5.4 சோழ மன்னர்கள்

மூவேந்தருள் (சேரர், சோழர், பாண்டியர்) நடுவண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுபவர் சோழர் ஆவர். இச்சோழ மன்னர்கள் கிள்ளி, செம்பியன், சென்னி, வளவன் எனவும் அழைக்கப்பெற்றனர். இன்றைய அளவுக்கும் சோழ அரசின் தோற்றமும் தொன்மையும் அறிய முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கு உரியது என்றாலும், அப்பெருமை சோழர்களுக்கும் உரித்து ஆகும். சோழ நாடானது செந்தமிழ் நாட்டினைச் சேர்ந்த பன்னிரு நாடுகளில் புனல் நாடு, பன்றி நாடு, அருவா நாடு என்ற நாடுகளை (இன்றைய தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை) உள்ளடக்கிய நாடு ஆகும். சோழ நாட்டில் உறையூர், கழார், குடந்தை, குராப்பள்ளி, புகார், வல்லம், பிடவூர், வெண்ணி போன்று பல பேரூர்கள் இருந்திருந்தாலும் சோழ நாட்டிற்குத் தலைநகராம் சிறப்புற்றிருந்தவை தொடக்கத்தில் உறையூரும், பின்னர்ப் புகாருமே ஆகும்.

சோழ நாடு சங்க இலக்கியங்களில் பாராட்டப் பெற்றிருக்கின்றது. சங்க இலக்கியங்களில் மிகவும் பழையன எனக் கருதப்பெறும் பாடல்களால் தொகுக்கப்பட்டுள்ள புறநானூற்றில் பல சோழ மன்னர்களைப் பற்றிய செய்திகள் பொதிந்து கிடக்கின்றன. பல புலவர்கள் சோழ மன்னர்களைப் பற்றிப் பாடியிருந்தாலும் அவர்கள் வரலாறு ஒன்றும் திட்டவட்டமாகக் கிடைக்கவில்லை எனலாம். சங்க இலக்கியங்கள் மட்டும் அல்லாமல் பிறநாட்டு வரலாற்றுப் பேரறிஞர்களாலும் சோழ நாடு பாராட்டப் பெற்றுள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டில் எழுதப்பெற்ற செங்கடற் செலவு என்னும் பொருளுடைய எரித்திரியக் கடலின் பெரிப்ளூசு என்ற நூலில், அந்நூலை எழுதிய ஆசிரியர் புகார் நகரைக் கடற்கரை நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னாட்டு நெல் களஞ்சியம் என்று சொல்லும் அளவிற்குச் சிறப்புடன் அமைந்திருந்த சோழ நாட்டினை ஆண்ட மன்னர்களைப் பற்றி ஒருவர் பின் ஒருவராகக் காணலாம். இம்மன்னர்களின் சின்னம் புலிக் கொடியாகும், ஆத்தி மாலையை இவர்கள் அடையாள மாலையாகக் கொண்டிருந்தனர்.

5.4.1 உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி

சங்க காலச் சோழ மன்னர்களுள் காலத்தால் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுபவன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி ஆவான். இவன் அழகினை உடைய பல தேர்களைக் கொண்டவன் ஆதலின் இப்பெயர் பெற்றான் என்பர். இவனைப் பற்றிப் புறநானூற்றில் இரண்டு பாடல்கள் (புறம் 4, 266) உள்ளன. இப்பாடல்கள் இவனுடைய வீரம், நால்வகைப் படைப் பெருமை, கொடை ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.

5.4.2 கரிகால் சோழன்

இவன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன் ஆவான். தாயின் வயிற்றில் இருக்கும்போதே அரச உரிமையைப் பெற்ற சிறப்புடையவன். இதனைப் பொருநராற்றுப்படை பின்வருமாறு கூறுகிறது.

உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்
தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி

(பொருநராற்றுப்படை: 130,132)

(உருவம் = அழகிய; பஃறேர் = பல்+தேர் பலதேர்கள்; இளையோன் = உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி; சிறுவன் = மகன்.)

உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்துபட்டபோது கரிகாலன் மிகவும் இளையவனாக இருந்தான். அரசைக் கைப்பற்றும் சூழ்ச்சியுடன் அவனுடைய தாயத்தார் அவனைச் சிறைப்பிடித்து வைத்து, சிறையைத் தீக்கு இரையாக்கினர். தீயிலிருந்து தப்பித்துச் செல்லும்போது அவன் கால்கள் தீப்பட்டுக் கருகிவிட்டன. இக்காரணத்தால் அவன் கரிகாலன் அதாவது கரிய காலை உடையவன் என அழைக்கப்பட்டான். சங்க இலக்கியத்தில் இவனைக் கரிகால் என்று அன் என்ற ஆண்பால் விகுதி சேர்க்காமல் குறிப்பிட்டுள்ளனர்.

பெருவளக் கரிகால்

(அகநானூறு, 125: 18)

பெரும்பெயர்க் கரிகால்

(அகநானூறு, 246: 8)

மேலும் இவன் வளவன், கரிகால் வளவன், கரிகால் பெருவளத்தான், திருமாவளவன் என்ற பெயர்களாலும் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளான்.

கரிகால் சோழன் சிறிது காலம் ஆட்சி புரியாமல் இருந்தாலும் பின்னர் சோழ நாட்டின் ஆட்சிப் பீடத்தில் முறைப்படி அமர்ந்தான். ஆட்சியைப் பிடித்தவுடன் தன் பகைவர்களைக் குறிப்பாகத் தன் தாயத்தார்க்குத் துணை நின்றவர்களை வென்றான்.

இம்மன்னன் தஞ்சாவூர்க்கு 24 கி.மீ. தொலைவில் உள்ள வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில் தன்னை எதிர்த்து வந்த சேர மன்னன் நெடுஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், பதினொரு வேளிரையும் ஒருங்கே தோல்வியுறச் செய்தான்.

இருபெரு வேந்தரும் ஒரு களத்து அவிய

(பொருநராற்றுப்படை:146)

(இருபெரு வேந்தர் = சேர, பாண்டியர்; அவிய = மடிய.)

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
(அகநானூறு, 55: 10-11)

(பொருது = போர் செய்து; புண் = முதுகில் ஏற்பட்ட புண்.)

காய்சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய

(அகநானூறு, 246: 8-12.)

(மொய்ம்பு = வலிமை; பெரும்பெயர் = பெரிய புகழ்; வெண்ணி வாயில் = வெண்ணிப்பறந்தலை என்னும் இடம்; வேந்தர் = சேர, பாண்டியர்.)

இவ்வெண்ணிப் போர் மூலம் பெரும் புகழடைந்தான் கரிகாலன். இப்போர் தமிழகத்து மன்னர்களின் மேலாண்மையைக் கரிகாலனுக்கு வழங்கியது.

வெண்ணிப் போரில் தோல்வியுற்ற வேளிர் பதினொருவரில் உயிர் பிழைத்துத் தப்பிய ஒன்பதின்மர் வாகை என்னும் இடத்தில் கரிகால் சோழனை மீண்டும் போரில் எதிர் கொண்டனர். இப்போரிலும் கரிகால் சோழன் வெற்றி கொண்டான். பின்பு பகைவர் நாடுகளில் சோழப்படை புகுந்து பெரும் அழிவை விளைவித்தது. ஒளியர், அருவாளர், வடவர், குடவர், தென்னவர், பொதுவர் போன்ற பகைவர் பலரையும் வென்று அடக்கினான் கரிகால் சோழன்.

பல் ஒளியர் பணிபு ஒடுங்க
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாட, குடவர் கூம்ப,
தென்னவன் திறல் கெட

(பட்டினப்பாலை: 274-277)

கரிகால் சோழன் சேரமன்னன், பாண்டிய மன்னன், வேளிர் போன்றோரை ஒருங்கே தோற்கடித்ததால் தமிழகம் முழுவதும் அவனுடைய ஆட்சியின் கீழ் வந்தது. இருப்பினும் வட நாட்டுக்கும் சென்று இடையில் உள்ள மன்னர்களை எல்லாம் வென்றான். இமயம் வரை சென்று அங்குத் தன் நாட்டின் புலிக் கொடியை நாட்டி விட்டு வந்தான்.

கரிகால் சோழன் சிறந்ததொரு கப்பற்படையையும் கொண்டிருந்தான். இப்படையுடன் இலங்கை மேல் போர் தொடுத்தான் அதில் வெற்றியும் எய்தினான். இதுபற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டு வந்து, அவர்களைக் கொண்டு காவிரியாற்றின் கரையை உயர்த்தி அமைத்தான்.

பொன்னிக் கரை கண்ட பூபதி

(விக்கிரம சோழன் உலா-26)

கரிகால் சோழன் காலத்தில் தமிழகம் செழிப்புற்று விளங்கியது. சமணப்பள்ளிகள் பலவும், பௌத்தப் பள்ளிகள் பலவும் பூம்புகாரில் சச்சரவு ஏதும் இன்றி அமைதியாக நடைபெற்று வந்தன.

தவப்பள்ளி தாழ் காவின்

(பட்டினப்பாலை: 53)

கரிகால் சோழன் தன்னைப் பட்டினப்பாலை என்னும் நூல் கொண்டு புகழ்ந்து பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசு அளித்தவன் ஆவான். இதனைக் கலிங்கத்துப் பரணி,

தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்

(கலிங்கத்துப்பரணி, 198: 2-4)

என்று குறிப்பிடுகிறது.

கரிகால் சோழன் சோழ நாட்டில் உள்ள காடுகளை அழித்து, அவற்றை விளைச்சல் நிலங்களாக மாற்றினான். பாசன வசதிக்காகக் குளங்கள் வெட்டினான். கல்லணையைக் கட்டினான். இவன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் முக்கியத் துறைமுகப் பட்டினமாக விளங்கியது.

5.4.3 நலங்கிள்ளி – நெடுங்கிள்ளி

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்னும் இவ்விரு மன்னர்களும் கரிகால் சோழன் வழி வந்தவர்கள். கரிகால் சோழன் மறைவிற்குப் பிறகு வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது. இதன் விளைவால் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு நலங்கிள்ளி சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். நெடுங்கிள்ளி உறையூர், ஆவூர் போன்ற ஊர்களைக் கைப்பற்றி ஆவூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டு வந்தான். இவ்விருவருள் நலங்கிள்ளி மிக்க ஆற்றல் வாய்ந்தவன். இம்மன்னன், "பகைவர்கள் பணிந்து வந்துகேட்டால், என் அரசையும் தருவேன். அவர்கள் என்னை மதிக்காவிடின் அவர்களை யானையின் காலின் கீழ் அகப்பட்ட மூங்கிலைப் போல நசுக்குவேன்" என்று கூறியவன் ஆவான்.

கழைதின் யானைக் கால் அகப்பட்ட
வன் திணி நீள் முளை போல

(புறநானூறு, 73: 9-10)

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியின் தலைநகராகிய ஆவூரைக் கைப்பற்ற எண்ணி, தன் தம்பியான மாவளத்தானை அனுப்பி ஆவூர்க் கோட்டையை முற்றுகையிடவைத்தான். இதனைக் கண்ட நெடுங்கிள்ளி போர் புரியாமல் கோட்டை வாயிலை அடைத்துக்கொண்டு உள்ளே அடங்கியிருந்தான். இதனை அறிந்த கோவூர் கிழார் என்னும் புலவர் நெடுங்கிள்ளியிடம் சென்று அறவுரை கூறினார். “நீ நின் மக்களைப் பசியும், பிணியும் அண்டாதவாறு காக்க வேண்டும் அறம் உடையவனாயின் இந்நாடு நினதென்று கூறிக் கோட்டை வாயிலைத் திறந்துவிடு. மறம் உடையவனாயின் போர் செய்யத் திறந்து விடு” என்று உரைத்தார்.

அறவை ஆயின் நினது எனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை யாக

(புறநானூறு,44: 11-13)

கோவூர் கிழார் கூறிய அறிவுரை கேட்டு, ஆவூர்க் கோட்டையை நலங்கிள்ளியிடம் ஒப்படைத்துவிட்டு நெடுங்கிள்ளி உறையூர்க் கோட்டைக்குச் சென்று அடைத்துக்கொண்டான். நலங்கிள்ளி பெரும்படையுடன் சென்று உறையூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். இதனை அறிந்த கோவூர் கிழார் இம்முறை நலங்கிள்ளியிடம் சென்று நீங்கள் இருவரும் ஒரே சோழர் குடியில் வந்தவர்கள். ஒரே குடியில் வந்த உங்களுக்குள் ஏன் இந்தப் போர் எனக் கூறிச் சமாதானம் செய்து வைத்தார். இருப்பினும் காரியாறு என்னும் இடத்தில் இரு மன்னர்களுக்கும் போர் மூண்டது. இறுதியில் நெடுங்கிள்ளி போரில் மடிந்தான். காரியாற்றுப் போர் மூலம் சோழப்பேரரசின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

5.4.4 கிள்ளிவளவன்

கிள்ளிவளவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இவன் புலவர்களை ஆதரிப்பதிலும், போர் வல்லமையிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான்.

இக்கிள்ளிவளவன், தென் பெண்ணையாற்றின் கரையில் உள்ள திருக்கோவிலூர் என்னும் இடத்தில் ஆட்சி புரிந்து வந்தவனாகிய மலையமான் திருமுடிக்காரியுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான்.

கிள்ளிவளவன் சேரருடன் போர் புரிந்து கரூரைச் சூறையாடினான். பின்பு பாண்டியருடனும் போர் புரிந்தான் என நக்கீரர் கூறுகிறார். அப்போரில் கிள்ளிவளவன் தோற்கடிக்கப்பட்டான் எனத் தெரிகிறது.

இம்மன்னன் செம்பியன் எனவும் அழைக்கப்பட்டான். இவன் குளமுற்றம் என்னும் ஊரில் இறந்தான். எனவே இவனைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்றும் அழைத்தனர்.

5.4.5 பிற சோழ மன்னர்கள்

சோழ மன்னர்களில் மேலே கூறப்பட்டவர்களைப் போல் பெரிதும் போற்றப்படாமல் இருந்தாலும் இன்னும் சில சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவன் செங்கணான் என்னும் மன்னன் ஆவான். இம்மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறையைக் கழுமலம் என்னும் இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தான். இவன் சிவபெருமானிடத்தில் பக்தி கொண்டு ஆற்றிய சமயப் பணி குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னன் பிசிராந்தையார் என்னும் புலவரின் நண்பனாக இருந்தான். இவன் அறநெறி தவறாமல் சிறிது காலம் ஆட்சி புரிந்து வந்தான்.

தித்தன் என்னும் மன்னன் உறையூரில் இருக்கை அமைத்து ஆட்சி புரிந்து வந்தான்.

கோப்பெரு நற்கிள்ளி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி போன்றோரும் சோழ மன்னர்களாகச் சோழ நாட்டின் ஒரு பகுதியில் ஆட்சி புரிந்து வந்தனர்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.
சங்க காலத்தில் தமிழகம் எத்தனை பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது?
2.
தமிழ் வேந்தர் மூவருள் சிறந்தவராகக் கருதப்படுபவர் யார்?
3.
பெருஞ்சோறு அளித்த சேர மன்னன் யார்?
4.
வெண்ணியில் யார் யாருக்குப் போர் நடந்தது?
5.
இமயமலை மீது வில் கொடியை நாட்டிய மன்னன் யார்?
6.
யானைகள் நிறைந்த காட்டின் பெயர் என்ன?
7.
கண்ணகிக்காகச் சிலை செய்த மன்னன் யார்?
8.
களங்காய்க் கண்ணி எனப் பெயர் வரக் காரணம் என்ன?
9.
கரிகால் சோழனின் தந்தை யார்?
10.
தாய் வயிற்றிருந்த போதே அரச உரிமை எய்தியவன் யார்?
11.
காவிரிக்குக் கரை அமைத்த மன்னன் யார்?
12.
நலங்கிள்ளியையும், நெடுங்கிள்ளியையும் சமாதானம் செய்த புலவர் யார்?