கருணைக்கிழங்கு – ஆரோக்கிய உணவு

முனைவர் வா. ஹஸீனாபேகம்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
சித்த மருத்துவத்துறை

அன்றைய நாளின் அறிவியல் ஞானிகளான, சித்தர்கள் தம் அனுபவங்களை மக்களுக்கு ஆரோக்கியம் காக்கும் மருந்துகளாகவும், உணவுகளின் மருத்துவ முறைகளையும் கூறியுள்ளனர். இதில் ‘உணவே மருந்து’ என்பது அவர்களது முதன்மையான கருத்தாகும்.


உணவுகளில் கிழங்கு வகைகளைக் குறிப்பிடும் போது கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்கைப் புசிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.


இந்தக் கிழங்கில் குளுக்கோமேனன் என்ற மாச்சத்து உள்ளது. இதில் பயனுள்ள நுண்ணுயிரிகள் வளர்வதற்குச் சிறந்த ஆகாரமாக உள்ளது. கருணைக்கிழங்கு உணவாகப் புசிக்கப்பட்ட நிலையில் குடற்பரப்பில் பயனுள்ள நுண்ணுயிரிகள் பெருக்கமடைந்து உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. லேக்டிக் அமிலம் உற்பத்தி செய்யும் பயனுள்ள நுண்ணுயிரிகளுள் பைபிடோபேக்டீயா, பெருங்குடல் பகுதியில் தங்கிக் கிடக்கும் நுண்ணுயிரி ஆகும். குடற்பகுதியில் 109 என்ற எண்ணிக்கை இருக்கும். நோய் நிலையில், குறிப்பாகச் சீதக்கழிச்சல் போன்ற நிலைகளில் எடுக்கப்படும் கிருமி கொல்லி மாத்திரைகள் அதிகமாக எடுத்துக்கொள்ளும் நிலையில் இந்நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடுகின்றது.


கருணைக்கிழங்கைச் சமைத்துண்ணும் போது, அதிலுள்ள குளுக்கோமேனன், பயனுள்ள நுண்ணுயிரிகள் வெகுவாகப் பெருக்கமடையச் செய்து, குடலின் உட்பரப்பு திசுக்கள் வளர்ச்சியைச் சீராக்குகின்றன.


மேலும், இந்நுண்ணுயிரிகள் வைட்டமின்களான தயமின், போலிக் அமிலம், நிக்கோட்டினிக் அமிலம், வைட்டமின் பி 12 போன்றவற்றை உற்பத்தி செய்து உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. மேலும், அவை உற்பத்தி செய்யும் வேதிமப் பண்புகள் கொழுப்புயர்வு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்குச் சிறந்த மருந்தாக உள்ளன.


இவ்வாறாக, கருணைக்கிழங்கு மாண்பு, பயனுள்ள நுண்ணுயிரிகள் பெருக்கமடையச் செய்து, தீய நோய்க் காரணிகள் மற்றும் நச்சுப் பொருட்கள் தேக்கமடைவதை வெகுவாகத் தடுத்து உடல் ஆரோக்கியம் காக்கும் ஆரோக்கிய உணவுகளில் ஒன்றாக விளங்குவது அறிவியலினால் அறியப்பட்டுள்ளது. சித்தர்களின் சிந்தளைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.