4.2 பாணரின் வறுமையும் செல்வமும்

நல்லியக்கோடனின் வீரம், செல்வம், பெருமை முதலானவற்றைப் பாடிப் பரிசில் பெற்ற பாணன் தனது முந்தைய வறுமை நிலையைப் பரிசு பெறச் செல்லும் பாணனிடம் எடுத்துக் கூறுகிறான். மேலும் பரிசு பெற்ற பிறகு தான் அடைந்த செல்வ நிலையையும் அவனிடம் விளக்கிக் கூறுகிறான். இச்செய்திகளை 126 முதல் 140 வரை உள்ள அடிகள் தெளிவுபடக் கூறுகின்றன.

4.2.1 பாணனின் வறுமை

தமிழ்ப் புலவர்கள் வறுமையில் வாடியதைப் பலரும் அறிவர். அதனால் புலமையும் வறுமையும் பிரிக்க முடியாதன என்ற சொல் வழக்கு ஏற்பட்டது. இவ்வறுமைக்கு இந்நூலில் வருகின்ற பாணனும் விதிவிலக்கு அல்லன். இவ்வறுமை கொடிதினும் கொடிதானது. சிறுபாணாற்றுப்படை கூறும் வறுமையைப் பாருங்கள்.

ஆம்பி பூத்தது

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறையான் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர், முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூழி பூத்த புழல்கால் ஆம்பி

(அடிகள் 130-134)

ஆம்பி என்றால் காளான் என்று பொருள். பாணன் வீட்டில் அடுப்புப் பற்ற வைத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. இதனால் அடுக்களையில் (அடுப்பில்) காளான் முளைத்திருந்தது. இதனை அடுக்களை ஆம்பி பூத்தது என்ற அடி சுட்டுகிறது. தீ மூட்டிப் பல நாட்கள் ஆன அடுப்பில் நாய் ஒன்று குட்டிகளைப் பெற்றெடுத்தது. அந்த நாய் தன் குட்டிகள் மீது மிகுந்த அன்பும், பாசமும், பற்றும் வைத்திருந்தது. ஆனாலும் பிறந்து சில பொழுதே ஆன - கண்களைத் திறந்து பார்க்காத தன் இளம் குட்டிகளுக்குத் தேவையான பால் அந்நாயிடத்தில் இல்லை. அதனால் பால் குடிக்க வந்த தன் இளம் குட்டிகளைப் பால் கொடுக்காது துரத்தியது. அதனையும் மீறி நாய்க்குட்டிகள் தாயின் பால் மடியைப் பற்றி இழுத்தன. வலி தாங்காது நாய் அலறித் துடித்தது. இத்தகைய வீட்டில் கொடிய வறுமையில் நான் வாடினேன் என்று பரிசில் பெற்ற பாணன் வறுமையில் வாடும் பாணனிடம் கூறினான்.

4.2.2 பாணனின் வீடு

பாணன் மட்டும் வறுமையில் வாடவில்லை. அவனது வீடும் வறுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. வறுமையில் வாடிய பாணனின் வீட்டை ஒளிப்படக் காட்சியாக நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறார் நல்லூர் நத்தத்தனார்.

அக்காட்சி இது:

உணவு சமைப்பதற்குத் தேவையான அரிசி உள்ளிட்ட பொருள்கள் இல்லாது அடுக்களை வெறிச்சோடிக் கிடந்தது.

மிகவும் பழைமையானதும் சிதைந்ததுமான வீட்டுச் சுவர். இதில் கறையான் புற்றுக் கிளம்பி இருந்தது.

வீட்டுக் கூரையில் இருந்த கழிகள் (மூங்கில்கள் - வீடுகட்டப் பயன்படும் மரம்) கட்டுகள் அறுந்து கீழே விழுந்தன.

மனைவி

பாணனின் மனைவியின் வறுமைக் கோலத்தைப் பாருங்கள்.

பசியால் இளைத்த உடலை உடையவள்.

வயிறு ஒட்டிக் கிடந்தது.

கைகளில் வளையல்களைத் தவிர வேறு அணிகலன்கள் எதுவும் இல்லை.

வறுமையிலும் செம்மை

பசித் துன்பம் வாட்டியதால் தன் வீட்டுக் குப்பையில் தானாகவே முளைத்துக் கிடந்த வேளைக் கீரையைப் பறித்து வந்தாள். தன் கை நகங்களினால் கிள்ளி வேக வைத்தாள். பணச்செலவு இல்லாமல் கிடைத்த அந்த கீரைக்கு இட வேண்டிய உப்புக்கூட அந்த வீட்டில் இல்லை. எனவே, உப்பில்லாமலேயே வெந்த கீரையை உண்ண அவ்வீட்டில் உள்ள பலரும் காத்திருந்தனர்.

வறுமையிலும் செம்மை என்பது போல, தன் குடும்ப வறுமை வெளியில் எவருக்கும் தெரியாதவாறு வீட்டு வாயில் கதவை மூடினாள்; உப்பில்லாமல் சமைத்த வெந்த கீரையை அனைவரும் உண்டனர்; இவ்வாறு வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்ற வறிய சூழலில் பாணனின் குடும்பம் இருந்தது.

ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்கில்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்....

(அடிகள் 135-140)

4.2.3 பாணனின் செல்வம்

இந்நிலையில்தான் எங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு நல்லியக்கோடனிடம் சென்றோம். அவன் எங்களுக்குச் சுவையான உணவு படைத்து எங்கள் கடும்பசியைப் போக்கினான். இக்கொடிய பசி மீண்டும் வந்து எங்களுக்குத் துன்பம் தராத வகையில் மிகுந்த செல்வத்தையும், யானைகளையும், தேர்களையும் பரிசாக அள்ளி வழங்கினான். இத்தகைய வள்ளலின் அரண்மனையில் இருந்து இப்பொழுது நாங்கள் வந்து கொண்டு இருக்கிறோம்.

சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி
யாம்அவண் நின்றும் வருதும்....

(அடிகள் 142-143)

நீங்களும் செல்க

வறுமையில் வாடும் பாணனே! கொடிய வறுமையைப் போக்கும் நல்லியக்கோடனிடம் நீயும் செல்க. நீயும் உனது சுற்றமும் தயங்காமல் அம்மன்னனிடம் செல்லுங்கள். அங்ஙனம் சென்றால், “அவன் உங்களை அன்போடு வரவேற்பான். பரிசுப் பொருள்கள் பலவற்றை வழங்கி உங்கள் துன்பத்தைப் போக்குவான். எனவே தயங்காமல் செல்லுங்கள்” என்று பரிசு பெற்ற பாணன் வறிய பாணனை வழிப்படுத்தினான். இச்செய்திகள் 142 முதல் 163 வரையிலான அடிகளில் நாடகக் காட்சிபோல வருணிக்கப்படுகின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

நல்லியக்கோடனின் முன்னோர்களைக் குறிப்பிடுக.

விடை

2.

பெருமாவிலங்கைத் தலைவன் யார்?

விடை

3.

ஆம்பி என்றால் என்ன?

விடை

4.

பாணரின் வறுமை நிலையைச் சிறுபாணாற்றுப்படை எப்படி வருணிக்கிறது?

விடை