6.4 எழுத்தின் முறைகள்

     எழுத்துச்     சீர்திருத்தத்தைப்     பற்றித்     தெரிந்து கொள்வதற்குமுன் உலகில் எத்தனை வகையான எழுத்துமுறைகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். உலகில் இரண்டு வகையான எழுத்துமுறைகள் உள்ளன. அவை வருமாறு:

     1. ஓவிய எழுத்துமுறை
     2. ஒலிசார் எழுத்து முறை

6.4.1 ஓவிய எழுத்து முறை

     சீனம், ஜப்பான் போன்ற மொழிகளின் எழுத்துகளை ஓவிய எழுத்து முறை (pictorial writing system) என்பர். ஏனென்றால் இவ்வெழுத்து முறையைப் பொருள் சார் எழுத்துமுறை என்றும் கூறுவதுண்டு. ஒவ்வோர் எழுத்தும் ஒரு பொருளை உணர்த்துகின்றது. எனவே இவ்வகையான பொருள்சார் எழுத்து முறையை உடைய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துகள் காணப்படுகின்றன.

6.4.2 ஒலிசார் எழுத்து முறை

     உலகில் சீனம், ஜப்பான் போன்ற மொழிகளைத் தவிர ஏனைய மொழிகள் ஒலிசார் எழுத்துமுறையைச் சார்ந்தனவாகும். தமிழ் மொழி ஒலிசார் எழுத்து முறையைச் சார்ந்ததாகும். இங்கு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஒலி உண்டு. அவ்வொலிகளின் கூட்டு, சொல்லாகிறது. அச்சொல்லுக்கு ஒரு பொருள் காணப்படுகிறது. இவ்வாறு அமைந்து வருவதையே ஒலிசார் எழுத்துமுறை என்பர்.

     1. ஒலிசார் எழுத்து = ஒலி --> சொல் --> பொருள்
     2. ஓவிய எழுத்து = பொருள் --> சொல்

     மேலே குறிப்பிட்ட ஒலிசார் எழுத்தில் மற்ற இந்திய மொழிகளைவிடத் தமிழ்மொழி நல்ல முறையில் அமைந்திருப்பது தெரியவருகிறது. வடமொழியில் தர், ஸ்த்ர் போன்ற ஒலிகளைக் குறிக்க அவற்றிற்கு உள்ள ஒலியன்களைக் கூட்டெழுத்தின் துணைகொண்டே     எழுதுவர். அவற்றோடு உயிர் சேர்ந்து உயிர்மெய் உருவாகும்போது அவற்றிற்கு உரிய வரிவடிவங்களும் சேர்ந்து அம்மொழியில் உள்ள வரிவடிவங்களின் எண்ணிக்கை மேலும் மிகுதியாகிறது. இதுபோன்ற கூட்டெழுத்து இடர்ப்பாடுகள் தமிழில் இல்லை எனலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
எழுத்து என்பது யாது?
2.
எழுத்துச் சீர்திருத்தம் என்றால் என்ன?
3.
எத்தனை வகையான எழுத்துமுறைகள் உள்ளன? அவை யாவை?
4.
ஓவிய எழுத்து முறை எம்மொழிகளில் காணப்படுகின்றன?
5.
ஒலிசார் எழுத்து முறைக்கான ஒரு மொழியைக் கூறுக?