தாம்பூலம்
முனைவர் வா. ஹஸீனாபேகம்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
சித்த மருத்துவத்துறை
தமிழர்களின் மரபு சார் கலாச்சாரப் பண்பாக
விருந்து உபசரிப்பின் போது வழங்கப்படுவது தாம்பூலம் ஆகும். இது வெற்றிலை,
பாக்கு, சுண்ணாம்பு சேர்ந்ததாகும்.
இம்மூன்றைச் சேர்த்து வாயில் போட்டு மெல்லும்போது வாய் சிவக்கும். இவ்வாறு
சிவக்கும் தன்மை நமது உமிழ்நீரின் கார அமிலத் தன்மையையும் கால்சியத்தினுடைய
சுண்ணாம்பினைப் பொறுத்து அமைகின்றது. வாய் நன்கு சிவத்தல், பெண்டீருக்குச்
சிறந்த அன்பிற்கான அடையாளமாகக் கருதப்படுகின்றது.
சித்த மருத்துவத்தில் நோயணுகா விதிகளில் தாம்பூலம் தரிக்கும் முறையைப் பற்றி
கூறப்பட்டுள்ளது. அதாவது, காலையில் பாக்கை அதிகமாக்க் கொண்டு தாம்பூலம் தரித்தல்
மலச்சிக்கல் நீக்கும் என்றும், மதியம் சுண்ணாம்பைச் சிறிது கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளுதல்,
உணவு எளிதில் சீரணமாக்கும் என்றும், இரவில் வெற்றிலை அதிகரித்துப் பயன்படுத்துதல்
வாயில் துர்நாற்றம் போக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தாம்பூலம்
தரிக்கும் போது வெற்றிலையை முதலில் மென்று பின் பாக்கு, சுண்ணாம்பு தடவிய
வெற்றிலை போட்டுத் தாம்பூலம் தரிப்பது நன்று என்று கூறப்பட்டுள்ளது. மேலும்
முதலில், ஊறும் எச்சில், இரண்டாவது ஊறும் எச்சில், உடலுக்கு நஞ்சாகும் என்றும்,
மூன்றாவது ஊறும் நீர் அமிர்தமாகும் என்றும், நான்காவது ஊரும் ஊறும் நீர்
அதி இனிப்பாகி நன்மை பயக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக மூன்றாம்,
நான்காம் சுவை நீரை விழுங்கி மற்றவற்றைத் துப்புதல் அறிவுக்கும் விழிக்கும்
நன்மை பயக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பாக்கு மரத்தின் 9 மாதங்கள் முற்றிய கொட்டை விதை உரிய முறையில் சுத்தகரிக்கப்பட்டு,
பாக்காகப் பயன்பாட்டுக்குக் கிடைக்கின்றது.
துவர்ப்பு சுவை அதிகம் கொண்டுள்ள பாக்கில் ‘டேனின்’ என்ற மூலப்பொருள் உள்ளது.
மேலும், புரோசைனிடின் என்ற வேதிப்பொருளும் உள்ளன. இவை தனித்த அயனிகளை அழிக்கும்
செயல்புரிகின்றன.
குறிப்பாக, ஞாபக மறதி மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தும் மூளை நரம்புச் சிதைவு
வேதிம நச்சுக் காரணிகளை சிதைத்து உரிய பாதுகாப்பு அளிக்கின்றது. பாக்கின்
மூலப்பொருட்கள் வயதாகும் நிலையில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்க அழகு
சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.
குடற்பகுதியில் மிகுந்த கொலஸ்ட்ரால், குளுக்கோஸ் உறிஞ்சுதலை வெகுவாகத் தடுக்கின்றது.
மாச்சத்து உணவால் ஏற்படும் உடற்பருமனை வெகுவாகக் குறைக்கின்றது என்று பல
நன்மைகளை உடலுக்கு அளிக்கின்றது.
வெற்றிலையிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்ப் பசைப் பொருளுடன் முக்கிய பிளேவோனாய்டு
மற்றும் ஆல்கஹாய்டுகள் உள்ளன. இவையும் உடலில் நோயை ஏற்படுத்தும் தனித்த அயனிகளை
அழிக்கும் தன்மை கொண்டுள்ளன என்று அறிவியல் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன.
சுண்ணாம்பில் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் இரத்தத்தில் மாதவிடாய் நின்ற
பெண்களுக்கு மிகக்குறைவாக இருக்கும். இந்நிலையில் எலும்புப் பகுதியிலிருந்து
கால்சியம் சத்து வெளியேறி இரத்தத்தில் சீரான அளவு இருக்க உதவுகின்றன. இந்நிலையில்
எலும்பின் திடத்தன்மை பாதிக்கப்பட்டு எலும்பு தேய்மான நோய் ஏற்படுகின்றது.
மேலும், கால்சியச்சத்து நரம்பு மண்டலத்தின் உணர்வுக் கடத்திகளாகவும், செல்களின்
வெளிச்சவ்வில் நொதிகளின் செயல்பாட்டிற்கும், தசைத்திசுக்களின் செயல்பாட்டிற்கும்
அவசியம் தேவையாகின்றது.
எனவே, கொழுப்பு மற்றும் புரதம் மிகுந்த உணவு அதிகமாக உட்கொண்ட நிலையில் தாம்பூலம்
தரித்தல் அவசியமாகும். பாக்கு குடலில் மிகுந்த கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைத்
தடுத்து இரத்தத்தில் கொழுப்பு மிகுதலைத் தடுக்க உதவுகின்றது. மேலும் கால்சியம்
சத்துள்ள சுண்ணாம்பு செரிமானத்திற்கான தூண்டுதல் செய்து எளிதில் சீரணிக்க
உதவுகின்றது. வெற்றிலைச்சாறு குடற்பகுதியில் பயனுள்ள நுண்ணுயிரிகள் பெருக்கத்தை
அதிகரிக்கின்றது. பயனுள்ள நுண்ணுயிரிகள் பெருக்கம் உணவு ஒவ்வாமை போக்க உதவுகின்றது.
நோய் எதிப்பாற்றல் மிகச் செய்கின்றது. உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியாக்குகின்றது.
மேலும், கல்லீரலில் புரத உணவால் மிகுத்து தேங்கும் அமோனியாவை வெளியேற்றிப்
பாதுகாப்பு அளிக்கின்றது.
எனவே சித்தர்கள் கூறியது போது தினமும் ஒருவேளை அல்லது விருந்து உணவு உட்கொண்ட
வேளைகளில் தாம்பூலம் தரிப்பதை அவசியமாகக் கொள்ளலாம்.
திராட்சை விதையினின்று பெறப்பட்ட ‘புரோசைனிடின்’ என்ற பல் நிலை பினாலக் அமில
மூலப்பொருள் தனித்த அயனிகள் எதிர்ப்பான் செயலாற்றுவதற்கும், புற்றுச் செல்களை
அழிப்பதற்கும் இன்று சிறந்த மருத்துவ உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.
இந்த ‘புரோசைனிடின்’ வேதிமப் பண்பு பழங்கள், காய்கறிகள், விதைக் கொட்டைகள்,
மரப்பட்டை மற்றும் பூக்களில் காணப்படுகின்றது. இது இரத்தக்குழாய் அடைப்பு
நீக்கி விரிவடையச் செய்தல், வீக்கம் கரைத்தல், சுழற்சி எதிர்த்தல் மற்றும்
தொற்றுக்கிருமிகளைச் செயல்படுத்தப்படுகின்றது என்று அறிவியல் ஆய்வின் மூலம்
உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகு வேதிமப் பண்பான ‘புரோசைனிடின்’ நாம் தாம்பூலத்தில்
பயன்படும் பாக்கிலிருப்பது, பாக்கைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை
மிகவும் தெளிவாக விளக்குகின்றது.
|