2.2
அழகர் கிள்ளை விடு தூது |
நண்பர்களே! இது வரையிலும் தூது இலக்கியம் என்பது
பற்றிய பொதுவான செய்திகளை அறிந்தீர்கள்.
இனி, அழகர்
கிள்ளை விடு தூது என்ற நூலைத் துணையாகக்
கொண்டு தூது
என்ற சிற்றிலக்கிய வகையின் அமைப்பையும் பாடுபொருள்களையும் காண்போமா?
• பாடுபொருள்
அழகர் கிள்ளை விடு தூது நூல் எதைப் பற்றிப்
பேசுகிறது? பாண்டிய நாட்டில் இறைவனாகிய திருமால் எழுந்தருளி உள்ள இடங்களில் ஒன்று திருமாலிரும் சோலை மலை
ஆகும். இந்தத் திருமாலிரும் சோலை மலையின் பல
பெயர்களில் அழகர் மலை என்பதும் ஒன்று. இந்த
மலையில் இருக்கும் இறைவன் ஆகிய திருமாலை அழகர் என்றும்
அழைப்பார். கிள்ளை என்றால் கிளி என்று பொருள்.
• கிளியின் தூது
திருமால் இரும் சோலை மலையில் எழுந்து அருளி
உள்ள
இறைவன் ஆகிய திருமால் தூது பெறும் தலைவன். அவனிடம்
காதல் கொண்ட பெண் ஒருத்தி அவனிடம் ஒரு கிளியைத் தூது
அனுப்புகின்றாள். இச்செய்தியைக் கூறுவதே அழகர் கிள்ளை
விடு தூது நூல் ஆகும்.
• ஆசிரியர்
அழகர் கிள்ளை விடு தூது என்ற நூலின்
ஆசிரியர் யார்?
பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளை. இவர் ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று
கருதுவர். இவரது ஊர்
மதுரை. பலபட்டடைக் கணக்கு என்பது ஒரு வகையான
வேலை. இவருடைய மரபினர் இந்த வேலையைப்
பார்த்தவர்கள். எனவே
சொக்கநாதப்பிள்ளை என்ற பெயருக்கு முன் பலபட்டடை
என்பது அடைமொழியாக வந்துள்ளது.
அறிவியலின் வளர்ச்சியால் ஏற்பட்ட தகவல்
தொழில்நுட்ப
முன்னேற்றம் இல்லாத காலத்தில் மனிதர்களைத் தூது விடுதல்,
மேகத்தைத் தூது விடல்,
பறவைகளைத் தூது விடுதல் என்ற
மரபு பழைய தமிழ்
இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இங்குக்
கிளியைத் தூது விடுதலை மையமாகக் கொண்டு அழகர்
கிள்ளை
விடு தூது எனும்
நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக
அழகர் பெருமை
கூறப்படுகிறது.
நண்பர்களே! இனி, அழகர்கி ள்ளை விடு தூது நூலின்
அமைப்பையும் பாடுபொருளையும், இலக்கிய நயங்களையும்
காண்போம்.
2.2.1
அமைப்பும் பொருளும்
அழகர் கிள்ளை விடு தூது, ஒரு பெண் ஆணுக்குத் தூது
அனுப்புவதாக அமைந்த நூல் ஆகும். இந்த நூலின்
அமைப்பையும் பொருளையும் பின்வருமாறு விளக்கலாம்:
• தூதுப் பொருள்
தூது என்ற சிற்றிலக்கிய வகையின்
இன்றியமையாத பகுதி
இது. தூது செல்லும் பொருளைத் தூது விடு
பொருள் என்றும்
அழைப்பர். தூது விடு பொருளின்
பெருமைகளைக் கூறும் பகுதி
புலவர்களின் புலமைத் திறனுக்குச் சான்று கூறும் பகுதியாக
அமைகின்றது. மேலும், இப்பகுதி புலவர்களின் கற்பனைத்
திறனை வெளிப்படுத்த ஏற்ற பகுதியாகவும் அமைகின்றது.
அழகர் கிள்ளை விடு தூது நூலில் தூது விடு பொருளாகிய
கிளியின் பெருமைகள் பல நிலைகளில் கூறப்படுகின்றன.
அவற்றைப் பார்ப்போமா?
2.2.2
கிளியின் பெயர்ச் சிறப்பு
தூது விடும் பெண், தூது விடு பொருளாகிய கிளியைப் பார்க்கின்றாள். அதனை அழைக்கின்றாள்.
கிளியின்
பல்வேறு பெருமைகளைக் கூறிக்
கிளியின் பெயர்ச் சிறப்பைக்
குறிப்பிடுகிறாள். இலக்கிய நயம் மிக்க இப்பகுதியைப்
பார்ப்போமா?
கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர்
கொண்டு
(கண்ணி : 1) |
(கார் = மேகம்)
• அரியும் கிளியும்
மேகம் நிறம் கொண்டவன் திருமால்.
திருமாலின் மற்றும்
ஒரு பெயர் அரி. கிளியின்
பெயர்களுள் ஒன்று அரி. எனவே,
கிளி திருமாலின் பெயரைக்
கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இங்கு அரி என்பது திருமால். கிளி என்ற இரண்டு
பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது.
மறம்தரு சீவகனார் மங்கையரில்
தத்தை
சிறந்தது நின்பேர் படைத்த சீரே
(கண்ணி : 10) |
(மறம் = வீரம், மங்கையர் =
மனைவியர், தத்தை =
காந்தருவதத்தை, சீர்
= சிறப்பு)
• தத்தையும் கிளியும்
தமிழில் உள்ள ஐந்து பெரும்
காப்பியங்களில் ஒன்று சீவக
சிந்தாமணி ஆகும். இந்தக்
காப்பியத்தின் தலைவன் சீவகன்.
அவனுக்குப் பல மனைவியர் உண்டு. அவர்களுள் முதல்
மனைவி காந்தருவதத்தை. இவள் தத்தை என்ற பெயராலும்
வழங்கப்படுவாள். சீவகன் மனைவியருள் தத்தை முதல்வி
ஆகத் திகழக் காரணம் கிளியின் பெயரைப் பெற்றதால்தான்
என்கிறார் புலவர். கிளிக்கு
உரிய பல பெயர்களில் ஒன்று
தத்தை. இங்கு, தத்தை என்பது சீவகன் மனைவி ஆகிய
காந்தருவ தத்தை, கிளி என்ற இரண்டு பொருள்களில்
கையாளப்படுகின்றது.
இது போன்று கிளியின் பெயர்கள் பல
சுட்டப்படுவதைக் காணலாம்.
மனப் பேதையார் மால் வனம் சுடவே வன்னி
எனப் பேர் படைத்தாய் இயம்பாய் - அனத்தை
நிலவோ என்பார்கள் நெடும்துயர் வேழத்தைக்
கொலவோ அரி வடிவம் கொண்டாய் - சிலை
நுதலார்
கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ
கிள்ளை வடிவு எடுத்தாய் கிற்பாய் நீ - உள்ளம்
மிக உடைய மாதர் விதனம் கெடவோ
சுகவடிவு நீகொண்டாய் சொல்லாய் - தகவு உடைய
தத்தை அடைந்தவர் ஏதத்தை அடையார் என்னும்
வித்தை அடைந்தாய் உனை யார்மெச்ச வல்லார்
(கண்ணிகள் ; 50-54) |
 |
எனத் தூது அனுப்பும் தலைவி கிளியைப் புகழ்கின்றாள்.
(பேதையார் = பெண்கள், மால் =
மயக்கம், இயம்பாய் =
கூறுவாய், அனம்
= அன்னப்பறவை, சோறு, வேழம் = யானை,
சிலை = வில், நுதலார்
= நெற்றியை உடைய பெண்கள்,
விரகம் = துன்பம், கிற்பாய்
= வலிமை உடையாய், தத்தை =
ஆபத்தை)
• பெண்கள் மயக்கம்
பெண்கள் காமம் காரணமாக மயக்க நிலை
அடைந்துள்ளனர். இந்த மயக்கத்தைக் காடு என்கிறார்.
இந்தக்
காட்டை எரிக்க நெருப்பு வேண்டும். கிளி தூது சென்று
பெண்களின் காமத்தால் வரும் மயக்கம் என்ற காட்டை
அழிக்கின்றது என்கிறார் புலவர். இங்கு வன்னி
என்பது இரண்டு
பொருள்களில் கையாளப்படுகின்றது.
வன்னி - நெருப்பு, கிளி
• பெண்களின் காமம்
பெண்கள் காமம் காரணமாக வெள்ளை நிறம்
உடைய
அன்னப்பறவையைப் பார்க்கும் போது நிலவு என்று எண்ணி
வருந்துகின்றனர். தலைவனைப் பிரிந்த பெண்கள் நிலவைக்
கண்டு வருந்துவர். இத்தகைய பெண்களின் துன்பம் ஆகிய
யானையைக் கொல்ல அரி வடிவம் எடுத்ததாகக் கிளியின்
பெயர்ச் சிறப்பு கூறப்படுகிறது. இங்கு அரி என்பது
சிங்கம்,
கிளி
என்ற இரு பொருள்களில் கையாளப்படுகிறது.
வில் போன்ற நெற்றியை உடைய பெண்களின்
கொடிய
படையாகக் காம மயக்கம் உள்ளது. இத்தகைய கொடும்
படையை வெல்லக் கிள்ளை வடிவம் எடுத்ததாகக் கிளியைத்
தூதுவிடும் தலைவி புகழ்கின்றாள். இங்கு, கிள்ளை என்ற
சொல்
நான்கு படைகளில் ஒன்றாகிய குதிரை என்ற
பொருளில்
பயன்படுத்தப்படுகின்றது.
• பெண்களின் துன்பம்
உள்ளம் உடைந்த பெண்களின் துன்பம் நீங்கக் கிளி சுக
வடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது.
சுகம் என்பது இன்பம் என்று
பொருள் படும், இங்கு,
சுகம் என்பது கிளி, இன்பம்
என்ற
இரண்டு பொருள்களில் கையாளப்படுவதைக் காணலாம்.
பெருமையுடைய கிளியை அடைந்தவர்கள் துயரத்தை
அடைய மாட்டார்கள் என்றும் கிளியின் பெயர்ச் சிறப்பு
கூறப்படுகின்றது. தத்தை என்பதன் ஒரு பொருள் கிளி. மற்றொரு
பொருள் தத்து (ஆபத்து), தத்தை என்பது துயரத்தை என்று
ஆகின்றது.
இவ்வாறு பல இடங்களில் கிளியின் பெயர்ச் சிறப்புகள்
கூறப்படுகின்றன.
2.2.3
கிளியின் நிறச் சிறப்பு
கிளியின் நிறம் பச்சை, பஞ்சவர்ணக்கிளி
என்று ஒரு வகையான
கிளியும் உண்டு. இந்தக் கிளிக்கு ஐந்து நிறங்கள். கிளியின்
இத்தகைய நிறங்கள் அழகர் கிள்ளை விடு தூது நூலில்
சிறப்பித்துக் கூறப்படுகின்றன.
கார்
கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு
நீர்கொண்ட பாயல் நிறம்கொண்டு
(கண்ணி : 1) |
|
(நீர் = பாற்கடல், பாயல் = படுக்கை)
என்று கிளியின் பச்சை நிறம் சுட்டப்படுகின்றது.
திருமால் பாற்கடலில் பள்ளி
கொண்டுள்ளான். அவனுடைய
படுக்கை ஆல் இலை. ஆல் என்பது
ஆலமரம். ஆலமரத்தின்
இலையின் நிறம் பச்சை. கிளியின் நிறமும் பச்சை. எனவே,
திருமால் ஆகிய இறைவனின் படுக்கை
ஆகிய ஆல் இலையின்
நிறம் கொண்டது கிளி என்று
புகழப்படுகிறது.
எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவை
ஆயினும்உன்
ஐவண்ணத் துள்ளே அடங்குமே - மெய்வண்ணம்
பார்க்கும் பொழுதில்உனைப் பார்ப்பதிஎன்பார்
என்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்
(கண்ணிகள் : 7-8) |
 |
(வண்ணம் = நிறம், பார்ப்பதி =
பார்வதி தேவி,
மொழிந்திடாய் = கூறுவாயாக)
பல வகையான பறவைகள் உலகில் உள்ளன. பல
நிறங்களை
உடைய பறவைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும்
உன்னுடைய ஐந்து நிறங்களின் உள்ளே அடங்கி விடும் என்று
தலைவி கிளியைப் போற்றுகிறாள். பஞ்சவர்ணக்
கிளியின் ஐந்து
நிறங்களுக்குள் உலகில் உள்ள அனைத்துப் பறவைகளின்
நிறங்களும் அடங்கிவிடும் என்பது
சுட்டப்படுகிறது. |
கிளியின் மூக்கின் நிறம் சிவப்பு. கிளியின் உடம்பின் நிறம்
பச்சை. இறைவி ஆகிய பார்வதி தேவியின் நிறம் பச்சை.
எனவே, கிளியைப் பார்ப்பவர்கள் பார்வதி தேவி என்று
எண்ணாமல்
இருக்கக் கிளியின் மூக்கு நிறம் சிவப்பு ஆக
உள்ளது என்று
புலவர் கூறுகின்றார்.
2.2.4
கிளியின் பெருமை
மன்மதனின் தேர் தென்றல் காற்று ஆகும்.
இந்தத் தேரை
இழுப்பது கிளி என்று கூறப்படும் மரபு உள்ளது.
எனவே, கிளி
மன்மதனின் வாகனமாகக் கருதப்படுகிறது. கிளியின்
பெருமைகளில் ஒன்றாக இச்செய்தி சுட்டப்படுகிறது.
வையம்படைக்கு மதனையும் மேற்கொண்டு
இன்பம்
செய்யும் கிளி அரசே செப்பக்கேள் |
என்று தூது அனுப்பும் தலைவி கூறுவதாக உள்ளது. மன்மதனின்
வாகனம் கிளி என்பது சிலேடை நயம்படக் கூறப்படுகிறது. ஒரு
சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் பிரிந்து நின்று
மற்று
ஒரு பொருளையும் தருவது சிலேடை எனப்படும். இனி,
முன்னால் காட்டிய அடிகளில் இடம்பெறும் சிலேடை
நயத்தைக்
காண்போம்.
வையம் படைக்கு மதனையும் என்பது
1) ஐ + அம்பு + அடைக்கும் + மதனையும்
2) வையம் + படைக்கும் + மதனையும்
என்று விரியும்.
(ஐ அம்பு = முல்லை, அசோகு நீலம், மா, தாமரை என்னும்
ஐந்து மலர் அம்புகள்,
அடைக்கும் = வைத்திருக்கும், மதன் =
மன்மதன், வையம் = உலகம், படைக்கும் மதனையும் = உலகில்
உயிர்கள் தோன்றுவதற்குக் காரணமான காதல் உணர்வை
ஊட்டும் மன்மதனையும்)
என்று இரு பொருள்களைத் தருகின்றது.
இங்கு, மலர் ஆகிய அம்பைக் கொண்டுள்ள
மன்மதனைக்
கிளி சுமக்கிறது என்ற கருத்து
வெளிப்படுகின்றது.
மலைத்திடும் மாரன் ஒற்றை வண்டிலும்
இல்லாமல்
செலுத்திய கால் தேரை முழுத் தேராய் - பெலத்து
இழுத்துக்
கொண்டு திரி பச்சைக் குதிராய்.....
(கண்ணிகள் : 4-5) |
(மலைத்திடும் = போர் செய்யும், மாரன்
= மன்மதன், வண்டில்
= சக்கரம், கால்
= தென்றல் காற்று, பெலத்து = வலிமையுடன்)
மன்மதனின் தேர் தென்றல் காற்று. அதற்குச்
சக்கரம்
கிடையாது. அந்தத் தேரைக் கிளி இழுத்துச் செல்கின்றது.
அதாவது மன்மதனின் வாகனமாகக் கிளி உள்ளது என்பது
கூறப்படுகிறது.
2.2.5
கிளியின் பிற சிறப்புகள்
தூது அனுப்பும் தலைவி கிளியின் பல்வேறு
சிறப்புகளைக்
கூறுவதாக அழகர் கிள்ளை விடு தூது நூல் காட்டுகின்றது.
சான்றுகளாகச் சிலவற்றைக் காண்போம்.
தள்ளரிய யோகங்கள் சாதியாதே
பச்சைப்
பிள்ளையாய் வாழும் பெரியோர்
யார்-உள்உணர்ந்த
மாலினைப் போல மகிதலத்தோர்
வாட்டம்அறப்
பாலனத்தாலே பசி தீர்ப்பாய்-மேல்
இனத்தோர்
நட்டார் எனினும் நடந்துவரும் பூசைதனை
விட்டார் முகத்தில்
விழித்திடாய்-வெட்டும் இரு
வாள் அனைய கண்ணார் வளர்க்க வளர்வாய்
உறவில்
லாளனைநீ கண்டால் அகன்றிடுவாய்-கேளாய்
இருவடிவு கொண்டமையால் எங்கள் பெரிய
திருவடிகள் வீறுஎல்லாம் சேர்வாய்
(கண்ணிகள் : 18-22) |
 |
(யோகங்கள் = மருந்துகள், யோக
அப்பியாசங்கள், பச்சைப்பிள்ளை =
இளம்பிள்ளை, பச்சை நிறமுடைய கிளி; மகிதலத்தோர்
= உலகோர்; வாட்டம் அற = துன்பம் நீங்க;
பாலனம்
= பால் அன்னம் (பால்சோறு); நட்டார் -
நண்பர்; பூசை - பூனை; வில்லாளன் -
வில்லை ஏந்தியவன் (வேடன்); இரு வடிவு - இரண்டு
நிறங்கள்; பெரிய திருவடிகள் - கருடன்; வீறு
- பெருமை)
• கிளியின் தோற்றப் பொலிவு
முற்கூறிய அடிகளிலும் இலக்கிய நயம்
சிறக்கக் காணலாம். மனிதர் உடற்பயிற்சி செய்து இளமையுடன்
வாழ்வர். ஆனால், கிளி எந்த மருந்தும் உண்ணாது பச்சைப் பிள்ளையாய்
உள்ளது. கிளி பால்சோறு உண்டு பசியைத் தீர்க்கின்றது.
நண்பர்கள் என்றாலும் பூனையை ஏவி
விட்டவர் பக்கத்தில் கிளி விழிக்காது. வில்லை வைத்துள்ள வேடனைக் கண்டால்
அகன்று விடும். கிளிக்கு உடம்பில் பச்சை நிறமும் மூக்கில் சிவப்பு
நிறமும் உள்ளது. எனவே அது மனிதவடிவமும் பறவை
வடிவமும் கொண்ட
கருடனின் பெருமைகளை ஒத்த சிறப்பைப் பெற்றுள்ளது.
இவ்வாறு தூது அனுப்பும் தலைவியால் தூதுப்
பொருள் ஆகிய கிளியின் பல்வேறு பெருமைகள்
போற்றப்படுகின்றன.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I
|
1. |
தூது இலக்கிய
வகையின் இலக்கணம் கூறும் நூல்கள் யாவை? |
|
விடை |
|
2. |
தமிழ் மொழியில் தோன்றிய
முதல் தூது நூல் எது? |
|
விடை |
|
3. |
தொல்காப்பியர் பிரிவு
ஏற்படுவதற்குரிய காரணங்களாக எவற்றைக் கூறுகிறார்? |
|
விடை |
|
4. |
தூதுப் பொருளின் பெருமைகளைக்
கூறும் பகுதி எதற்குச் சான்றாக அமைகிறது? |
|
விடை |
|
5. |
கிளியின் வேறு பெயர்கள்
இரண்டைக் குறிப்பிடுக. |
|
விடை |
|
|