2.6 தொகுப்புரை

மொழி இறுதியில் பன்னிரண்டு உயிர்களும், ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினொரு மெய்களும், குற்றியலுகரம் ஒன்றும் ஆக 24 எழுத்துகள் வரும். மொழிமுதலில் பன்னிரண்டு உயிர்களும், க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங என்னும் பத்தும் மெய்களும் வரும். இவ்வெழுத்துகளே புணர்ச்சிக்கு அடிப்படை.

இருபத்து நான்கு எழுத்துகளை இறுதியாகக் கொண்ட எல்லாவகைச் சொற்களுக்கும் முன்வரும் ஞ, ந, ம, வ, ய என்னும் மெல்லின, இடையின மெய்கள் இயல்பாக வரும். தனிக்குறிலை அடுத்து வரும் யகரமெய், தனி ஐகாரம், நொ, து என்பனவற்றிற்கு முன் வரும் ஞ, ந, ம என்னும் மெல்லின மெய்கள் மிக்கு வரும். நகரமெய் ண,ள என்னும் மெய்களுக்கு முன் வரும்போது ணகரமாகவும், ன,ல என்னும் மெய்களுக்கு முன் வரும்போது னகரமாகவும் திரியும்.

பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்களின் ஈற்று மெய்கள், வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும்.

பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்களுக்கு முன்வரும் வல்லினம் இயல்பாகும்.

சில உயர்திணைப் பெயர்கள் நாற்கணத்தோடு புணரும்போது தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் விகாரங்களை அடையும்.

வினாப்பெயர், விளிப்பெயர்களுக்கு முன் வரும் வல்லினம் இயல்பாகும்.

உயிர்களையும், ய,ர,ழ என்னும் மெய்களையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினை, ஏவல்வினைகளுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும். ஏவல் வினையின் முன் வரும் வல்லினம் சில இடங்களில் இயல்பாக வருதலோடு, மிக்கும் வரும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
பொதுப்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
2.
நாற்கணம் யாவை?
3.
கபிலன்+பரணன்-இது புணர்ச்சியில் எவ்வாறு வரும்?
4.
மக்கட் பண்பு - பிரித்துக்காட்டுக.
5.
சொல்லின் ஈற்றிலே வரும் மூன்று வினா எழுத்துகள் யாவை?
6.
வினாப் பெயர் யாது?