6.2 பால்

ஆண்பால், பெண்பால், பலர்பால் என்னும் மூவகைப் பால்களும் உயர்திணைக்கு உரியன.

(எ.டு.)
முருகன் - ஆண்பால்
வள்ளி - பெண்பால்
அறிஞர் - பலர்பால்

ஆண்பெண் பலரென முப்பால் உயர்திணை   (நன்னூல் : 262)

(எ.டு.)

ஒன்றன்பால், பலவின்பால் என்பன அஃறிணைக்கு உரியன.

மயில் - ஒன்றன்பால்
கற்கள் - பலவின்பால்

ஒன்றே பலவென்று இருபாற்று அஃறிணை   (நன்னூல் : 263)

இவற்றை முந்தைய பாடங்கள் நன்கு விளக்கி இருக்கும். அவற்றை நினைவில் கொண்டு வருக.

6.2.1 பால் வழுநிலை
 

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து பால்களுக்கு உரிய பெயர்கள் எழுவாயாகவோ வினை நிகழ்த்தும் பொருளாகவோ வரும்பொழுது, இவற்றிற்கான வினை அவற்றிற்கு உரிய பாலில் அமையாமல் வேறு பாலில் அமைதல் வழுவாகும்.

(எ.டு.)

அவன் ஓடினாள்
அவள் பாடினான்
அறிஞர் வந்தான்
அது தாவின
அவை பறந்தது

முதல் தொடரில் ‘அவன்’ என்பது ஆண்பால்; ‘ஓடினாள்’ என்னும் வினைமுற்றுப் பெண்பால்.

இரண்டாம் தொடரில் ‘அவள்’ என்னும் சொல் பெண்பால்; ‘பாடினான்’ என்னும் வினைமுற்று ஆண்பால்.

மூன்றாம் தொடரில் ‘அறிஞர்’ என்னும் சொல் பலர்பால்; ‘வந்தான்’ என்னும் வினைமுற்று ஆண்பால்.

நான்காம் தொடரில் ‘அது’ என்னும் சொல் ஒன்றன்பால்; ‘தாவின’ என்னும் சொல் பலவின்பால் வினைமுற்று.

ஐந்தாம் தொடரில் ‘அவை’ என்னும் சொல் பலவின்பால்; ‘பறந்தது’ என்னும் சொல் ஒன்றன்பால் வினைமுற்று.

இந்த ஐந்து தொடர்களிலும் எழுவாய் ஒரு பாலிலும் அதற்குரிய வினைமுற்று வேறு பாலிலும் வந்துள்ளன. இதனால் இவ்வைந்து தொடர்களும் இலக்கண முறைக்கு மாறான பிழையான தொடர்களாகும். இவையாவும் வழுவான தொடர்கள்.
 

6.2.2 பால் வழாநிலை

ஒரு பாலுக்கு உரிய எழுவாய் அதற்குரிய பாலைச் சேர்ந்த பயனிலை கொண்டு முடிதல் பால் வழாநிலையாகும். மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளைக் கீழே கொடுத்துள்ளவாறு மாற்றிப் பால் பொருத்தமுற அமைத்தால் வழாநிலைத் தொடர்களாகும்.

அவன் ஓடினான்
அவள் பாடினாள்
அறிஞர் வந்தனர்
அது தாவியது
அவை பறந்தன

இவ்வாறு தொழிலைச் செய்யும் எழுவாய்க்கு ஏற்ப வினையின் பாலும் பொருத்தமுற இருப்பதே பால் வழாநிலை எனப்படும்.

6.2.3 பால் வழுவமைதி
 

எழுவாய் எந்தப் பாலைச் சேர்ந்ததோ அதே பாலைக் குறிப்பதாக அதன் பயனிலையும் இருக்கவேண்டும். மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு ஆகிய காரணங்களால் பால் வேறுபாட்டோடு எழுவாயும் பயனிலையும் தொடர்களில் பயன்படுத்தப்படுகின்றன.

(எ.டு.)    தந்தை வந்தார்.

இத்தொடரில் ‘தந்தை’ என்னும் ஆண்பால் சொல் எழுவாயாக வந்துள்ளது. இச்சொல் ‘வந்தார்’ என்னும் பலர்பால் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது. எழுவாய் ஆண்பால். பயனிலை பலர்பால். இவ்வாறு பயன்படுத்துவது இலக்கண முறைப்படி பிழையாகும். அதாவது வழுவாகும். ஆனால் தந்தை என்னும் சிறப்புக்கு உரியவரை ஒருமையில் அழைப்பது பொருந்தாது என்பதால், வந்தார் என்னும் பலர்பால் வினைமுற்று முடிவு கொடுக்கப்பட்டது. இவ்வாறு உயர்வு என்னும் காரணம் கருதி வேறு பாலில் பயனிலை வருவதை பால் வழுவமைதி என்பர்.

உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும்
இழிப்பினும் பால்திணை இழுக்கினும் இயல்பே

(நன்னூல் : 379)

திணை வழுவமைதியில் காட்டிய எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.

(எ.டு.)     முகிலனும் நாயும் விளையாடினர்.

இத்தொடரின் எழுவாயாக ‘முகிலன்’என்னும் ஆண்பாற் சொல்லும் ‘நாய்’ என்னும் ஒன்றன்பால் சொல்லும் வந்துள்ளன; வினைமுற்றாக ‘விளையாடினர்’ என்னும் பலர்பால் சொல் வந்துள்ளது. இத்தொடரில் எழுவாயின் பால்களான ஆண்பால் ஒன்றன்பால் இரண்டோடும் அவற்றின் வினைமுற்றிற்கு மாறான பலர்பால் வினைமுற்று இடம் பெற்றுள்ளது. ‘முகிலனும் நாயும் விளையாடினான்’ என்றோ, ‘முகிலனும் நாயும் விளையாடியது’ என்றோ எழுவாய்க்கு ஏற்ப வினைமுடிவு கொடுக்க முடியாத நிலையில் பன்மைப் பொருளை உணர்த்தி, திணை வேறுபட்ட எழுவாய்களின் பால்களோடு பொருந்தி வராவிடினும், பலர்பால் வினைமுடிவு கொடுப்பதே சிறப்பு. இதனால் இது திணை, பால் இரண்டிற்கும் பொதுவான வழுவமைதியாகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1) வழு என்றால் என்ன? (விடை)
2) வழுக்கள் எவற்றில் ஏற்படுகின்றன?
(விடை)
3) எவை எவை மயங்கின் வழுவாகும்?
(விடை)
4) உயர்திணைப் பெயரை அஃறிணைப் பெயர் சார்ந்துவரின் முடிக்கும் சொல் எத்திணையில் இடம்பெற வேண்டும்?
(விடை)
5) திணைவழுவமைதியில் சார்ந்து வரல் என்றால் என்ன?
(விடை)
6) திணைகள் மயங்குவதற்கான காரணங்கள் யாவை? (விடை)
7) பால்வழு என்றால் என்ன? (விடை)
8) பால்வழுவமைதிக்கான காரணங்கள் யாவை?
(விடை)
9) திணை வேறுபட்ட பால்கள் ஒரு தொடரில் எழுவாயாக வரின் எப்பால் கொண்டு முடிக்க வேண்டும்?
(விடை)