குற்றாலம் என்ற இடத்தின்
பெயரால் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற நூல் பெயர்
பெற்றது.
குற்றாலம் என்பது தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள
திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசி வட்டாரத்தில்
உள்ள ஊர் ஆகும். இந்த இடத்தில்
குறும்பலா மரத்தின் அடியில்
இறைவன் ஆகிய சிவபெருமான்
எழுந்து அருளி உள்ளான். இந்த
இறைவனுக்குத் திரிகூடநாதர் என்ற பெயரும் உண்டு. இந்த
இறைவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல்.
இந்த நூலின் ஆசிரியர் திரிகூடராசப்பக்
கவிராயர் ஆவார்.
இவர் பிறந்த இடம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த
மேலகரம் என்பது ஆகும். இந்த
நூலில் 128 பாடல்கள் உள்ளன.
இனி இந்த நூலின் துணையால் குறவஞ்சி
இலக்கியம் பற்றி
விரிவாகக் காணலாம்.
3.2.1 அமைப்பும் பொருளும்
பொதுவாகக் குறவஞ்சி இலக்கியவகையின்
அமைப்பையும்
பொருளையும் பின்வரும் வரைபடம் விளக்கும்.
3.2.2 கடவுள்
வணக்கம்
ஒரு நூலை இயற்றும் புலவர் அந்த நூல் இனிது முடிவதற்காகக்
கடவுளை வேண்டி வாழ்த்துவது மரபு ஆகும். இந்த
மரபுக்கு ஏற்பத்
திரிகூடராசப்பக் கவிராயரும் நூலின்
தொடக்கத்தில் கடவுள்
வணக்கம் பாடுகின்றார்.
நூலின் தொடக்கத்தில் விநாயகர், முருகன், திரிகூடநாதர்,
குழல்வாய் மொழி அம்மை, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,
சுந்தரர், அகத்தியர், மாணிக்கவாசகர், கலைமகள் (சரசுவதி)
ஆகியோரை வணங்கி நூலைத் தொடங்குகின்றார்.
சான்றாக ஒரு
பாடலைப் பார்ப்போமா?
பூமலி
இதழி மாலை புனைந்த குற்றாலத்து ஈசர்
கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட
மாமதத்து அருவி பாயும் மலை என வளர்ந்த மேனிக்
காமலி தருப்போல் ஐந்து கை வலான் காவலானே
(திருக்குற்றாலக் குறவஞ்சி
பாடல் 1) |
 |
(மலி = நிறைந்த; இதழி =
கொன்றைமலர்; கா =
கற்பகச்சோலை; தரு = கற்பகமரம்;
வலான் = வல்லவன்)
திருக்குற்றால நாதர் கொன்றை மலர் மாலையை அணிந்துள்ளார். அவருடைய தாமரை மலர்
போன்ற பாதங்களை வணங்குகின்றேன்.
குறவஞ்சி என்ற இந்த
நூலைப் பாட, பிள்ளையார்ப் பெருமானை
வணங்குகின்றேன். எத்தகைய பிள்ளையார்ப் பெருமான்? மதமாகிய
அருவி பொழிகின்ற மலைபோன்ற உடம்பை உடையவர். கற்பக
மரம்
போல் கேட்டவற்றைக் கொடுப்பவர். இத்தகைய விநாயகரை
வணங்குகின்றேன் என்று புலவர் பாடுகின்றார்.
இப்பாடலில் பிள்ளையாருடைய உடம்புக்கு மலை
உவமையாகக்
கூறப்படுகிறது. கேட்ட
வரங்களை அளிப்பவர்
என்பதற்குக் கற்பகத்தருவை உவமை
கூறுகின்றார். தாம் இயற்றும் குறவஞ்சி நூலைக்
குறவஞ்சித் தமிழ் என்கிறார்.
3.2.3 அவை அடக்கம்
நூலை இயற்றும் புலவர்கள் தம் அடக்கம் உடைமையை
வெளிப்படுத்த அவை அடக்கம்
பாடுதல் மரபு ஆகும். இதற்கு
ஏற்பத் திரிகூட ராசப்பக்
கவிராயரும் அவை அடக்கம் பாடுகிறார்.
அந்தப் பாடல்
இதோ.
தாரினை விருப்பம் ஆகத் தலைதனில்
முடிக்கும் தோறும்
நாரினைப் பொல்லாது என்றே ஞாலத்தார் தள்ளுவாரோ
சீரிய தமிழ் மாலைக்குள் செல்வர்
குற்றாலத்து ஈசர்
பேரினால் எனது சொல்லைப் பெரியவர்
தள்ளார் தாமே
(பாடல் 9) |
 |
(தார் = மாலை; முடிக்கும் தோறும் =
அணியும்போது எல்லாம்;
ஞாலத்தார் = உலகில்
உள்ளவர்;
தள்ளார் = தள்ளமாட்டார்)
இந்தப் பாடலின் பொருளைப் பார்ப்போம். உலகில் உள்ள மக்கள் மலர் மாலையைத் தலையில் சூடுவர்.
அப்போது அந்த மாலை தொடுக்கப்பட்டு உள்ள வாழை நாரைக் கீழே எறிய
மாட்டார்கள். அதுபோல நான் இயற்றும் இந்தக் குற்றாலக் குறவஞ்சி
என்ற நூலில் குற்றால நாதர் ஆகிய இறைவனின் பெயர் உள்ளது.
எனவே என் பாடல்களை அறிஞர்கள் தள்ளாமல் ஏற்றுக்கொள்வர்
என்கிறார்.
இங்கு, குற்றாலக் குறவஞ்சி என்ற நூலுக்கு மாலை உவமை ஆகிறது. மலருக்குச் சிவபெருமான் உவமை ஆகிறார். நாருக்குச்
சொல் உவமை ஆகிறது.
|