4.1 கலிப்பாவின் இனம்

    வெவ்வேறு ஓசை அமைப்புகளையுடைய உறுப்புகளின் தொடர்ச்சியால் துள்ளித் துள்ளி வரும் ஓசை ஒழுங்குடையது கலிப்பா என அறிவீர்கள். துள்ளல் ஓசையும் உறுப்புகளின் இணைவும் இல்லாவிடினும் கலிப்பாவின் இனங்களும் சிறப்பான ஓசையினிமை உடையனவே. அதனால்தான் கலிவிருத்தத்தையும் கலித்துறையையும் காப்பியக் கவிஞர்களாகிய கம்பர், திருத்தக்க தேவர், சேக்கிழார் போன்றோர் மிகுதியாகவும் அழகாகவும் பயன்படுத்தினர்.இனிக் கலிப்பாவின் இனங்களாகிய கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் காண்போம்.

4.1.1 கலித்தாழிசை

    (1) கலித்தாழிசை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் அமையும்.

    (2) ஈற்றடி சற்று நீண்டு ஏனைய அடிகள் தம்முள் அளவு ஒத்து வரும்; ஒவ்வாதும் வரும்.(அளவு ஒத்து வருதல் = பாடல் முழுவதிலும் அடிகளில் சீர் எண்ணிக்கை ஒத்து வருதல்)

    (3) ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது சிறப்பான கலித்தாழிசை; தனியே வருவதும் உண்டு.

(ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது பற்றி வெள்ளொத் தாழிசை, ஆசிரியத் தாழிசை, ஒத்தாழிசைக் கலிப்பா ஆகியவற்றின் இலக்கணங்களில் முன்பே படித்திருக்கிறீர்கள்.)

எடுத்துக்காட்டு:

கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம்
பொய்தல் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம்

மாசில் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

மென்தினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்

குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்
    - (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)


(காத்தும் = காக்கின்றோம்; குளவி அடுக்கம் = மல்லிகை பூத்த மலைச்சாரல்; வாரல் = வாராதே)

    மேற்காட்டிய இரண்டடித் தாழிசை முதலடியை (நாற்சீரடி) விட ஈற்றடி (ஐஞ்சீரடி) நீண்டு ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்திருப்பது காண்க. மூன்று தாழிசைகளிலும் சொற்களும் தொடர்களும் பொருளும் திரும்பத் திரும்ப அடுக்கி வந்துள்ளன.

    அடுக்காது தனியே வரும் கலித்தாழிசைக்கு எடுத்துக்காட்டுக் காண்போம்.

எடுத்துக்காட்டு :

வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்
கேள்வரும் போழ்தில் எழால்வாழி வெண்திங்காள்
கேள்வரும் போழ்தில் எழாலாய்க் குறாலியரோ
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்

    - (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)


(வாள் = ஒளி; சிறுநெறி = சிறு காட்டுவழி; எம்கேள் = எம் தலைவன்; எழால் = தோன்றாதே; எழாலாய்க்கு = தோன்றாத உனக்கு ; உறாலியர் = உறாது நீங்குக ; நாகம் = பாம்பு ; எயிறு = பல்)

    தலைவன் வரும்போது தோன்றாதிருந்தால் நிலவைப்பாம்பு விழுங்காதிருக்கும் என்கிறாள் தலைவி.

    நான்கடிகளாய் அமைந்த இக்கலித்தாழிசையில் ஈற்றடி நீண்டு (ஐஞ்சீரடி), ஏனைய அடிகள் அளவொத்து (நாற்சீரடி) வந்திருப்பது காண்க.

    ஈற்றடி நீண்டு ஏனைய அடிகள் அளவு ஒவ்வாது வரும் கலித்தாழிசைக்கு எடுத்துக்காட்டுக் காண்போம்.

எடுத்துக்காட்டு:

பூண்ட பறையறையப் பூதம் மருள
நீண்ட சடையான் ஆடுமே
நீண்ட சடையான் ஆடும் என்ப
மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே

    - (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)


(நீண்ட சடையான் = சிவன்; மாண்ட சாயல் = மாண்புடைய அழகு; மலைமகள் = உமை)

    நான்கடிகளால் அமைந்த இக்கலித்தாழிசையில் ஈற்றடி நீண்டுள்ளது (ஐஞ்சீரடி). ஏனைய அடிகள் தம்முள் ஒவ்வாது வருகின்றன. நாற்சீர், முச்சீர், நாற்சீர் என அவ்வடிகள் வருகின்றன.

  • பரணி இலக்கியக் கலித்தாழிசை

    காரிகையில் சொல்லப்படாத ஒரு கலித்தாழிசை வகையும் உண்டு. பரணி     என்னும் சிற்றிலக்கியம் இவ்வகை கலித்தாழிசையால் அமைவது. காரிகைக்குப் பின்வந்த இலக்கணங்களில் இதன் இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. காரிகை சொல்லும் இலக்கணத்திலிருந்து இது வேறுபடுவது. கலிங்கத்துப் பரணி போன்ற கவிச்சுவை மிக்க இலக்கியங்களில் முழுமையாக     அமைந்திருப்பதனால்     இத்தாழிசையின் இலக்கணத்தை அறிந்து கொள்வது இன்றியமையாதது.

(1) இரண்டடிகளால் மட்டுமே வரும்.

(2) குறளடி முதல் கழிநெடிலடி வரை எவ்வடியாலும் வரும்; ஆனால் இரண்டடியும் அளவொத்து வர வேண்டும்.

(3) இரண்டடிகளிலும் ஒரே மாதிரியான சந்த ஒழுங்கு அமைந்திருக்கும். (சந்த ஒழுங்கு = முதலடியில் எந்தச் சீர்  என்ன சீராக (மா, விளம், காய்) உள்ளதோ அவ்வாறே அடுத்த அடியிலும் வருவது)

எடுத்துக்காட்டு:

செக்கச் சிவந்த கழுநீரும் செகத்தில் இளைஞர்
                 ஆருயிரும்
ஒக்கச் செருகும் குழல்மடவீர் ஒண்பொற் கபாடம்
                திறமினோ

        - (கலிங்கத்துப் பரணி, கடைதிறப்பு)


    மேற்குறித்த தாழிசை அளவொத்த இரு கழிநெடிலடிகளால் அமைந்தது. மா மா காய் மா மா காய் எனச் சீர் (சந்த) ஒழுங்கு இரண்டடிகளிலும் ஒரே மாதிரியாக அமைந்திருப்பது காண்க.

4.1.2 கலித்துறை

(1) நெடிலடி நான்காய் வரும்.
(2) நான்கடிகளும் எதுகை அமைப்பில் ஒன்றியிருக்கும்.

(3) கலித்துறை பல்வேறு விதமான ஓசை அமைப்புகளுடையது.

    ஆழ்வார் பாடல்கள், சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இக்கலித்துறை மிகுதியும் இடம் பெற்றுள்ளது.

எடுத்துக்காட்டு:

நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே
றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை
சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே

        - (சம்பந்தர் தேவாரம், 1058)


(நரை வெள்ளேறு = காளை வாகனம்)

ஆவி அந்துகில் புனைவதொன் றன்றிவே றறியாள்
தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்
தேவு தெண்கடல் அமிழ்
துகொண் டனங்கவேள் செய்த
ஓவி யம்புகை யுண்டதே ஒக்கின்ற உருவாள்

    - (கம்பராமாயணம், சுந்தரகாண்டம், 340)


(தேவு தெண்கடல் = பாற்கடல்; அனங்கவேள் = மன்மதன்)

    இரண்டு எடுத்துக் காட்டுகளிலும் நான்கடிகளும் ஒரே எதுகை அமைப்புப் பெற்றிருப்பது காண்க. இரண்டும் வெவ்வேறு ஓசை அமைப்புடையனவாக இருப்பதனையும் காண்க.

  • கட்டளைக் கலித்துறை

    கலித்துறையின் ஒரு    வகை கட்டளைக்கலித்துறை. கட்டளை= எழுத்தின் அளவு. இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது.கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் யாப்பருங்கலக் காரிகையில் சொல்லப்படவில்லை. ஆனால் காரிகை நூற்பாக்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை. பின் ஏன் இதன் இலக்கணத்தை அமிதசாகரர் சொல்லாது விட்டார்?44 நூற்பாக்களையும் படிக்கின்ற மாணவனுக்கு அதன் இலக்கணம் சொல்லாமலேயே பதியும் என அவர் எண்ணியிருக்கலாம். காரிகைக்குப் பின் வந்த இலக்கணங்களில் கட்டளைக்கலித் துறையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. கோவை எனும் சிற்றிலக்கியம் முழுமையும் கட்டளைக்கலித்துறையால் அமைந்தது. காப்பியங்கள், பக்தி இலக்கியம், பட்டினத்தார்    பாடல் போன்றவற்றில் பெருவழக்காக உள்ள யாப்பு இது. கட்டளைக் கலித்துறையால் அமையும் நூற்பாவுக்கே காரிகை எனும் பெயர் உண்டு. இதன் இலக்கணத்தைக் காண்போம்.

(1) நெடிலடி நான்காய் வரும்.

(2) ஒவ்வோரடியிலும் முதல் நான்கு சீர்கள் பெரும்பாலும் ஈரசைச்    சீர்களாக வரும்; சிறுபான்மை தேமாங்காய், புளிமாங்காய்ச் சீர்களும் வரலாம். ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராக வரும்.

(3) ஒவ்வோரடியிலும் முதல் நான்கு சீர்களும் வெண்டளை அமைந்து வரும். அதாவது அடி முழுதும் வெண்டளை அமைந்து வரும்.ஆனால்    அடியின் இறுதிச் சீருக்கும் அடுத்த அடியின் முதற் சீருக்கும் இடையே வெண்டளை வரவேண்டியதில்லை.

(4) ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும்.

(5) நேரசையில் தொடங்கும் அடி ஒற்று நீங்கப் பதினாறு எழுத்துகளையும் நிரையசையில் தொடங்கும் அடி ஒற்று நீங்கப் பதினேழு எழுத்துகளையும் பெற்றிருக்கும். ( ஒற்று- மெய்யெழுத்து)

(எழுத்தெண்ணி எழுத வேண்டியதில்லை.வெண்டளையும் ஈற்றில்விளங்காய்ச் சீரும் அமைந்தால் இந்த எழுத்து எண்ணிக்கை தானே அமையும்.)

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில்
             தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்தலை மேல்அயன்              கையெழுத்தே

            - (கந்தரலங்காரம்)


(சேல் = மீன்; கடம்பு = கடப்பம்பூ ; மால் = மயக்கம் ; வேலை = கடல்; வெற்பு = மலை; அயன் = பிரமன்)

    இப்பாடல் நேரசையில் தொடங்கும் அடிகளைக் கொண்டது. ஒவ்வோரடியிலும் ஒற்று நீங்கப் பதினாறு எழுத்துகள் வந்திருப்பதைக் காண்க. முதல் நான்கு சீர்களில் வெண்டளை அமைப்பு. ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீர். ஏகார முடிவு ஆகிய இலக்கணங்களும் பொருந்தியிருப்பது காண்க.

எடுத்துக்காட்டு:

குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர். . ..
        - (யாப்பருங்கலக் காரிகை - 12)

    எனத் தொடங்கும் காரிகை நூற்பா நிரையசையில் தொடங்கிப் பதினேழு எழுத்துகள் பெற்று வந்திருப்பது காண்க.

4.1.3 கலி விருத்தம்

(1) அளவடி (நாற்சீரடி) நான்காய் வருவது கலிவிருத்தம்.
(2) நான்கடிகளும் எதுகை அமைப்பில் ஒன்றியிருக்கும்.
(3) ஆசிரிய விருத்தம் போலவே நான்கடியிலும் சந்த ஒழுங்கு ஒன்றியிருக்கும்.பல்வேறு வகையான கலிவிருத்தச்சந்தங்கள் உண்டு.

    ஆசிரிய விருத்தம் போலவே கலிவிருத்தம் காப்பியங்களில் மிகுதியாக இடம் பெறுவது.

எடுத்துக்காட்டு:

பேணநோற் றதுமனைப் பிறவி பெண்மைபோல்
நாணநோற் றுயர்ந்தது நங்கை தோன்றலான்
மாணநோற் றீண்டிவள் இருந்த வாறெலாம்
காணநோற் றிலனவன் கமலக் கண்களால்

- (கம்பராமாயணம், சுந்தரகாண்டம் - 402)


(மனைப் பிறவி = குடிப்பிறப்பு; பெண்மை = பெண் பிறப்பு; நோற்றது = தவம் செய்தது; நங்கை = சீதை;அவன் = இராமன்)

    மேற்காட்டிய கலிவிருத்தத்தில் விளம் விளம் மா விளம் எனும் சந்த ஒழுங்கில் நான்கடிகளும் அமைந்திருப்பது காண்க.
சில கலிவிருத்தங்களில் சந்த ஒழுங்கு சற்றுப் பிறழ்ந்து வருதலும் உண்டு.

இனி, இவ்வினங்களின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காணலாம்.

அடிவரை இன்றி அளவொத்தும் அந்தடி              நீண்டிசைப்பின்
கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும் ; கலித்துறையே
நெடிலடி நான்காய் நிகழ்வது ; நேரடி ஈரிரண்டாய்
விடினது வாகும் விருத்தம் திருத்தகு மெல்லியலே

         (யாப்பருங்கலக் காரிகை, 33)


நூற்பாவின் பொருள் :

    அடிவரையறை இன்றி இரண்டடியும் பலவடியும் வந்து ஈற்றடி நீண்டு ஏனைய அடிகள் தம்முள் ஒத்து வருவதும் ஒவ்வாது வருவதும் கலித்தாழிசை. நெடிலடி நான்காய் வருவது கலித்துறை. அளவடி நான்காய் வருவது கலிவிருத்தம்.

    இனிக் கலிப்பாவின் இனங்கள் கலிப்பாவுடன் எவ்வகையில் மேலோட்ட ஒற்றுமைகள் கொண்டுள்ளன எனக் காணலாம்.

(1) நான்கு பாக்களுள்ளும் ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வரும் தனிச்சிறப்புடைய தாழிசை உறுப்பு கலிப்பாவுக்குரியது. கலித்தாழிசை அவ்வாறு ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வரும் தன்மையைக் கொண்டுள்ளது. (பிற பாக்களின் இனங்களிலும் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும்.)

(2) கலிப்பாவின் தாழிசைக்கு அடிச்சிறுமை இரண்டடி ; கலி இனமாகிய தாழிசைக்கும் அடிச்சிறுமை இரண்டடியே     யாகும்.

(3) சுரிதகம் இல்லாத தரவுகொச்சகக் கலிப்பாவுக்கும் கலிவிருத்தத்திற்கும் இடையே ஒற்றுமை உண்டு.இரண்டுமே அளவடி நான்காய் வருவன;நான்கடியும் எதுகைஅமைப்பில் ஒன்றியிருப்பன. (ஆனால் தரவு கொச்சகக் கலிப்பா காய்ச்சீர்கள் மிகுந்து கலித்தளை அமைந்து துள்ளலோசை பெற்று வரும் ; கலிவிருத்தம் பெரும்பாலும் இயற்சீர்களால் ஆகியது ; துள்ளலோசை பெறாதது.மேலும் கொச்சகத்தில் இல்லாத சந்த ஒழுங்கு தாழிசையில் உண்டு.)

(4) கொச்சகக் கலிப்பாவில் ஐஞ்சீரடி அருகிவரும். ஆகவே ஐஞ்சீரடிகளால் அமையும் கலித்துறை ஒருவகையில் கொச்சகத்தோடு ஒற்றுமையுடையது.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. அளவொத்து வருதல் என்றால் என்ன?
விடை
2. சிறப்பான கலித்தாழிசை எவ்வாறு வரும்?
விடை
3. கலித்தாழிசைக்குரிய அடி எண்ணிக்கை கூறுக.
விடை
4.
கலித்துறை மிகுதியும் இடம்பெறும்
இலக்கியங்கள் யாவை ?
விடை
5. கலித்துறை எவ்வடியால் வரும்? விடை
6. நேர் முதலாகிய கட்டளைக் கலித்துறை அடியின்
எழுத்தெண்ணிக்கை கூறுக.
விடை
7. ‘கட்டளை’ என்பதன் பொருள் யாது?
விடை
8. கலிவிருத்தத்தின் அடி யாது? அடி அளவு
எத்தனை?
விடை
9. ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கும் கலித்தாழிசைக்கும்
உள்ள ஒற்றுமைகள் யாவை?
விடை