2.1 சிலப்பதிகாரம்

சிலம்பு ஓர் அணிகலன்; மகளிர் காலில் அணிவது. சிலப்பதிகாரத்தில் இருவர் சிலம்புகள் இடம் பெறுகின்றன. கண்ணகி அணிந்த சிலம்பு ஒன்று; அதன் உள்ளீடு மாணிக்கம்; பாண்டிமாதேவி அணிந்த சிலம்பு ஒன்று; அதன் உள்ளீடு முத்து. இவ் இரு சிலம்புகளால் விளைந்த பூசலே காப்பியக் கதை. இவ்விருவர் சிலம்பும் அழகில், தரத்தில், புற அமைப்பில் ஒரே மாதிரியாக அமைந்ததே இதற்குக் காரணம். எனவேதான் சிலம்பால் விளைந்த அதிகாரம் சிலப்பதிகாரம் ஆயிற்று.

● எந்தச் சிலம்பு?

யார் சிலம்பால், விளைந்தது சிலப்பதிகாரம்? கண்ணகி சிலம்பா? பாண்டிமாதேவி சிலம்பா? இது கேள்வி. தேவியின் சிலம்பு அரண்மனைப் பொற்கொல்லனால் திருடப்பட்டு இருக்காவிட்டால் கோவலன் கொலை நடந்திருக்காது. எனவே பாண்டிமாதேவி சிலம்பே காப்பியப் பெயர்க் காரணமானது என்பது பேராசிரியர் வ.சுப. மாணிக்கனாரது முடிவு. ஆனால் கண்ணகி சிலம்புதான் காப்பியப் பெயரில் இருப்பது என்பது பலரும் ஏற்கும் கருத்து. கண்ணகியே காப்பியத் தலைவி; அவள் கோவலனிடம் தன் சிலம்புகளைக் கொடுத்து இருக்காவிட்டால், இந்தக் கதை மதுரை வரை வந்திராது.

2.1.1 ஆசிரியர் - இளங்கோ வரலாறு

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்று பாரதியாரால் புகழப்பெற்ற முப்பெரும் புலவருள் ஒருவர் இளங்கோ. இளங்கோ சேரவேந்தன் சேரலாதனின் இளைய மகன்; மூத்தவன் சேரன் செங்குட்டுவன். இவர் இளவரசன் ஆதலால் இளங்கோ என அழைக்கப்பட்டார்; துறவு பூண்டதால் அடிகள் என்ற சிறப்புப் பெயருடன் இளங்கோ அடிகள் எனச் சிறப்பிக்கப் பெற்றார். இவர் துறவு பூண்டதற்கான காரணம் என்ன? அடிகளே வரந்தரு காதையில் குறிப்பிடுகிறார்; சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பி விழா நடத்தியபோது, தெய்வமாகிய கண்ணகி தேவந்திமேல் வந்து தோன்றி அங்கு வந்திருந்த இளங்கோவடிகளை நோக்கி அவரது உயர் பண்பைப் பாராட்டிப் பேசுகிறாள்.

‘இளவரசே! வஞ்சிமாநகரின் மணி மண்டபத்தில் நின் தந்தை சேரலாதன், தமையன் செங்குட்டுவனுடன் அமர்ந்திருந்தாய்; அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன், அரசனாக வீற்றிருக்கும் அழகிய வடிவ இலக்கணம் உனக்கே உண்டு என்று கூறினன்; அப்போது நீ நிமித்திகனைக் கோபத்துடன் பார்த்துச் செங்குட்டுவன் மனத்துயர் நீங்குமாறு உடனே துறவு பூண்டனை; இதனால் உனக்கு நாட்டை ஆளும் பொறுப்பு நீங்கியது; அதே நேரத்தில் மனத்தாலும் எண்ண முடியாத, எல்லை இல்லாத பேரின்பத்தை அளிக்கும் வீட்டுலகை ஆளும் அரசனாக ஆனாய்’, இவ்வாறு கண்ணகித் தெய்வம் இளங்கோவுக்கு அருள் செய்கிறாள்.

இச்செய்தி சிலப்பதிகாரப் பதிகத்திலும் இடம்பெறுகிறது. இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றாலும், அவர் எல்லாச் சமயத்தையும் சமமாக மதித்தவர். எந்தவிடத்தும் அவர் சமயக் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. பிற சமயத்தை, சமயத்தினரைப் பழித்ததில்லை. மாறாகப் பிற சமயத்தை - சமயக் கணக்கரைப் போற்றியுள்ளார்.

2.1.2 சிலப்பதிகாரம் எழுந்த காலம்

சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியம் என்பது பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இதற்கான அடிப்படைச் சான்றுகளில் ஒன்று இளங்கோ சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது. இச்செங்குட்டுவன் சங்க இலக்கியத்தில் ஒன்றான பதிற்றுப்பத்தில் பாடப் பட்டவன்; இன் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

அடுத்த சான்று, வரந்தரு காதையில் இடம் பெறும் கண்ணகி வழிபாட்டில் இலங்கை வேந்தன் கயவாகு கலந்து கொண்டான் என்பது. இவன் காலமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது இலங்கை வரலாற்றால் அறியப்படுகிறது.

மூன்றாவதாகச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களிலும் இடம்பெறும் பதிகங்களில் ‘‘இளங்கோ சிலம்பு பாடச் சாத்தனார் கேட்டார்’’ எனவும், ‘‘சாத்தனார் மணிமேகலை பாட இளங்கோ கேட்டார்’’ எனவும் கூறப்பட்டுள்ளன. இங்குக் குறிக்கப் பெறும் சாத்தனார் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பது அறிஞர் கண்ட முடிவு. இவற்றால் சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியம் என்பது உறுதி செய்யப்படுகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

இளங்கோவடிகள் காலம் யாது?

விடை
2.

சிலப்பதிகாரம் - பெயர்க்காரணம் கூறுக.

விடை
3.

இளங்கோ துறவிற்கான காரணம் யாது?

விடை
4.

இளங்கோவின் சமயம் யாது?

விடை