இவ்வைந்து
காப்பியங்களும் விவிலிய வரலாற்றையே பெரிதும்
தழுவி நிற்பதால், விவிலிய வரலாற்றில் குறிப்பாக
இயேசுபெருமானின் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெறுவோரே,
இக்காப்பியங்களின்
கதைமாந்தர் ஆகின்றனர். இவர்களைப் பற்றி
இக்காப்பியங்களில் கூறப்பட்டுள்ள முறையும், விவிலியப்
போக்கைப் பெரிதும் தழுவியே நிற்கிறது எனலாம். இனி, இவர்தம்
பண்புகள் சிலவற்றைக்
காண்போம்.
3.3.1 காப்பியத்
தலைமை மாந்தர் மாண்பு
திருவாக்குப் புராணத்தைத்
தவிரப் பிற நான்கு
காப்பியங்களும் இயேசு பெருமானையே
காப்பிய நாயகராகக்
கொண்டு அமைகின்றன. விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த
இறைமகன் இயேசு
கிறித்துவின் பெருமையையே இவை பலவாறு
பேசுகின்றன. எனினும் விவிலிய வரலாற்றுக் கதைகளுக்கும்
கருத்தோட்டதிற்கும் புறம்பாகவோ மாறாகவோ பேசுவதில்லை.
●
இயேசுவின் பெருமை
சுடர்மணி என்னும் காப்பியம், இயேசுவை
உலக மீட்பர்,
வள்ளல், அண்ணல், தூயோன் என்றெல்லாம் பாராட்டுகிறது.
இவ்வாறு பல அடைமொழிகளால் பாராட்டுவதோடு, அவரது
மனித வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகளின் வழியாகவும் அவரது
பெருமையை வெளிப்படுத்துகிறது. சான்றாக, நயீம் என்ற ஊருக்குத் தம் சீடர்கள் புடைசூழ
இயேசு சென்றபோது, அங்கே தன் மகனை இழந்த ஒரு தாயைக்
காண்கிறார்.
அவளது மகன் ஒரு பாடையில் (இறந்த உடல்கள்
எடுத்துச் செல்லப்படும் ஒரு படுக்கை) வைத்து எடுத்துச்
செல்லப்படுகிறான். அதன் பின்னால் அழுது புலம்பிக் கொண்டே
இறந்தவனது தாய் செல்கிறாள்.
இயேசு பெருமான் அவளை
அன்புடன் அழைத்து, "பெண்ணே! அழவேண்டாம். உன் மகன்
எனது சொல்லைக் கேட்டு, உயிருடன் எழுவான்" என்று
ஆறுதலாகப் பேசுகிறார். அவ்வாறே, தமது சொல்லின் ஆற்றலால்,
அம்மகனை உயிரோடு எழுப்பி, அத்தாயிடம் ஒப்படைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியைக் கவிஞர்
உருக்கமாக வருணிக்கிறார்.
இறைவனின் இரக்கம் இங்கே
எண்ணிடில் வியப்பே தோன்றும்
குறையுளோர் வந்து நின்று
குறைசொல்லி இரக்கா முன்னர்
குறைகண்ட இறையே முந்திக்
குறைதீர்த்த பண்பு...
(அற்புதப்
படலம்:389) |
(இரக்கம்
= கருணை; இரக்கா முன்னர் = வேண்டிக்
கொள்வதற்கு முன்பே)
என்று இயேசுவின் கருணை உள்ளத்தைப் பாராட்டுகிறார்.
அதாவது, வாழ்வில் குறையுள்ளவர்கள், தம்குறையை வந்து
இயேசுவிடம் தாமாகச் சொல்லிக் குறை தீர்க்குமாறு வேண்டிக்
கொள்வதற்கு
முன்பாகவே, தாமே அவர்களது குறைகளைத் தீர்த்து
வைக்கும் இரக்கமுடையவர் என்று அவரைப்
போற்றுகிறார்.
3.3.2 பிற கதைமாந்தர் பண்புகள்
இக்காப்பியங்களில்
இடம்பெறும் பிற கதை மாந்தர் என்று
கருதும் போது, இயேசு பெருமானின் வாழ்வுடன் இணைந்த
மக்களையே
குறிப்பிட வேண்டும். இயேசு பெருமானின் பன்னிரு
மாணாக்கர்கள், அவரது மானிடப் பெற்றோரான அன்னை
மரியாள், தந்தை சூசை மற்றும் இயேசுவின் அருட்செயல்களாலும்
அருளுரைகளாலும் பயன்பெற்றோர் முதலியோர்
இக்காப்பியங்களில் சிறப்பாக இடம்பெறுகின்றனர். இவர்களைப்
பற்றிய வருணனைகளும் விளக்கங்களும் விவிலியத்தையே
பெரிதும் தழுவி அமைவதால், தனித்தன்மை உடையனவாக
இவற்றைக் கருத முடியாது. எனினும், ஒருசில இடங்களில் இத்தகு
கதைமாந்தர் சிறப்பான
வருணனைகளுக்கு உரியவராகின்றனர்.
● செல்வன்
கிறிஸ்து மான்மியத்தில் வரும் இலாசரு சருக்கம் எனும் பகுதியில்
தன்னைச் சுற்றி வாழும் ஏழையரைப் பற்றிக் கவலை கொள்ளாத செல்வனைப் பற்றிய
வருணனையைச் சுட்டலாம். இந்தச் செல்வன், பல்வேறு செல்வ வசதிகள் உடையவனாகவும்,
அழகு மிக்கவனாகவும், நல்ல
உணவு வகைகளையும் சுகபோகங்களையும் விரும்புபவனாகவும் உள்ளான். பொன் நகைகளை
அணிந்து கொள்வதிலும் நாட்டமுடையவன். ஆனால் பிறர்க்கு நன்மை செய்வதில்
நாட்டமில்லாதவன். தன்மனம் போல் வாழ முற்படுபவன். நல்ல நூல்களின் அறிவுரைகளை
இவன் கேட்கமாட்டான் என்று இவனது இழிவான இயல்புகளை வருணிக்கிறார். அக்கருத்துடைய
பாடல் பின்வருமாறு:
பாக்கியம் நிறைந்தவன்
பருத்த தோளினன்
தேக்கிய வழகினன் செழித்த வீட்டினன்
நாக்கினுக் கின்பொருள் நாடும் சிந்தையான்
போக்கிய மொன்றையே பொருளெனக் கொள்வான்
பொன்மணி அணிகளைப் பூணு றுப்பினான்
நன்மை செய்பவரை நாடாத கண்ணினான்
தன்மனப் படியெல்லாம் செய்யும் தன்மையான்
தொன்மைநூல் கேட்டிடாத் தொளைகொள் காதினான்
(இலாசரு சருக்கம் 20:1,2) |
(பாக்கியம் = பேறுகள், வசதிகள்; தேக்கிய = நிறைந்த;
போக்கியம் = சுகங்கள்; தொன்மை நூல் = பழைய நல்ல
புத்தகங்கள்; தொளைகொள் காதினான்
= ஓட்டைக் காது
உடையவன்)
● பரிசேயர்
இவ்வாறே இயேசு காவியத்தில், இயேசுவைக் குற்றம் காணவும் பழிதூற்றவும்
கருதிய பரிசேயர் முதலிய சமயத் தலைவர்களைப் பற்றி அமையும் சித்திரிப்புகளையும்
சுட்டலாம். சான்றாகக் கீழ்க்குறிப்பிடும் வரிகளைச் சுட்டலாம்.
செய்த சோதனை வெற்றி பெறாமலே
கையி ழந்த வெறும்மறை நூலினார்
தொட்ட இடம் அத்தனையும்
தோல்வியுற்ற பரிசேயர் |
(கையிழந்த = ஆற்றல் இழந்த; மறை நூலினார் = வேதத்தைப்
போதிக்கும் சமயத் தலைவர்கள்)
இயேசுவை அவமானப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாததால்,
ஆற்றல் இழந்த வெறுமையான மறை நூல் போதகர்கள், எடுத்த செயல் எல்லாவற்றிலும்
தோல்வியே அடைந்த பரிசேயர்கள் என்பது இப்பாடற் கருத்து.
தன் மதிப்பீடு
: வினாக்கள் - I |
1)
|
இப்பாடத்தில் இடம்பெறும் கிறித்தவக்
காப்பியங்கள் ஐந்தின்
பெயர்களையும் அவற்றின்
ஆசிரியர்களையும் குறிப்பிடுக. |
|
விடை |
|
2)
|
இப்பாடத்தில் பேசப்படும் ஐந்து காப்பியங்களின்
கருவாகவும்
மையமாகவும் அமைவது எது? |
|
விடை |
|
3)
|
‘திருவாக்கு’ எனக் குறிக்கப்படுவது எது? அதன்
பிரிவுகள் யாவை? |
|
விடை |
|
4)
|
காப்பிய நாயகராம் இயேசுவை, இக்காப்பியங்கள்
பாராட்டும்
முறைக்கு இரு சான்றுகள் தருக. |
|
விடை |
|
|