங்கும். அப்பிரகம் என்பது இந்திய இலங்கையின் மலைப் பகுதிகளில் கிடைக்கும் ஒருவகைத் தாதுப்பொருளாகும். இதன் மருந்துகள் காயசித்தி மற்றும் யோகசித்திகளை உண்டாக்கக்கூடியதெனச் சித்த மருத்துவ இலக்கியங்களான தேரன் யமகவெண்பா, தேரன் சேகரப்பா, திருமூலர் திருமந்திரத்திரட்டு ஆகிய நூல்கள் குறிக்கின்றன. போகர் 7000-இல் இது இறைவி பார்வதி தேவியின் ருது பூமியில் மலைகளில் படிந்து உண்டானதாக உரைக்கப்படுகிறது.

அப்பிரக வகைகள் :

அப்பிரகத்தில் நாகப்பிரகம், மண்டூக அப்பிரகம், கிருஷ்ணாப்பிரகம், வச்சிர அப்பிரகம் ஆகிய வகைகள் உள்ளன. இவற்றை மருந்தாகப் பயன்படுத்த பற்பமாகவோ, செந்தூரமாகவோ, சுண்ணம் அல்லது களங்காகவோ பயன்படுத்த வேண்டும்.

வேதியியல் பண்புகள் :

பொதுவாகக் கிடைக்கும் அப்பிரகத்தின் வகைகளில் ‘மஸ்கோவைட்’ (Muscovite) மருந்து செய்யப் பயன்படுத்தக்கூடியது. அப்பிரகம் வேதியியல்படி பொட்டாசியசிய வகையைச் சேர்ந்தது. இதன் வேதியியல் குறியீடு (OH)2 K AI2 (AI Si3 O10) ஆகும். வேதியியல் பகுப்பாய்வுகளின்படி அப்பிரகம்-அலுமினியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியத்தின் ஆர்த்தோ சிலிக்கேட் கூட்டுக் கலவையாகும். இதில் குரோமியம், மங்கனீசு, போரான், பேரியம், டைட்டானியம் ஆகிய நுண் தனிமங்கள் உள்ளன.

மருத்துவப் பயன்கள் :

அப்பிரகத்தினைச் சுத்தி செய்த பிறகே பற்பமாகவோ, செந்தூரமாகவோ புடமிடல் வேண்டும். அகத்தி இலைச்சாறு, எருக்கிலைச்சாறு போன்ற பல மூலிகைச் சாறுகள் ஒன்றன்பின் ஒன்றாக விட்டு அரைத்து ஊறவைத்து புடம் இடப்படுகிறது. புடலஞ்சாறு, துளசிச்சாறு மற்றும் பீர்க்கஞ் சாறு போன்ற பல்வேறு துணை மருந்துகளுடன் சேர்த்துக் கொடுக்கும் போது உரிய மருத்துவப் பயன்களைக் கொடுக்கிறது.

இவ்வாறு பல்வேறு துணை மருந்துச் சாறுகளுடன் சேர்த்துக் கொடுக்கும் போது வாத பித்த நோய்கள், நீரிழிவு, நீர் அருகல், கண் வலிப்பு, கண் எரிச்சல், சூலை மற்றும் விஷக்கடி நோய்கள் தீரும். அனைத்து வகை மேக நோய்கள் தீரும் எனச் சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

அறிவியல் ஆய்வுகள் :

தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத் துறையில் மேற்கொண்ட மருந்தியல் ஆய்வுகளில் நீரிழிவு மற்றும் கல்லீரல் நோய்களுக்கு அப்பிரக பற்பம் நோய் தீர்க்கும் செயல்திறன் பெற்றிருந்தமை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அப்பிரக பற்பம் (100புடம்) ஆய்வக எலிகளுக்கு 10 மி.கி/100 கி உடல் எடை என்ற அளவில் வாய் வழியாக வழங்கப்பட்ட போது நீரிழிவு நோயில் உண்டான சர்க்கரை அளவைக் குறைத்ததுடன் இரத்த இன்சுலின் அளவும் கல்லீரல் கிளைக்கோசன் அளவும் அதிகரித்து நீரிழிவு நோய் தீர்க்கும் செயல்திறன் ஆற்றியது. மேலும் ஆய்வக எலிகளில் உண்டாகும் கல்லீரல் நோயில் பித்தநீர் மற்றும் கல்லீரல் நோதிகளைக் கட்டுப்படுத்தி செயல்திறன் ஆற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில மருந்தியல் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பண்டுவ ஆய்வுகளில் இது நீரிழிவு நோயாளிகளுக்குக் கொடுத்த போது 30 நாட்களில் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.