6.1 வல்லினம் மிகும் இடங்கள்

நிலைமொழியின் இறுதியில் உள்ள உயிர்களின் முன்னரும், ய,ர,ழ என்னும் மெய்களின் முன்னரும் வருமொழி முதலில் வருகின்ற க,ச,த,ப என்னும் வல்லின மெய்கள் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதைச் சான்றுடன் காணலாம்.

6.1.1 சுட்டு, வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன் வல்லினம் மிகல்

அ, இ என்பன சுட்டு எழுத்துகள்; எ, யா என்பன வினா எழுத்துகள். இவற்றின் முன்னும், இவற்றின் அடியாகத் தோன்றிய அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு; ஆங்கு, ஈங்கு, யாங்கு; அப்படி, இப்படி, எப்படி; ஆண்டு, ஈண்டு, யாண்டு; அவ்வகை, இவ்வகை, எவ்வகை, அத்துணை, இத்துணை, எத்துணை என்னும் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

அ + காலம் = அக்காலம்
எ + திசை = எத்திசை
அந்த + பையன் = அந்தப் பையன்
எந்த + பொருள் = எந்தப் பொருள்
அங்கு + கண்டான் = அங்குக் கண்டான்
எங்கு + போனான் = எங்குப் போனான்
யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான்
அப்படி + சொல் = அப்படிச் சொல்
எப்படி + சொல்வான் = எப்படிச் சொல்வான்
ஈண்டு + காண்போம் = ஈண்டுக் காண்போம்
யாண்டு + காண்பேன் = யாண்டுக் காண்பேன்
அவ்வகை + செய்யுள் = அவ்வகைச் செய்யுள்
எத்துணை + பெரியது = எத்துணைப் பெரியது

6.1.2 ஓர் எழுத்துச் சொற்களின் முன் வல்லினம் மிகல்

கை, தீ, தை, பூ, மை என்னும் ஓர் எழுத்துச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.

சான்று:

கை + குழந்தை = கைக்குழந்தை
கை + பிடி = கைப்பிடி
தீ + பிடித்தது = தீப்பிடித்தது
தீ + பெட்டி = தீப்பெட்டி
தீ + புண் = தீப்புண்
தை + பொங்கல் = தைப்பொங்கல்
தை + திருநாள் = தைத்திருநாள்
பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
பூ + பல்லக்கு = பூப்பல்லக்கு
மை + கூடு = மைக்கூடு
மை + பேனா = மைப்பேனா

6.1.3 குற்றியலுகரச் சொற்கள் முன் வல்லினம் மிகல்

வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், சில மென்தொடர் மற்றும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன்னும், உயிர்த்தொடர் போன்ற அமைப்பை உடைய சில முற்றியலுகரச் சொற்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

 • வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்
 • சான்று:

  பாக்கு + தோப்பு = பாக்குத்தோப்பு
  அச்சு + புத்தகம் = அச்சுப்புத்தகம்
  எட்டு + தொகை = எட்டுத்தொகை
  பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
  இனிப்பு+ சுவை = இனிப்புச்சுவை
  கற்று + கொடுத்தான் = கற்றுக்கொடுத்தான்

 • சில மென்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்
 •        சான்று:

  குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி
  பஞ்சு + பொதி = பஞ்சுப்பொதி
  துண்டு + கடிதம் = துண்டுக்கடிதம்
  மருந்து + சீட்டு = மருந்துச் சீட்டு
  பாம்பு + தோல் = பாம்புத்தோல்
  கன்று + குட்டி = கன்றுக்குட்டி

  இவற்றை வல்லினம் மிகாமல் குரங்கு குட்டி, மருந்து சீட்டு என்று எழுதினால் குரங்கும் குட்டியும், மருந்தும் சீட்டும் என்று பொருள்பட்டு உம்மைத் தொகைகள் ஆகிவிடும்.

 • சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்
 • சான்று:

  முதுகு + தண்டு = முதுகுத்தண்டு
  விறகு + கடை = விறகுக்கடை
  படகு + போட்டி = படகுப்போட்டி
  பரிசு + புத்தகம் = பரிசுப்புத்தகம்
  மரபு + கவிதை = மரபுக்கவிதை

  6.1.4 முற்றியலுகரச் சொற்கள் முன் வல்லினம் மிகல்

  தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின மெய்யின் மேலும், பிற மெய்களின் மேலும் ஏறிவருகின்ற உகரம் முற்றியலுகரம் எனப்படும். நடு, புது, பொது, பசு, திரு, தெரு, முழு, விழு என்னும் முற்றியலுகரச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  நடு + கடல் = நடுக்கடல்
  புது + புத்தகம் = புதுப்புத்தகம்
  பொது + பணி = பொதுப்பணி
  பசு + தோல் = பசுத்தோல்
  திரு + கோயில் = திருக்கோயில்
  தெரு + பக்கம் = தெருப்பக்கம்
  முழு + பேச்சு = முழுப்பேச்சு
  விழு + பொருள் = விழுப்பொருள்

  தனி நெட்டெழுத்தை அடுத்தோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லினமெய் அல்லாத பிற மெய்களின் மேல் ஏறி வருகின்ற உகரமும் முற்றியலுகரம் ஆகும். இத்தகைய முற்றியலுகரச் சொற்கள் பெரும்பாலும் ‘வு’ என முடியும். இவற்றின் முன் வரும் வல்லினமும் மிகும்.

  சான்று:

  சாவு + செய்தி = சாவுச்செய்தி
  உணவு + பொருள் = உணவுப்பொருள்
  உழவு + தொழில் = உழவுத்தொழில்
  நெசவு + தொழிலாளி = நெசவுத்தொழிலாளி
  தேர்வு + கட்டணம் = தேர்வுக்கட்டணம்
  கூட்டுறவு + சங்கம் = கூட்டுறவுச் சங்கம்
  பதிவு + தபால் = பதிவுத்தபால்
  இரவு + காட்சி = இரவுக்காட்சி

  6.1.5 வேற்றுமைப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகல்

  இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையிலான ஆறு வேற்றுமைகள் ஒவ்வொன்றும் புணர்ச்சியில் மூன்று வகையாக வருகின்றன.

  1. வேற்றுமை உருபு தொக்கு (மறைந்து) வருவது. இது வேற்றுமைத்தொகை எனப்படும்.

  சான்று:

  கனி + தின்றான் = கனிதின்றான்

  இத்தொடருக்குக் கனியைத் தின்றான் என்று பொருள். கனி தின்றான் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ தொக்கு வந்துள்ளது. எனவே இது இரண்டாம் வேற்றுமைத் தொகை.

  1. வேற்றுமை உருபும், அதனோடு சேர்ந்து வரும் சில சொற்களும் தொக்கு வருவது. இது வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனப்படும்.

  சான்று:

  தயிர் + குடம் = தயிர்க்குடம்

  இத்தொடருக்குத் தயிரை உடைய குடம் என்று பொருள். தயிர்க்குடம் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ என்பதும், அதனோடு சேர்ந்து வந்துள்ள உடைய என்பதும் தொக்கு வந்துள்ளன. எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.

  1. வேற்றுமை உருபு விரிந்து வருவது. இது வேற்றுமை விரி எனப்படும்.

  சான்று:

  கனியை + தின்றான் = கனியைத் தின்றான்

  மேலே கூறிய சான்றுகளை நோக்குவோம். வல்லினம் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் மிகாமலும், மற்ற இரண்டிலும் மிக்கும் வந்துள்ளது புலனாகும். இதுபோல ஒவ்வொரு வேற்றுமையும் மூவகைப் புணர்ச்சியில் வல்லினம் மிக்கும், மிகாமலும் வரும்.

  இனி வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் மிகும் இடங்களைப் பார்ப்போம்.

  (i) இரண்டாம் வேற்றுமை விரியின் (ஐ உருபின்) முன் வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  ஒலியை + குறை = ஒலியைக் குறை
  பாயை + சுருட்டு = பாயைச் சுருட்டு
  கதவை + தட்டு = கதவைத் தட்டு
  மலரை + பறி = மலரைப் பறி

  (ii) நான்காம் வேற்றுமை விரியின் (கு உருபின்) முன்வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  எனக்கு + கொடு = எனக்குக் கொடு
  வீட்டுக்கு + தலைவி = வீட்டுக்குத் தலைவி
  ஊருக்கு + போனான் = ஊருக்குப் போனான்

  (iii) நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  குறிஞ்சி + தலைவன் = குறிஞ்சித் தலைவன்
                              (குறிஞ்சிக்குத் தலைவன்)
  படை + தளபதி = படைத்தளபதி (படைக்குத் தளபதி)
  கூலி + படை = கூலிப்படை (கூலிக்குப் படை)

  (iv) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  நகை + கடை = நகைக்கடை (நகையை விற்கும் கடை)
  தயிர் + குடம் = தயிர்க்குடம் (தயிரை உடைய குடம்)
  எலி + பொறி = எலிப்பொறி (எலியைப் பிடிக்கும் பொறி)
  மலர் + கூந்தல் = மலர்க்கூந்தல் (மலரை உடைய கூந்தல்)
  நெய் + குடம் = நெய்க்குடம் (நெய்யை உடைய குடம்)

  (v) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  வெள்ளி + கிண்ணம் = வெள்ளிக் கிண்ணம்
                                    (வெள்ளியால் ஆகிய கிண்ணம்)
  இரும்பு + பெட்டி = இரும்புப் பெட்டி (இரும்பினால் ஆகிய பெட்டி)
  தேங்காய் + சட்னி = தேங்காய்ச் சட்னி (தேங்காயால் ஆன சட்னி)
  பித்தளை + குடம் = பித்தளைக் குடம் (பித்தளையால் ஆன குடம்)

  (vi) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும்.

  சான்று:

  கோழி + தீவனம் = கோழித் தீவனம் (கோழிக்கு உரிய தீவனம்)
  குழந்தை + பால் = குழந்தைப் பால் (குழந்தைக்கு ஏற்ற பால்)

  (vii) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  வாய் + பாட்டு = வாய்ப்பாட்டு (வாயிலிருந்து வரும் பாட்டு)
  கனி + சாறு = கனிச்சாறு (கனியிலிருந்து எடுக்கப்படும் சாறு)

  (viii) ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  தண்ணீர் + பாம்பு = தண்ணீர்ப்பாம்பு (தண்ணீரில் உள்ள பாம்பு)
  சென்னை + கல்லூரி = சென்னைக் கல்லூரி (சென்னையில் உள்ள கல்லூரி)
  மதுரை + கோயில் = மதுரைக்கோயில் (மதுரையில் உள்ள கோயில்)
  மலை + பாம்பு = மலைப்பாம்பு (மலையில் உள்ள பாம்பு)

  (ix) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின், அதன் முன்னர் வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  கிளி + கூண்டு = கிளிக்கூண்டு
  புலி + குட்டி = புலிக்குட்டி
  நரி + பல் = நரிப்பல்
  வாழை + தண்டு = வாழைத்தண்டு
  எருமை + கொம்பு = எருமைக் கொம்பு
  தேர் + சக்கரம் = தேர்ச்சக்கரம்

  6.1.6 அல்வழிப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகல்

  அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொடர்கள் தொகை நிலைத்தொடர், தொகாநிலைத் தொடர் என இருவகைப்படும். இவ்விரு வகைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

 • தொகை நிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகல்
 • அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகைநிலைத் தொடர்கள் வினைத்தொகை, பண்புத்தொகை (இருபெயரொட்டுப் பண்புத்தொகையும் இதில் அடங்கும்), உவமைத் தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை ஆகிய ஐந்தும் ஆகும். இத்தொகைநிலைத் தொடர்களில் எந்தெந்தத் தொடர்களில் வல்லினம் மிகும் என்பதைப் பார்ப்போம்.

  i) பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  சிவப்பு + துணி = சிவப்புத்துணி
  புதுமை + பெண் = புதுமைப்பெண்
  தீமை + குணம் = தீமைக்குணம்
  வெள்ளை + தாள் = வெள்ளைத்தாள்
  மெய் + பொருள் = மெய்ப்பொருள்
  பொய் + புகழ் = பொய்ப்புகழ்
  புது + துணி = புதுத்துணி
  பொது + பண்பு = பொதுப்பண்பு

  ii) இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

  நிலைமொழியில் சிறப்புப் பெயரும் வருமொழியில் பொதுப்பெயருமாகச் சேர்ந்து வரும். இடையில் ஆகிய என்ற பண்பு உருபு மறைந்து வரும். இதுவே இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும். இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்
  வெள்ளி + கிழமை = வெள்ளிக் கிழமை
  மல்லிகை + பூ = மல்லிகைப்பூ
  சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
  உழவு + தொழில் = உழவுத்தொழில்

  iii) உவமைத் தொகையில் வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  மலர் + கண் = மலர்க்கண் (மலர் போன்ற கண்)
  தாமரை + கை = தாமரைக்கை (தாமரை போன்ற கை)

 • தொகாநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகல்
 • எழுவாய்த் தொடர், விளித்தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத் தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத்தொடர் என்னும் ஒன்பதும் அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகாநிலைத் தொடர்கள் ஆகும். இவற்றுள் எந்தெந்தத் தொடர்களில் வரும் வல்லினம் மிகும் என்பதைப் பார்ப்போம்.

  i) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்

  பெயரெச்சத்தில் ஒரு வகை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். அறியாத என்பது எதிர்மறைப் பெயரெச்சம். இதன் முன் வரும் வல்லினம் மிகாது. சான்று: அறியாத பிள்ளை. ஆனால் அறியாத என்பதில் உள்ள ‘த’ என்னும் ஈறு கெட்டு (மறைந்து), அறியா என நிலைமொழியில் நிற்கும். இது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதன் முன் வருமொழி முதலில் வரும் வல்லினம் கட்டாயம் மிகும். சான்று: அறியா + பிள்ளை = அறியாப்பிள்ளை.

  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகுதலுக்கு மேலும் பல சான்றுகள் காட்டலாம். அவை வருமாறு:

  செல்லா + காசு = செல்லாக் காசு (செல்லாத காசு)
  ஓடா + குதிரை = ஓடாக் குதிரை (ஓடாத குதிரை)
  தீரா + சிக்கல் = தீராச் சிக்கல் (தீராத சிக்கல்)
  காணா + பொருள் = காணாப் பொருள் (காணாத பொருள்)

  ii) அகர ஈற்று, இகர ஈற்று, யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்னும், வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன்னும், ஆக, ஆய் என முடியும் வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

 • அகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்
 • சான்று:

  வர + சொன்னான் = வரச் சொன்னான்
  உண்ண + போனான் = உண்ணப் போனான்
  உட்கார + பார்த்தான் = உட்காரப் பார்த்தான்

 • இகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்
 • சான்று:

  ஓடி + போனான் = ஓடிப் போனான்
  தேடி + பார்த்தான் = தேடிப் பார்த்தான்
  கூறி + சென்றான் = கூறிச் சென்றான்
  கூடி + பேசினர் = கூடிப் பேசினர்

 • யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்
 • சான்று:

  போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்

 • வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்
 • சான்று:

  கற்று + கொடுத்தான் = கற்றுக் கொடுத்தான்
  வாய்விட்டு + சிரித்தான் = வாய்விட்டுச் சிரித்தான்
  படித்து + கொடுத்தான் = படித்துக் கொடுத்தான்
  எடுத்து + தந்தான் = எடுத்துத் தந்தான்
  கடித்து + குதறியது = கடித்துக் குதறியது
  வைத்து + போனான் = வைத்துப் போனான்

 • ஆக, ஆய், என என்று முடியும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகல்
 • சான்று:

  தருவதாக + சொன்னான் = தருவதாகச் சொன்னான்
  வருவதாய் + கூறினார் = வருவதாய்க் கூறினார்
  வா என + கூறினார் = வா எனக் கூறினார்

  மேலே காட்டிய சான்றுகள் எல்லாம் தெரிநிலை வினையெச்சங்கள் ஆகும். வினையெச்சத்தில் குறிப்பு வினையெச்சம் என்ற ஒன்றும் உண்டு. ஒரு தொழிலை உணர்த்தும் வினைப்பகுதியிலிருந்து தோன்றுவது தெரிநிலை வினையெச்சம். சான்று: உண்ணப் போனான். உண் என்ற வினைப்பகுதியிலிருந்து தோன்றியதால் உண்ண என்பது தெரிநிலை வினையெச்சம். ஒரு பண்பை உணர்த்தும் பெயர்ப்பகுதியிலிருந்து தோன்றுவது குறிப்பு வினையெச்சம். சான்று: மெல்லப் பேசினாள். மென்மை என்ற குணத்தை உணர்த்தும் பெயர்ப்பகுதியிலிருந்து தோன்றியதால் மெல்ல என்பது குறிப்பு வினையெச்சம். மொழியியலார் இதனை வினையடை (Adverb) என்று குறிப்பிடுவர். மேலே பார்த்த தெரிநிலை வினையெச்சம் போலவே குறிப்புவினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  நிறைய + பேசுவான் = நிறையப் பேசுவான்
  இனிக்க + பேசுவான் = இனிக்கப் பேசுவான்
  நன்றாக + சொன்னான் = நன்றாகச் சொன்னான்
  வேகமாக + கூறினான் = வேகமாகக் கூறினான்
  விரைவாய் + பேசினார் = விரைவாய்ப் பேசினார்
  மெல்லென + சிரித்தாள் = மெல்லெனச் சிரித்தாள்

  6.1.7 மகர இறுதி கெட்டு உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகல்

  புணர்ச்சியில் மகர இறுதி கெட்டு, உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகும்.

  சான்று:

  மரம் + கிளை > மர + க் + கிளை = மரக்கிளை
  குளம் + கரை > குள + க் + கரை = குளக்கரை
  ஆரம்பம் + பள்ளி > ஆரம்ப + ப் + பள்ளி = ஆரம்பப் பள்ளி
  தொடக்கம் + கல்வி > தொடக்க + க் + கல்வி = தொடக்கக் கல்வி
  அறம் + பணி > அற + ப் + பணி = அறப்பணி
  கட்டடம் + கலை > கட்டட + க் + கலை = கட்டடக்கலை
  வீரம் + திலகம் > வீர + த் + திலகம் = வீரத்திலகம்
  மரம் + பெட்டி > மர + ப் + பெட்டி = மரப்பெட்டி
  பட்டம் + படிப்பு > பட்ட + ப் + படிப்பு = பட்டப்படிப்பு

  மேலே வல்லினம் மிகும் இடங்களைச் சான்றுடன் பார்த்தோம். இதுபோல வல்லினம் இன்னும் சில இடங்களில் மிகும். ஒற்றைக்கை, இரட்டைக் குழந்தைகள், மற்றப் பிள்ளைகள், பயிற்சிப் பள்ளி, பயிற்சிக் கூடம், நகரவைத் தலைவர் என்பன போல வல்லினம் மிகுந்து வரும் தொடர்கள் பல உள்ளன. நமக்குப் பாடத்திட்டத்தில் அமைந்துள்ள பாடங்களையும் (Lessons) பாடநூல்களையும் (Text–Books), பிற நூல்களையும் படிக்கும்போது வாய்விட்டுப் படித்து, எந்த எந்த இடங்களில் வல்லினம் மிக்கு வருகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1.
  தை என்னும் ஓர் எழுத்துச் சொல்லுக்கு முன் வரும் வல்லினம் மிகுதலுக்கு இரு சான்றுகள் தருக.
  2.
  வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகுமா?
  3.
  நடு, புது, பொது – இச்சொற்களுக்கு முன் வல்லினம் மிகுதலுக்குச் சான்று தருக.
  4.
  வேற்றுமைப் புணர்ச்சியில் எந்தெந்த வேற்றுமை உருபுகளின் முன்னர் வரும் வல்லினம் மிகும்?
  5.
  இரும்பு + பெட்டி – இதைச் சேர்த்து எழுதி, அதன் பொருளைக் கூறுக.
  6.
  ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்போது, நிலைமொழி எவ்வாறு இருக்கும்?
  7.
  அல்வழியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் வல்லினம் மிகுந்துவரும் தொடர்கள் யாவை?
  8.
  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகுமா?
  9.
  குறிப்பு வினையெச்சத்தை மொழியியலார் எவ்வாறு குறிப்பிடுவர்?
  10.
  ஆரம்பம் + பள்ளி, கட்டடம் + கலை, பட்டம் + படிப்பு - இவற்றைச் சேர்த்து எழுதுக.