5.1.1 தோற்றம்
நண்பர்களே! இந்த மடல் இலக்கியத்தின் தோற்றத்தைப்
பற்றிச் சிறிது பார்ப்போமா?
அகப்பொருள் கூறுகளில் ஒன்று மடல் ஏறுதல் என்பது
ஆகும். தொல்காப்பியர் பொருள் அதிகாரம்
களவு
இயலில் (11)
இதைப் பற்றிக் கூறுகின்றார். தலைவன் தலைவியிடம் காதல்
கொள்கிறான். தலைவியைத் தன்னுடன் கூட்டுவிக்கும்படி
தலைவன் தோழியிடம்
வேண்டுகிறான். ஆனால் தலைவனால்
தலைவியை அடைய
முடியவில்லை. இதனால் தலைவன் மனம்
வருந்துகிறான். இறுதியில் தலைவியை அடைவதற்காகத்
தலைவன் மடல் ஏறப்
போவதாகத் தோழியிடம் கூறுகின்றான்.
• மடல் கூற்றும் மடல் விலக்கும்
நம்பி அகப்பொருள் என்ற
இலக்கண நூல் மடல் என்பதனை இரு நிலைகளில் விளக்குகின்றது.
தலைவன் தோழியிடம் தலைவியைத் தான் அடையாவிட்டால்
மடல் ஏறுவேன் என்று
கூறுவது மடல் கூற்று ஆகும். தோழி தலைவனிடம் மடல் ஏற வேண்டாம் என்று
வேண்டித் தலைவன் மடல் ஏறுவதை விலக்குவது மடல் விலக்கு
ஆகும்.
• சங்க இலக்கியங்களில்
சங்க இலக்கியங்களில் அகப்பொருள் தொடர்பான
இலக்கியங்கள் மடல் பற்றிய செய்திகளைத்
தருகின்றன சான்றாக,
துன்பத்தின் துணை ஆய மடல்
என்று கலித்தொகை (பாடல்.139: வரி-29) கூறக் காணலாம்.
தலைவன் தலைவியைப் பிரிந்த துன்பத்திற்கு மடல் துணையாக
உள்ளது என்ற கருத்து இங்குக் காணப்படுகிறது.
பிரிவு காலத்தில்
எழுதப்படும் மடல், காதலர்கள் ஒருவரை
ஒருவர் நேரில்
பார்த்துப் பேசுவது போன்ற உணர்வை
ஏற்படுத்தும். எனவே
துன்பத்தின் துணையாக அமைகிறது சங்க
இலக்கியத்துள் இடம்
பெறும் மடல் பற்றிய செய்திகள் மூலம் மடல் ஏற
எண்ணுவோரின் மன நிலை, மடல் ஏறுவதன் நோக்கம்
போன்றவை தெரிய வருகின்றன.
சங்க இலக்கியத்தில் மடல் பாடிய மாதங்கீரனார் என்ற
புலவர் குறிப்பிடப்படுகிறார்.
திருக்குறளில் நாணுத்துறவுரைத்தல் என்ற அதிகாரத்தில்
மடல் பற்றிய செய்திகளைத் திருவள்ளுவர்
கூறுகின்றார்.
இந்த அதிகாரத்தில் காம நோயால் வருந்துபவர்களுக்கு
மடல் காப்பு ஆக உள்ளமை, வெட்கத்தை
விட்டு மடல் ஏறத்
துணிதல் போன்ற செய்திகள்
காணப்படுகின்றன.
நம்மாழ்வார் இறைவனின் பிரிவைப்
பொறுக்காது தலைவி,
பழி ஏற்படும் என்று எண்ணாது மடல் ஏறத் துணிந்தமையை
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில்
பாடுகிறார். (திருவாய்மொழி, 5.3.9 & 10)
இவ்வாறு, இலக்கண நூல்களிலும், இலக்கிய நூல்களிலும்
இடம் பெறும் மடல் பற்றிய செய்திகளைக்
கருவாகக் கொண்டு
மடல் என்ற தனி இலக்கிய வகை
தோன்றியது எனலாம்.
• முன்னோடிகள்
இந்த மடல் இலக்கிய வகையின்
முன்னோடியாகத் திகழ்பவர்
திருமங்கை ஆழ்வார் ஆவார். இவர் சிறிய திருமடல், பெரிய
திருமடல் என்ற இரண்டு மடல்
இலக்கியங்களைப் பாடியுள்ளார்.
பின்னர், பல மடல் இலக்கியங்கள்
எழுந்துள்ளன. அவற்றுள்
தத்துவராயர் இயற்றிய கலி மடல்,
காளமேகப் புலவர் இயற்றிய
சித்திர மடல், தாசி காளி
முத்துப் புலவர் இயற்றிய வருண குல
ஆதித்தன் மடல் என்பன
சுட்டுவதற்கு உரியன ஆகும்.
|