2.2 பிறப்பிடம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும்

உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைத் தொகுத்துக் காண்போம். இச்செய்திகளை மேலும் நன்கு விளங்கிக் கொள்வதற்கு இது பயன்படும்.

2.2.1 ஒற்றுமை

முதலில், தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமைகளைக் காண்போம்.

(1) இரண்டு நூல்களும், எழுத்துஒலிகள் பிறப்பதற்குத் தேவைப்படும் பொதுவான முயற்சியே, உயிர்எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுவது என்பதை உரைக்கின்றன.
(2) இவ்விரு நூல்களும் உயிர்எழுத்துகள் பிறக்கின்ற இடமாகக் கழுத்தைக் (மிடறு) குறிப்பிடுகின்றன.

2.2.2 வேற்றுமை

இனி, தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் வேற்றுமையினைக் காணலாம்.

தொல்காப்பியம் ‘தந்நிலை திரியா’ என்ற தொடரைப் பயன்படுத்தித் தந்நிலை திரியும் உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் வேறு என்பதை நுட்பமாகப் புலப்படுத்துகின்றது.

நன்னூலில் அனைத்து உயிர்எழுத்துகளுக்கும் பொதுவாகப் பிறப்பிட இலக்கணம் காணப்படுகின்றது. இதில் இந்த நுட்ப வேறுபாடு கூறப்படவில்லை.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியம் கூறுவது யாது? விடை
2. தொல்காப்பியர் ‘தந்நிலை திரியா’ என்னும் தொடரால் உணர்த்துவது யாது? விடை
3. உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் குறித்து நன்னூல் கூறுவது யாது? விடை
4. நன்னூல் உயிர்எழுத்துகளின் பிறப்புடன் சேர்த்துக் கூறுவன யாவை? விடை
5. நன்னூலில் ‘ஆவி’ என்னும் சொல் உணர்த்துவது யாது? விடை