3.2 கதைமாந்தர் |
புலவர் குழந்தையின் இராவண காவியம் இராவணனைத் தலைவனாகக் கொண்டு இயங்குவதாகும். இராவண காவியத்தின் இராவணனைத் தவிர இராமன், இலக்குவன், சீதை, பரதன், கும்பகன்னன், பீடணன், காமவல்லி, வண்டார்குழலி முதலிய பல காப்பிய மாந்தர்கள் வலம் வருகின்றனர். எனினும் நெஞ்சில் நிற்கும் கதைமாந்தர்கள் என்ற வகையில் இராவணன், கும்பகன்னன், பீடணன், இராமன், வண்டார்குழலி, சீதை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். |
இராவண காவியத்தின் தலைவன் இராவணன். இராம கதையின் காப்பியத் தலைவன் இராமன். எதிர்நிலைத் தலைவன் இராவணன். இராவண காவியத்தின் காப்பியத் தலைவன் இராவணன், எதிர்நிலைத் தலைவன் இராமன். கம்பனின் இராமகாதை தோன்றி ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் கழித்து அதனை மறுக்கும் நோக்கில் இராவண காவியம் தோன்றியதால் காப்பிய மாந்தர்களின் பண்புநலனிலும் இயக்கத்திலும் நோக்கத்திலும் அதன் எதிரொலியைக் காணலாம். |
|
இராவணன் என்னும் பெயர் சிறப்பிற்குரியது. அவன் பெற்றோர் அவனுக்கு இராவணன் என்னும் பெயரிட்டு அழைத்தனர். |
ஈன்றவர்
உவந்து மக்கட்கு இராவணன் இவனாம் என்ன |
(இலங்கைக் காண்டம் ;1 இராவணப் படலம், 4) |
(ஈன்றவர் = பெற்றோர் ; ஆன்ற = பொருந்திய) |
இராவணன், அதாவது இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருள். மேலும் இராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு. |
|
மழலைப் பருவத்திலேயே தமிழ் உணர்ச்சி மிக்க குழந்தையாக இராவணன் திகழ்ந்தான். தமிழ்மொழியைச் சொந்தத் தாய்மொழி என்றும் தமிழகம் எங்கள் தாயகம் என்றும் கொண்டான். அவன் அன்னை கேகசி அவனைப் பாலும் சோறும் ஆகிய அமிழ்து உண்ணெனப் பணித்தபோது அவன் ‘தமிழ் உண்டேன் அமிழ்து வேண்டாம்’ என்று உரைத்தான் என்பது அவன் தமிழ்க்காதலைக் காட்டுகிறது. இராவணன் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக் கற்றான். இசைத் தமிழைக் கற்றுப் பல்லோர் போற்றும் இசைத்தமிழ்ப் புலவன் ஆனான். யாழிசை வல்லவன் ஆனான். நாடகத்தமிழ் நயங்களைக் கற்றுத் தேர்ந்தான். அகமும் புறமும் ஆன பொருளதிகாரம் முற்றும் கற்றான். தானே தமிழிசை நூலும் ஆக்கித் தந்தான். வில் போரும் வாள் போரும் செய்வதில் வல்லவனாய்த் திகழ்ந்தான். |
|
இராவணன் குடிமக்களின் பழிச்சொல்லுக்கு அஞ்சிச் செங்கோல் ஆட்சி புரிந்தான். துலாக்கோல்போல் நடுவுநிலை பிறழாத நன்னெஞ்சன்; கதிரவன் தனக்கென எதையும் விரும்பாதது போலத் தனக்கென எதையும் விரும்பாதவன்; நிலம் போன்ற பொறுமை சான்றவன்; அடக்கம் நிறைந்தவன்; உயிர்களை அன்னை போன்று போற்றுபவன்; தனக்கு நிகர் தான் என்னும் தகவுடையவன். முன்னையோர் போற்றிய வழியைப் போற்றி ஒழுகுபவன். இவ்வாறு புலவர் குழந்தை இராவணனின் தமிழ்மொழிப் பற்றையும் அவன் கலைத்திறனையும் இயல்பையும் விவரிக்கின்றார். |
|
இராவணனின் காதல் களவு வழிப்பட்டதாகும். மலைவளம் காணச் சென்ற இராவணன் அங்கு முல்லை நாட்டு மன்னன் மாயோன் மகள் வண்டார்குழலி என்னும் பெயராளைக் கண்டு காதலுற்றான். அவளைக் கண்ட அளவில் ‘மனமும் இரு கண்ணும் கருத்தும் ஒருங்கே பறிகொடுத்தான்; அவளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினான்; அவளை இன்னாரெனத் தெரியாது தடுமாறினான்’. |
யாரோ
இவள்தான் எவ்வூரோ (2.இலங்கைக் காண்டம், 3. காட்சிப்படலம், 78) |
பண்டைத் தமிழ் மரபிற்கு ஏற்ப, இராவணன் வண்டார் குழலியின் அழகால் ஈர்க்கப்பட்டு மயங்குவதை இதனால் அறியலாம். வண்டார் குழலியின் உள்ளமும் உணர்வும் தன்பால் உள்ளதை இராவணன் குறிப்பால் உணர்ந்தான். அவன் அவளிடம் ‘நின்னைப் பிரியேன் பிரியேன்’ என உரைத்தான். இராவணன் தான் முதல் நாள் சந்தித்த அதே இடத்தில் அவளை மறுநாளும் கண்டு மகிழ்ந்தான். அவனும் அவளும் ‘உளம்’ கலந்து ஒன்றாயினர். அவளைப் பிரிந்து இராவணன் பிரிவுநோயால் வாடுவது போல வண்டார்குழலியும் அவனைப் பிரிந்து பிரிவு நோயால் வாடி நொந்தாள். இராவணனைத் தன் மகள் வண்டார்குழலி விரும்புவதை அறிந்த மாயோன் தன் அமைச்சரை அவன்பால் அனுப்பி அவன் கருத்தை அறிந்தான். இராவணன் வண்டார்குழலியை நெஞ்சாரக் காதலிப்பதை வெளிப்படுத்தினான். அவளை மணந்து கொள்ளவும் இசைவு தெரிவித்தான். இராவணனின் காதல் உள்ளமும் உணர்வினால் ஒன்றிய வண்டார்குழலியை மணந்து வாழும் வேட்கையும் தெளிவாகின்றன. |
|
அரசியல் நெறி உணர்ந்த அறிஞனராகவும் இராவணன் திகழ்ந்தான். இராவணன் செந்தமிழ்ப் பொருள் நூல்களைக் கற்று அவற்றின்படி அரசு நடத்தினான். நடுவுநிலைமையும் இன்சொல்லும் ஈகையும் பொறுமையும் அஞ்சாமையும் ஆண்மைத்திறமும் கொண்டு ஆட்சி புரிந்தான். ஈட்டலும் காத்தலும் வகுத்தலும் வழுவிலாது செய்தான். வினையாற்றும் திறன் மிக்கானாய், வினைக்குரியோர்களைத் தேர்ந்து, வினையின் விளைவையும் நாடிச் செயல்பட்டான். ஆற்றல் மிக்க நல்லமைச்சரின் துணை கொண்டு நல்லாட்சி நடத்தினான்; அவனிடம் மறதியும் இல்லை; சோம்பலும் இல்லை. எங்கும் குறையொன்றும் இல்லாதபடி ஆட்சி புரிந்ததால், மாதம் ஒரு முறை நடக்கும் குறைகேட்கும் மண்டபத்திற்கு மக்கள் வரவும் இல்லை. ஆண்டுக்கொரு முறை மன்னர்கள் அனைவரையும் அழைத்து அரசியல் நெறிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தினான். தமிழ் வளர்க்கும் அரும்பணியிலும் கவனம் செலுத்தினான். |
|
கல்வியின் இன்றியமையாமையை நன்கு அறிந்த இராவணன் அதன் வளர்ச்சிக்குரிய வழிவகைகளை ஆராய்ந்து செயல்படுத்தினான். |
|
இராவணன் தாய்மொழியாம் தமிழிடம் தணியாத வேட்கை உடையவன் ஆவான். தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கஞ் செறிந்த பல கருத்துகளைக் கவிஞர் முன்வைத்துள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில: மொழியின் சொல் வழக்கும் பொருள் வழக்கும் பின்னாளில் இருப்போர்க்கு ஐயம் தருமானால், அதனைப் போக்க, காலத்திற்கு ஏற்ற வழிநூல்களை ஆக்கித் தரல் வேண்டும். பழந்தமிழ் நூல்களைப் போற்றுதலோடு அமையாது, அவற்றை நன்கு ஆராய்ந்து தாம் கற்றுணர்ந்தவற்றை ஐந்திணை இயற்கையோடு கலந்து இன்றைய வாழ்விற்கு உகந்தபடி இலக்கண, இலக்கிய நூல்களையும் இசை, கூத்து நூல்களையும் படைத்தளிக்க வேண்டும். தாய்மொழியாம் தமிழ் நிலத்தை அறிவென்னும் ஏரால் உழுது ஆராய்ந்தெடுத்த மொழியாகிய நெல்விதையை விதைத்து, அணி என்னும் நல்லெருவை இட்டு, கருத்தென்னும் நீரைப் பாய்ச்சிப் பா என்னும் விளைச்சலைப் பெற வேண்டும் என்று புலவர்களை இராவணன் வேண்டுவதாக நூலாசிரியர் காட்டியுள்ளார். இராவணன் தமிழ்ப்பணியில் குறிப்பிடத்தக்கவை, புலவர்கள் ஆக்கித் தந்த அருந்தமிழ் நூல்களை எல்லாம் தன் அவையில் அரங்கேற்றியது; தக்க தமிழ்ப் புலவர்களைக் கொண்டு மாணாக்கர்க்குத் தமிழ் கற்பித்துத் தமிழகம் எங்கும் சென்று தமிழ் பரப்ப வழி செய்தது; அவ்வாறு தமிழ்ப் பணியில் ஈடுபட்டோர்க்குப் பொருளுதவி செய்தது; புலவர்க்குப் பரிசு வழங்கியது, அவர் பாடல்களைத் தொகுத்தளித்தது முதலியனவாம். |
|
நீர்வளமும் நிலவளமும் பெருக வழி கண்டான் இராவணன். வேளாளரின் உழவுத்தொழிலால் ஆட்சி நடைபெறுகிறதே அன்றி மன்னர்களின் ஈகையால் அன்று என்னும் உண்மையை உணர்ந்து இராவணன் செயல்பட்டான். உணவுத் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் உணவு கிடைக்க ஏற்பாடு செய்தான். அலுவலர்கள் மக்களை அச்சுறுத்தாமலும் பார்த்துக் கொண்டான். உலக மக்கள் மன்னர்க்காக உள்ளனர் என்ற எண்ணத்தை மறந்து, மன்னர்கள் மக்களுக்காக உள்ளனர் என்னும் உண்மையை உணர்ந்து ஆட்சி புரிந்தான். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து மக்கள் நிறைவாழ்வு வாழ வகை செய்தான். |
|
இடைவள நாட்டைத் தாடகைப்பேர் தமிழரசி ஆண்டு வந்தாள். ஆரியர் செய்யும் உயிர்க்கொலை வேள்வியை ஒழித்து நாட்டைப் புனிதமாக்க எண்ணினாள். அதற்காக இராவணனின் உதவியை வேண்டினாள். அவன் அவளுக்கு உதவச் சுவாகுவோடு மறவர்களையும் அனுப்பினான். சுவாகு தாடகையின் மகன் மாரீசனோடு இணைந்து ஆரியர்கள் கொலை புரியாதும் அவர் சோமக் கள்ளுண்ணாதும் காத்து வந்தனர். இவர்களின் காவலையும் மீறிக் கோசிகன் என்னும் ஆரியன் வேள்வி செய்தான். இதனை அறிந்த தாடகை தானே படையுடன் வந்து வேள்வித் தீயில் இடஇருந்த உயிர்களைக் காப்பாற்றி விடுவித்தாள். அவனையும் நாட்டைவிட்டுப் போகச் செய்தாள். |
|
மதிவலி அமைச்சர்கள் கூறியபடி தன் படை வீரர்களின் துணையோடு இராவணன் சீதையைக் கவர்ந்தான். அவளைத் தேரில் தென்னிலங்கைக்குக் கொண்டு வந்தான். சீதை இராவணன் பால் ‘மானம் காத்து ஓம்ப வேண்டும்' என வேண்டினாள். இராவணன் அவளிடம் 'பெண்களுக்குத் தீமை செய்வது தமிழர் இயல்பன்று; தமிழர் பெண்களுக்குத் தீமை செய்ததும் இலர். பெண்ணடிமை என்பதும் தமிழகம் அறியாதது’ என்று கூறினான். மேலும் அவன், |
வஞ்சியே
உனைநான் வஞ்சியேன், தமிழர் |
(4. பழிபுரி காண்டம், 4. சிறைசெய்படலம், பா. 47) |
(வஞ்சியே = வஞ்சிக்கொடி போன்றவளே; வஞ்சியேன் = வஞ்சனை புரியேன்) |
என்றுரைத்தான். சீதையைத் தன் தங்கையாகவே இராவணன் கருதினான். பெண் கொலை புரிந்த இராமனைத் துறந்துவிடும்படி வற்புறுத்தினான். தன் கணவனுக்குத் தீங்கு நேரா வண்ணம் காக்க வேண்டினாள். அதனை ஏற்று இராவணன், பெண்ணே வருந்தாதே. உனக்காக வேண்டி அவனைக் கொல்லாது விடுகிறேன். உன்னைத் தேடிக் கொண்டு இராமன் இங்கு வருவான் ஆயின் |
உயர்தமிழ்ப்
பெண்கள் முன் னிலையில் |
(4 பழிபுரி காண்டம், 4. சிறை செய்படலம், பா. 51) |
(பொன்றினும் = இறப்பு நேரினும்) என்று கூறினான். |
இராமன் இங்கு வரவில்லை என்றால் படை மறவர்களால் அவனைப் பற்றிக் கொண்டு வரச் செய்து, அவன் தன் செயலை எண்ணி அறிவு வந்தது என உணரச் செய்து அவனோடு உன்னையும் அனுப்பி வைப்பேன் என்றான். இராவணன் பெண்களிடம் மதிப்பும் அன்பும் உடையவன் என்பதும் பகைவனுக்கு அருளும் பண்பும் உடையவன் என்பதும் தெளிவாகின்றன. |
|
இராவணன் தன்மகன் சேயோனிடம் அளவற்ற அன்புடையன். இராமலக்குவரைப் போரில் வென்று வருவேன். இன்றெனில் போர்க்களத்தே மாய்வேன் எனச் சேயோன் சூளுரைத்தான். |
உய்யாமல்
எரிமுன்னர் வைத்தூறு போல (5. போர்க்காண்டம், 3. அடிமைப் படலம், 73) |
(உய்யாமல் = தப்பாமல்; வைத்தூறு = வைக்கோல்போர்; ஒன்னார் = பகைவர்; செஞ்சோரி = இரத்தம்) |
சேயோனின் வஞ்சினமொழி இராவணனுக்குப் பேருவகை தந்தது. அவன் தன் மகனைத் தழுவிக் கொண்டு பாராட்டினான். சேயோன் இலக்குவன் அம்பினால் கொல்லப்பட்டது அறிந்து இராவணன் உயிர் கலக்கமுற்று, கண்ணீர் ஊற்றுப் பெருகிட அழுது மண்ணில் விழுந்து புரண்டான். அவன், |
குழந்தை
யோஎனும் கோமக னேயுளங் (5. போர்க்காண்டம், 12. கையறுநிலைப் படலம், 10) |
(கோமகன் = அரசிளங்குமரன்; கோளர் = தீயர்; குழைந்தையோ = வருந்தினாயோ) |
என்று பலவாறு கூறிப் புலம்பினான். |
போர்க்களத்தில் இராவணன் இராமன் அம்பால் கொல்லப்பட்டான். இராவணனின் சிறப்பைத் தமிழ் மக்களின் உரிமை இழப்பாகப் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார். |
கொடியன்
அம்பினால் கோமகன் தன்முடி (5. போர்க்காண்டம், 13. இறைவீழ்படலம், பா. 26) |
இராவணன் காதலனாய், கல்வியின் தேவையை உணர்த்தவனாய், ஆரியர் செய்த உயிர்க்கொலை வேள்வியை ஏற்காதவனாய், பாசமிகு அண்ணனாய், தந்தையாய், பெண்மை போற்றும் பேரறிவாளனாய்த் திகழ்ந்தான் என்பதை இராவண காவியத்தின்வழி அறியலாம். |
இராவண காவியத்தின் தலைவன் இராவணன் என்றால் அதன் எதிர்நிலைத் தலைவன் இராமன் ஆவான். இராவணனின் பெருமை பேசும் இராவண காவியம், தெய்வமாகப் போற்றப்படும் இராமனைச் சிறுமதி படைத்தவனாகக் காட்டுகிறது. |
|
கோசல நாட்டு மன்னன் தசரதன்; அவன் மகன் இராமன். |
|
கோசிகன் இராமலக்குவரை இடைவள நாட்டிற்கு அழைத்துச் சென்றான். கோசிகன் தாடகையைக் கொடுமையின் உருவமாக இராமலக்குவரிடம் கூறினான். தோழியரின்றி, படைக்கலம் ஏதுமின்றித் தனித்து வந்த தாடகையின் மீது ‘பெண்ணென்றும் பாராமல்' இராமன் அம்பெய்து கொன்றான். தாடகையின் மகன் சுவாகுவும் இராமனால் கொல்லப்பட்டான். புலவர் குழந்தை இராமனைத் ‘தறுதலை ராமன்', 'இறைக்குணம் சிறிதுமில்லான்’, ‘நஞ்சினும் கொடிய பாவி’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார். காமவல்லி என்னும் மற்றொரு பெண் கொல்லப்படவும் இராமன் காரணமாக இருந்தான். காமவல்லியின் கொலைக்குக் காரணமாக இருந்த இராமலக்குவரைக் கரன் எதிர்த்தான். அவனும் இராமன் அம்புக்கு இரையானான். |
|
இராமன் சுக்கிரீவனின் நட்பைப் பெற்றான். அவன் கருத்தை ஏற்ற இராமன் வாலியை மறைந்திருந்து அம்பு தொடுத்து வீழ்த்தினான். வாலி அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தான். எல்லாவற்றிற்கும் ஆன பதிலாக இராமன் |
எனது
நண்பற்குப் பகைவன் நீ எனக்குமே பகைவன் (4 பழிபுரிகாண்டம், 6 நட்புக்கோட்படலம், 39) |
என்று பதில் இறுத்தான். |
இராமன் தன் நண்பன் சுக்கிரீவனுக்காக முறையற்ற பழிக்குரிய செயலைச் செய்தமையை இதனால் அறியலாம். |
|
தன் அண்ணன் இராவணனிடம் மாறுபட்டுத் தன்னிடம் அடைக்கலம் புகுந்த பீடணனை இராமன் ஆதரித்தான். |
|
இராமனுக்கும் கும்பகன்னனுக்கும் இடையே நடந்த போரில், இராமனுடைய அம்பொன்று கும்பகன்னன் உயிரைப் பறித்தது. புலவர் குழந்தை ‘தமிழர் தங்கள் உரிமையைப் பறிப்பான் போல உயிரினைப் பறித்தான் அந்தோ’ என்பதால் கும்பகன்னனின் இறப்பு எத்தகைய இழப்பு என்பதை அறியலாம். இராமன் தான் செய்த செயல்களைக் குற்றம் உடையன என்றோ பழி தருவன என்றோ எண்ணாமல் தான் செய்ததே சரி என்னும் இயல்புடையவன் என்பது தெளிவு. |
|
இராமன் தன் மனைவியிடத்து அன்புடையவன் ஆவான். குடிசையினுள் சீதை இல்லாமையை அறிந்து இராமன் துடித்தான். சீதையைக் கொடியவர்கள் கொன்று விட்டார்களோ என அஞ்சினான். சோலைகளைப் பார்த்தும் விலங்குகளைப் பார்த்தும் பறவைகளைப் பார்த்தும் என் மனைவியை எனக்குக் காட்டுங்கள் என்று கதறினான். மனைவியைப் பிரிந்து அவன் புலம்பிய காட்சியால் மனைவியிடத்து அவன் காதல் உள்ளம் புலனாகிறது. இராமன் எதிர்நிலைத் தலைவனாகப் பெண் கொலை புரிந்தான், உறவினரிடையே புகுந்து, அவர்கள் இடையே இருந்த பகைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான். இரண்டகம் செய்தவர்களை ஆதரித்தான் என்பனவற்றை உளங்கொள்வது சாலப் பொருத்தமாகும். |
புலவர் குழந்தை பீடணனைத் திருந்திலாப் பீடணன் என்னும் தீயன், இளைய பாழ்ம்பாவி, தமிழர் பேரினத்துக்கு அந்தோ நோய், புன்கோடரிக் காம்பு என்றிவ்வாறு எல்லாம் இழித்துரைக்கிறார். |
|
பீடணன் அண்ணனுக்கு இரண்டகம் செய்து ஆட்சி அதிகாரத்தைப் பற்றியதால் மக்களின் பழிப்பிற்கு ஆளானான் எனத் தெரியலாம். |
சனகன் மகளும் இராமனின் மனைவியுமான சீதையின் பண்புநலன்களை இவண் காண்போம். |
|
மிதிலை மன்னன் சனகனின் வளர்ப்பு மகள் சீதை. வில்லினை வளைப்பவர்கட்கு அவளை மணம் முடித்துக் கொடுக்க எண்ணிச் சனகன் ஒரு சொத்தை வில்லை நாட்டி வைத்தான். அவ்வில்லை இராமன் வளைத்து முரித்தான். சீதையை மணந்தான். |
|
கைகேசி தசரதனிடம் பெற்ற வரங்களின்படி இராமன் கானகம் சென்றான். சீதையும் உடன் சென்றாள். கணவனைப் பிரிந்து வாழ விரும்பாத அவள் உள்ளம் வெளிப்படுகிறது. இராமனின் கருத்துப்படி சீதை தன்னிடம் உள்ள அணி மணிகளை எல்லாம் ஆரியர்க்குத் தானமாக நல்கினாள். கணவன் சொல்லிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் அவள் இயல்பு இதனால் தெளியலாம். மரவுரியைத் தரித்துக் கொள்ளும் வகையறியாது சீதை திகைத்தாள். அவளுக்கு இராமன் மரவுரியை உடுத்து விட்டான். |
|
காட்டில் முனிவர்கள் இராமனைச் சந்தித்து, தாங்கள் உயிர்க்கொலை வேள்வி செய்ய உறுதுணை புரிய வேண்டுமெனக் கேட்டனர். 'நாம் போர் செய்வதை விட்டுவிட்டுக் காட்டில் தவம் புரிவது முறையாகும்’ என்று நன்மையானவற்றைக் கூறினாள் சீதை. அதற்கு இராமன் முனிவர்களுக்குச் சொன்ன சொல்லைத் தவறமாட்டேன் என்றான். பகையின்றி அமைதியாக வாழ வேண்டும் என்னும் சீதையின் எண்ணம் இதனால் விளக்கமுறுகிறது. அனுமன் சீதையைக் கண்டு இராமன் இலங்கையை அழித்து அவளை மீட்பதாகக் கூறக் கேட்டபோதும் இராவணன் பெருமையைக் கூறி, போர் வேண்டாம் என்றே தடுத்தாள். மேலும் அவள், |
கனவிலுமே
தமிழர்பகை காணுதல்தீது எனவுறையும் (4. பழிபுரிகாண்டம், 10. ஏவற்படலம், பா. 42) |
(புனைமணி = அழகு செய்யப்பட்ட; தமிழ் இறைவன் = இராவணன்) |
என்று மொழிந்தாள். தமிழரிடம் பகை பாராட்டாமல் இலங்கைக்கு வந்து இராவணனை வணங்கி அவனிடம் மன்னிப்புக் கோரித் தன்னை அயோத்திக்கு அழைத்துச் செல்லும்படி இராமனிடம் கூறும்படி அனுமனிடம் செய்தி சொன்னாள். சீதை இலங்கைக்கு அழிவில்லாமல் தான் மீட்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள் எனலாம். சீதை இராவணனின் பெருமைகளைப் பேசினாள். ஏறக்குறைய 50 பாடல்களில் அவன் பெருமைகளைப் பேசினாள். சீதை இராவணனின் இறப்பிற்காகக் கண்ணீர் சிந்தினாள். அத்தகைய சீதையை ஊரவர் அயலான் ஊரில் இருந்தவள் என்று பழிப்பதாகக் கூறி அவளைக் காட்டில் விட்டு வரும்படி செய்தான் இராமன். சீதை நல்ல பண்பு நலன்கள் மிக்கவளாக, போரை விரும்பாத புனிதையாக, நல்லதே போற்றும் நற்செல்வியாகத் திகழ்ந்தாள் என்பதை அறியலாம். |
1. |
இராவண காவியம் - பெயர் விளக்கம் தருக. |
விடை |
2. |
இராவண காவியத்தின் தோற்றக் காரணம் யாது? |
விடை |
3. |
இராவண காவியத்தின் கதைக் கருவை விவரிக்க. |
விடை |
4. |
இராவணனின் தமிழ் உணர்ச்சியை விவரிக்க. |
விடை |
5. |
பீடணன் குறித்துச் சிறு குறிப்பு தருக. |
விடை |