6.2 குடும்ப அமைப்பு
 

E

‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்னும் கருத்தைப் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கு என்னும் நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு என்னும் நூலால் கட்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து வாழும்போது இனிய இல்வாழ்க்கை அமைகிறது என்று பாரதிதாசன் தெரிவிக்கிறார்.

அதிகாலையில் துயில் எழுவதுமுதல் தனது கடமைகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணாகக் குடும்ப விளக்கில் தலைவி காட்டப்பட்டுள்ளாள். நேர்மையான வாணிகம் செய்து பொருள் ஈட்டுபவனாகத் தலைவன் படைக்கப்பட்டுள்ளான். அன்பான பெற்றோர்கள், அழகான குழந்தைகளுடன் சிறந்த குடும்பம் ஒன்றை இந்நூலின் வழியாகப் பாரதிதாசன் காட்டியுள்ளார்.

பாரதிதாசன் காட்டியுள்ளது போன்ற குடும்பங்களைக் கொண்ட சமுதாயம் உயர்வு அடையும் என்பது எளிதில் விளங்கும்.
 

6.2.1 மாமியார் கொண்டு வந்த பொருள்கள்
 

தற்காலச் சமுதாயத்தில் திருமணம் ஆகி, கணவன் வீட்டுக்கு வரும் மருமகள் பலவகையான பொருள்களைக் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு கொண்டு வராத மருமகள் தனது மாமியார் வீட்டில் பல இன்னல்களை அடைவதையும் காண்கிறோம். ஆனால் பாவேந்தர் பாரதிதாசன் இந்த மனப்பான்மையை மாற்றி அமைப்பது போல, குடும்ப விளக்கு நூலைப் படைத்துள்ளார்.

வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை மருமகள் கொண்டு வருவதற்குப் பதிலாக மாமியாரே கொண்டு வருவதைப்போல் பாடியுள்ளார்.

தலைவியின் மாமியார் தமது மகள் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும்போது தமது மருமகளுக்கு உதவுமே என்று பல பொருள்களை வாங்கி வருகிறார். அந்தப் பொருள்களின் பட்டியலைப் பாரதிதாசன் பாடலாகப் படைத்துள்ளார் பாருங்கள்.
 


 

கொஞ்சநாள் முன்வாங்கிட்ட
     கும்ப கோணத்துக் கூசா,
மஞ்சள், குங்குமம், கண்ணாடி
     மை வைத்த தகரப் பெட்டி
செஞ்சாந்தின் சீசா, சொம்பு
     வெற்றிலைச் சீவற்பெட்டி,
இஞ்சியின் மூட்டை ஒன்றே
     எலுமிச்சை சிறிய கோணி.

புதிய ஓர் தவலை நாலு
     பொம்மைகள், இரும்புப் பெட்டி
மிதியடிக் கட்டை, பிள்ளை
     விளையாட மரச்சாமான்கள்
எதற்கும் ஒன்றுக்கிரண்டாய்
     இருக்கட்டும் வீட்டில் என்று
குதிரினில் இருக்கும் நெல்லைக்
     குத்திட மரக்குந் தாணி;

தலையணை, மெத்தைக் கட்டு,
     சல்லடை, புதுமுறங்கள்
எலிப்பொறி, தாழம்பாய்கள்,
     இப்பக்கம் அகப்படாத
இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி
     இட்டலித் தட்டு, குண்டான்,
கலப்படமிலா நல்லெண்ணெய்,
     கைத்தடி, செந்தாழம்பூ;

திருமணம் வந்தால் வேண்டும்
     செம்மரத்தினில் முக்காலி
ஒருகாசுக் கொன்று வீதம்
     கிடைத்த பச்சரிசி மாங்காய்,
வரும் மாதம் பொங்கல் மாதம்
     ஆதலால் விளக்குமாறு
பரிசாய்ச் சம்பந்தி தந்த
     பாதாளச் சுரடு, தேங்காய்;

மூலைக்கு வட்டம் போட்டு
     முடித்த மேலுறையும், மற்றும்
மேலுக்கோர் சுருக்குப் பையும்
     விளங்கிடும் குடை, கறுப்புத்
தோலுக்குள் காயிதத்தில்
     தூங்கும் மூக்குக் கண்ணாடி
சேலொத்த விழியாள் யாவும்
     கண்டனள் செப்பலுற்றாள்.

(குடும்ப விளக்கு ‘மாமன் மாமி வாங்கி வந்தவை’)
 

என்னும் பாடல் அடிகளில் ஒரு குடும்பத்துக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் பாவேந்தர் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தையும் மாமியார் தமது மருமகளுக்காக வாங்கி வந்ததாகப் பாடியுள்ள பாரதிதாசன் குடும்ப வாழ்க்கை முறையில் புரட்சி செய்துள்ளதைக் காணமுடிகிறது. காலம் காலமாய் மருமகள் கொண்டு வரும் பொருள்களை மாமியாரே வாங்கி வருவதாகப் பாடியிருப்பது உண்மையில் புரட்சிதானே!
 

6.2.2 வீடுபேறு
 

நம் முன்னோர், வாழ்க்கையின் பயனாக அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் குறிப்பிட்டுள்ளார்கள். இவை நிலைத்த உண்மைகள் ஆகும். இதில் நான்காவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘வீடு’ என்னும் சொல்லே வீடுபேறு என்று அழைக்கப்படுகிறது. இந்த வீடுபேறு என்னும் சொல்லைச் ‘சொர்க்கம்’ என்னும் பொருளில் நாம் பயன்படுத்துகிறோம். சொர்க்கம் என்பதை இறந்தபிறகு தான் அடைய முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், பாவேந்தர் பாரதிதாசனோ அதை வாழ்நாளிலேயே அடையமுடியும் என்னும் கருத்தைக் கொண்டுள்ளார். எனவே,
 

காட்சி

அதிர்ந்திடும் இளமைப் போதில்
     ஆவன அறங்கள் செய்து
முதிர்ந்திடும் பருவந்தன்னில்
     மக்கட்கு முடியைச் சூட்டி
எதிர்ந்திடும் துன்பமேதும்
     இல்லாமல் மக்கள், பேரர்
வதிந்திடல் கண்டு நெஞ்சு
     மகிழ்வதே வாழ்வின் வீடு

(குடும்ப விளக்கு ‘முதியோர்க்கு’)
 

என்று பாடியுள்ளார். இப்பாடலில் பாரதிதாசன் மனிதனின் வாழ்க்கையை மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார். அவை,

1. இளமை வாழ்க்கை
2. முதுமை வாழ்க்கை
3. வீடுபேற்று வாழ்க்கை

என்பவை ஆகும்.

இளமையில் ஒருவன் நல்ல வழியில் பொருள் ஈட்ட வேண்டும். அப்பொருளை அறவழிக்குப் பயன்படுத்த வேண்டும். இது இளமை வாழ்க்கை.

முதுமையில் ஒருவன் தனது குடும்பப் பொறுப்புகளை எல்லாம் தனது மக்களிடம் பகிர்ந்து கொடுத்திட வேண்டும். இது முதுமை வாழ்க்கை.

ஒருவன் இவ்வாறு பொறுப்புகளைக் கொடுத்த பிறகு தனது மக்கள் வாழ்வதைக் கண்டு மகிழ வேண்டும். அவ்வாறு மகிழ்வதே வீடுபேற்று வாழ்க்கை.

வீடுபேறு என்றால் என்ன? என்பதற்குப் பாரதிதாசன் அறிவுக்குப் பொருந்தும் வகையில் கொடுத்துள்ள விளக்கத்தைப் பார்த்தீர்களா?.

‘வீடு’ என்னும் சொல் ‘விடு’ என்னும் பொருளைக் கொண்டது. ‘விடு’ என்றால் இங்கே உலகப் பற்றை விடு என்று பொருள். உலகப் பற்றை விடுத்து வாழ்வதையே நாம் வீடு என்கிறோம்.

‘பேறு’ என்னும் சொல் ‘பெறு’ என்னும் பொருளைக் கொண்டது. ‘பெறு’ என்பது எதேனும் ஒன்றையோ பலவற்றையோ பெறுதலைக் குறிக்கும். இங்கே உலகப்பற்றை விடுதல் என்னும் பெறுதலை இது குறிக்கிறது.

உலகப் பற்றை விடுதல் தான் ‘வீடு பேறு’ என்பதைப் பாரதிதாசன் தெளிவுபடுத்தியுள்ளார். அவ்வாறு இல்லாமல் உலக வாழ்க்கை முடிந்த பிறகு (இறப்பிற்குப் பிறகு) வருவது அல்ல வீடு பேறு என்னும் தெளிவையும் இப்பாடல் வழியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

6.2.3 இல்லறமே நல்லறம்
 

உலகப் பற்றைத் துறந்தாலும் குடும்பத்தோடு சேர்ந்துதான் வாழவேண்டும் என்று பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். வாழ்வின் இறுதி நிலையாகிய வீடுபேற்று நிலையிலும் குடும்பத்தினர் வாழும் வாழ்க்கையைக் கண்டுதான் மகிழ வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

ஞாலத் தொடர்பினால்
     நல்லின்பம் காணலன்றி
ஞாலத் துறவில் இன்பம்
     நண்ணுவதும் - ஏலுமோ?

(குடும்ப விளக்கு ‘இலலறமே நல்லறம்’)
 

என்று கேள்வி கேட்டுள்ள பாரதிதாசன், உலக வாழ்க்கைக்கு இல்லறத்தையே உயர்ந்த அறமாகத் தெரிவித்துள்ளார்.
 

6.2.4 முதியோர் காதல்
 

ஒருவனும் ஒருத்தியும் அன்பு கொண்டு வாழும் வாழ்க்கையைக் காதல் வாழ்க்கை என்கிறோம். இந்தக் காதல் வாழ்க்கை இளமையில் இனிப்பாய் இருப்பதைப் பல கவிஞர்கள் பாடியுள்ளார்கள். ஆனால், முதியோரிடம் உண்டாகும் காதல் வாழ்க்கையைப் பாரதிதாசன் அழகாகக் காட்டியுள்ளார்.

முதியவளின் உடலில் பளபளப்போ அழகோ இல்லை. என்றாலும் முதியவர், அவள்மேல் கொண்டிருந்த காதல் மாறவில்லை. இதற்கு அடிப்படை அவரது உள்ளத்தில் நிறைந்து விளங்கும் உண்மை அன்பு ஆகும்.
 

காட்சி

புதுமலர் அல்ல; காய்ந்த
     புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
     தள்ளாடி விழும் மூதாட்டி
மதியல்ல முகம் அவட்கு
     வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
     ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!
 

(குடும்ப விளக்கு - ‘முதியோர்காதல்’)
 

முதியவளின் உடம்பு புதுமலர் போல் ஒளியுடன் இல்லை; காய்ந்து போன புல்கட்டைப் போன்று இருக்கிறது. அவள் நடப்பது நடனத்தைப் போல் அழகாக இல்லை; தள்ளாடி விழுவதுபோல் இருக்கிறது. நிலவு போல் அவள் முகத்தில் ஒளி இல்லை; வறண்டு இருக்கிறது. கண்கள் குழிந்து காணப்படுகின்றன. இப்படிப்பட்ட முதியவளின் உடலில் எனக்கு இன்பத்தைத் தருவது எது? இன்றும் உயிருடன் இருக்கின்றாள் என்பது மட்டுமே எனக்கு இன்பத்தைத் தருவது ஆகும் என்று முதியவர் கூறுவது போல் பாரதிதாசன் பாடியுள்ள பாடல் உண்மைக் காதல் என்பது உயிர் இருக்கும் வரை தொடரும் வலிமை உடையது என்பதை உணர்த்துகிறது அல்லவா?.

முதியவர் தம் மனைவியிடம் கொண்டிருந்த காதலை அழகாக விளக்கிய பாரதிதாசன், முதியவள் தம் கணவரிடம் கொண்டிருந்த காதலையும் அழகாக விளக்கியுள்ளார் பாருங்கள்.
 

காட்சி
 

அறம் செய்த கையும் ஓயும்!
     மக்களை அன்பால் தூக்கிப்
புறம்போன காலும் ஓயும்!
     செந்தமிழ்ப் புலவர் சொல்லின்
திறம் கேட்ட காதும் ஓயும்!
     செயல்கண்ட கண்ணும் ஓயும்!
மறவரைச் சுமக்கும் என்றன்
     மன மட்டும் ஓய்தலில்லை

(குடும்ப விளக்கு ‘முதியோர் காதல்’)
 

என்று தனது மனத்தில் முதியவரைத் தாங்கி இருப்பதாகக் கூறும் அந்த மூதாட்டியின் முதுமைக் காதல், உயர்ந்தது அல்லவா?
 

தன் மதிப்பீடு: வினாக்கள் - I
 

  1. உயிரை விட எதைப் பெரிது என்று பாரதிதாசன் பாடியுள்ளார்?
  1. கல்வி அறிவு இல்லாத பெண்ணையும் கல்வி அறிவு உடைய பெண்ணையும் பாரதிதாசன் எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?
  1. பாரதிதாசன் குறிப்பிடும் மூவகை வாழ்க்கை யாவை?