| 
   3.3
 பல்லவர் காலக் கற்கோயில்கள்  
     பக்தி இயக்கக் காலமாகிய பல்லவ
 மன்னர் காலம், ஆலயக் 
 கட்டடக் கலை வரலாற்றில் சிறப்புமிகு பொற்காலமாகும்.  
 3.3.1
 குடைவரைக் கோயில்கள்   
     தமிழகத்தில் தெய்வ வழிபாட்டுமுறை,
 காலத்தின் கட்டாயத் 
 தேவையாயிற்று. பல்லவர் காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட 
 கோயில்களனைத்தும் செங்கல், மரம், மண், சுண்ணாம்பு 
 முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. எனவே, சங்க 
 காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கட்டடப்பட்ட சிறப்புமிக்க 
 வீடுகளும், ஆலயங்களும் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் 
 சிதைந்து போயின. இதனைப் புரிந்து கொண்ட பல்லவர்கள், 
 சிறப்பாக  மகேந்திரவர்மன்  செங்கல் முதலியவற்றைப் 
 பயன்படுத்தாமல், மலைப்பாறைகளைக் குடைந்து குடைவரைக் 
 கோயில்களைக் கட்டினான். இந்தச் சாதனையை அவன் கட்டிய 
 மண்டகப்பட்டுக் கோயிலின் கல்வெட்டிலே குறித்துள்ளான்.  
     கடல் மல்லை என்ற வைணவத் தலம்
 பூதத்தாழ்வாரால் 
 குறிப்பிடப் பெற்றுள்ளது ; எனவே, அது மிகவும் தொன்மையானது. 
 பல்லவர்கள் காலத்தில் குடைவரைக் கோயில்கள் பல எழுந்தன. 
 அவை எந்த அளவு வரலாற்றுக்குத் துணை புரிகின்றன என்பதைச் 
 சிறிது காண்போம்.  
     பல்லவர்களை முன்னோடிகளாகக் கொண்டு,
 பாண்டியர்கள், 
 முத்தரையர்கள், அதியமான்கள், சேரமன்னர்கள், கீழைச் சாளுக்கிய 
 மன்னர்கள் தத்தம் நாடுகளில் பல்வேறு மாற்றங்களுடன் 
 குடைவரைக் கோயில்களை அமைத்துள்ளனர். பல்லவர் பாணியைப் 
 பின்பற்றிச் சங்கரன் கோயிலிலிருந்து கோவில்பட்டிக்குச் செல்லும் 
 வழியிலுள்ள வெட்டுவான் கோயில்  கட்டப்பட்டுள்ளது.
 அங்கு 
 முதலாவது குறிப்பிடத்தக்கது முருகன் கோயில். அந்தக் 
 குடைவரைக் கோயிலையொட்டி அர்த்த மண்டபம், மகா மண்டபம் 
 ஆகியவற்றைக் காணலாம். அடுத்துக் காணப்படுவது வெட்டுவான் 
 கோயில்; இது முருகன் கோயிலுக்குப் பின்னால் மலையின் ஒரு 
 பகுதியில், மலையிலிருந்து வேறுபடுத்திய நிலையில் கற்கோயிலாக 
 அமைக்கப்பட்டுள்ளது. 
      இந்த வெட்டுவான் கோயிலில்
 முன் பகுதியாகிய 
 முகமண்டபம் கட்டட அமைப்பில் முடிவு பெறாமல் உள்ளது. இந்தக் 
 கோயில் கருவறையின் மேல் எட்டுப்பட்டைகள் கொண்ட விமானம் 
 அணி செய்கிறது ; பட்டைகள் தோறும் கூடுகள் அமைந்துள்ளன. 
 விமானத்திலுள்ள கூடுகள் அல்லது சைதன்ய பலகணிகளில் யாளி,
 
 சிங்கமுக உருவங்கள் செதுக்கப்பட்டும், வளைந்து
 செல்லும் 
 பூவேலைப்பாடுகளும் நிறைந்து, கட்டடக் கலைக்குச் சிற்பங்கள் 
 அலங்காரக் கூறுகளாகப் பயன்படுகின்றன.  
     குடைவரைக் கோயில்கள் அல்லது குகைக்
 கோயில்கள் என்ற 
 நோக்கில், தமிழ்நாட்டில் பல்லாவரம், திருச்சி, சித்தன்னவாசல், 
 திருமெய்யம் போன்ற ஊர்களில் உள்ள குகைக் கோயில்கள்
 
 சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.  
 
  சமயச் சார்பு  
 
     மகேந்திரவர்மனால்  அமைக்கப்பட்ட
  மண்டகப் 
 பட்டுக்கோயில்  பிரமன், சிவன்,  வி்ஷ்ணு  ஆகிய 
 மும்மூர்த்திகளுக்கும் அற்புதமாக அமைக்கப் பட்டதாகும். அந்தக் 
 குடைவரை கோயில் திருக்கழுக்குன்றத்திலுள்ள வேதகிரி மலையின் 
 உச்சிக்கோயிலிலிருந்து கீழே இறங்கி வரும் வழியிலே மலைநடுவில் 
 கிழக்குத்  திசைநோக்கியதாக, உள்ளது;
 அக்கோயிலில் மும்மூர்த்திகளுக்கு அமைக்கப்பட்ட
 மூன்று கருவறைகளையும் 
 துவார (வாயில்காக்கும்) பாலகர்களால் அலங்கரிக்கப்பட்ட அர்த்த மண்டபத்தையும்
 காணலாம்.  
     திருச்சிக்கு வட மேற்கிலுள்ள நாமக்கல்
 பகுதியை ஆண்ட 
 குறுநில மன்னர்களாகிய அதியர் இரண்டு குடைவரைக் 
 கோயில்களைத் திருமாலுக்கு எனக் கட்டினர். புதுக்கோட்டைப் 
 பகுதியில் பல குடைவரைக் கோயில்களை முத்தரையர், 
 இருக்குவேளிர்  போன்றவர்கள்  குடைவித்தனர். இவற்றுள் 
 சித்தன்னவாசல் சமணப் பள்ளியாக ஆயிற்று. மற்றவை சைவ, 
 வைணவ, சக்தி சமயச் சார்புடையவையாகும்.  
 
  சிறப்புமிகுந்தவை
  
 
     புதுக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும்
 வழியிலுள்ள 
 குன்னக்குடி (மூன்று குகைகள்), மிகச் சிறப்பான ‘பிள்ளையார்பட்டி’, 
 அரிட்டா பட்டி, திருமலை போன்ற இடங்களிலும், மதுரைக்கு 
 அருகில்  மாங்குடி, ஆனைமலை (இரண்டு குகைகள்), 
 திருப்பரங்குன்றம், மலையடிக் குறிச்சி, வீரசிகாமணி, ஆனையூர், 
 திருமலைபுரம், சொக்கம்பட்டி, திருச்செந்தூர் ஆகிய குடைவரைக் 
 கோயில்கள் கண்டு வியக்கத்தக்கவை, கழுகுமலைக் கோயில் மிகச் 
 சிறப்பு வாய்ந்தது.  
     குமரி மாவட்டத்தில் திருநந்திக்
 கரை, துவரங்காடு, சிவகிரி, 
 அழகிய பாண்டியபுரம், பூதப்பாண்டி போன்ற இடங்களில் 
 காணப்படும்  குடைவரைகள்  ஆய்வேளிர்  மரபினரால் 
 அமைக்கப்பட்டவை ; எனினும் பாண்டியர் பாணியில் அமைந்தவை.  
 3.3.2
 தேர்க் கோயில்கள்    
     கோயிற் கட்டட அமைப்பில் முன்னோடிகளாகப்
 பல 
 புதுமைகளைப் புகுத்திச் சிறந்த வரலாறு படைத்தவர்கள் பல்லவ 
 அரசர்கள்.  
 
  பெருமைக்குரியவை
  
 
     கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரத்திலே
 தனிப் பெரும் 
 கற்பாறைகளைக் குடைந்தும், புராணச் சிறப்புடன் சிற்பங்களைச் 
 செதுக்கியும், ஒற்றைக் கல் கோயில்களாக்கியும் பல்லவர்கள் 
 தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.  
     ஒற்றைக் கல்கோயில்களைப் பஞ்ச பாண்டவர்
 ரதங்கள் என்று 
 மக்கள் வழங்கினாலும், பஞ்சபாண்டவர்களுக்கும் இந்தத் தேர்க் 
 கோயில்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.  
     தருமராசர்
 தேர் எனப்படும் கோயில் மூன்று அடுக்குகள் 
 கொண்ட விமானத்தை உடையது. இரண்டாம் அடுக்கின் நடுவில் 
 மாடப்புரை போல உள்ளிடம் வெட்டப்பட்டுள்ளது. அதனடியில் 
 சோமாஸ்கந்தர் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதைக்
 காணலாம்.  
     பீமசேனன்
 தேர் எனப்படும் கோயில் நீண்ட சதுர 
 அமைப்பில் காணப்படுகிறது. அதன் விமானத்தைச் சுற்றி வழிவிடப் 
 பட்டிருத்தலைக் காணலாம். 45 அடி நீளம், 35 அடி அகலம், 26 
 அடி உயரம் கொண்ட இக் கோயிலில் தூண்களின் அடிப்பாகம் 
 அமர்ந்த சிங்க உருவத்துடன் உள்ளது. தூண் அமைப்பினைக் 
 கொண்டே நரசிம்மவர்மனின் கலைப்பாணியைப் புரிந்து கொள்ளும் 
 வகையில் உருவாக்கப் பெற்றுள்ளது.  
     அருச்சுனன்
 தேர் எனப்படும் கோயிலின் விமானம் நான்கு 
 நிலைகளைக் கொண்டது. 11 சதுர அடி அமைப்புடையது.  
     திரௌபதி
 தேர்எனப்படும் கோயில், தமிழ்நாட்டில் சிற்றூர்ப் 
 புறத் தேவதைகளுக்கு அமைத்திருக்கும் சிறுகோயில் போல் 
 உள்ளது. இதன் அடித்தளம் 11 சதுர அடி, உயரம் 10 அடி. பல்லவர் 
 காலத்துச் சிற்பத் திறனையும் கலைக் கற்பனையையும் புலப்படுத்தும் 
 வகையில் இத்தேரிலுள்ள துர்க்கையின் சிலை உள்ளது.  
     சகாதேவன்
 தேர் எனப்படும் கோயில் தன் பின் புறத்தில் 
 யானையின் முதுகைப் போன்ற அமைப்பினையுடையது. பண்டைக் 
 காலத்துப் பௌத்தர்களின் பள்ளிகளைப் போன்ற அமைப்புடையது. 
 ஒவ்வொரு பாறைக் கல்லிலும் அமைந்த இந்தத் தேர்க் 
 கோயில்களை முன் மாதிரியாக வைத்துக் கொண்டு, பிற்காலத்தில் 
 பல தேர்வடிவ ஆலயக் கட்டடங்கள் அமைக்க முற்பட்டனர் 
 என்பது மனங் கொள்ளத்தக்கது. 
  3.3.3
 கட்டுமானக் கற்கோயில்கள்   
     பல்லவர் காலத்துக் கட்டடக் கோயில்களுள்
 தொன்மைச் 
 சிறப்புடையது காஞ்சிபுரத்திற்கு அருகில், ‘கூரம்’ என்ற ஊரில் 
 முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் எடுக்கப்பட்ட ‘வித்யா விநீத 
 பல்லவ பரமேசுவர கிருகம்’ என்ற சிவாலயம் ஆகும். இது 
 தூங்கானை மாட வடிவில் அமைந்துள்ளது.
 இக்காலத்தில் இதன் 
 அடிப்பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது.  
     பரமேசுவரனுக்கு மகனான இராசசிம்மன்
 காலத்தில் 
 மாமல்லபுரம், காஞ்சிபுரம், பனைமலை, திருப்பத்தூர் ஆகிய
 
 இடங்களில் கட்டுமானக் கோயில்கள் தோன்றின. மாமல்லபுரம் 
 கடற்கரைக் கோயிலின் விமானம் ஓரளவு உயர்ந்து பலநிலைகளுடன் 
 காணப்படுகிறது. கருவறையைச் சுற்றிலும் திருச்சுற்றும் ஒரு 
 மண்டபமும் உள்ளன. மாமல்லபுரத்தில் மற்றொரு கட்டுமானக் 
 கோயில், மகிஷாசுர மர்த்தினி குகையின் மேலே உள்ளது ; இதன் 
 மேல் பகுதி சிதைந்துள்ளது.  
     காஞ்சிக்  கயிலாசநாதர்கோயில்,
  திருக்கயிலையை 
 நினைவுபடுத்தும் நோக்கத்தில் கட்டப்பட்டது. இராச சிம்மனால் 
 கட்டப்பட்டதால் அதனை ‘இராச சிம்மேசுவரம்’ என்பர். பெரிய 
 திருக்கற்றளியாகிய இதற்குப் பெரிய விமானமும், சிறு சிறு 
 ஆலயங்களைக் கொணட திருச்சுற்றும் உள்ளன. சுற்றுச் சுவர் 
 முழுவதும் சிவபெருமான், பார்வதி, திருமுருகன், திருமால் போன்ற 
 திருவுருவங்களைக்  காணலாம். இக் கோயிலில்  பரிவார 
 தெய்வங்களும் அவற்றுக்குரிய சிற்றாலயங்களும் உள்ளன.  
     திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பத்தூரில்
 காணப்படும் 
 கோயிலும் இராசசிம்மனால் கட்டப்பட்டதாகவே கருதப்படுகிறது ; 
 காஞ்சிக் கோயில்கள் போலவே காணப்படும் இக்கோயிலிலுள்ள 
 இறைவன் பெயர் கயிலாசநாதர் என்பது சிந்திக்கத்தக்கது.  
     கி.பி. எட்டாம் நூற்றாண்டில்
 நந்திவர்ம பல்லவனால் 
 கட்டப்பட்டதாகக் கருதப்படும் காஞ்சி வைகுண்ட நாதர் 
 கோயிலைப் ‘பரமேசுவர விண்ணகரம்’ என்பர். (விஷ்ணுகிருகம், 
 விண்ணகரம் ஆயிற்று). ஒன்றற்கு மேல் ஒன்றாக மூன்று 
 கருவறைகள் காணப்படும் இக்கோயில் விமானம் பெரியதாகவும் 
 அழகுடையதாகவும் காணப்படுகிறது. அழகிய கட்டுமானத்துடன் 
 கூடிய இக்கோயிலின் உட்புறச்சுவரில் - பிராகாரத்தில் - பல்லவ 
 மன்னர்களுடைய வரலாறு தெரிந்து கொள்ளும் வகையில் 
 திருவுருவச் சிற்பவரிசை உள்ளது.  
     உத்தரமேரூரில், நந்திவர்மன் காலத்ததாகக்
 கருதப்படும் 
 சுந்தரவரதர் கோயிலும் உள்ளது.  
     பல்லவர் காலத்துக் கோயில்களெல்லாம்
 கருங்கல்லால் 
 கட்டப்பட்டவை என்று பிழைபட எண்ணக் கூடாது. 
 பெரும்பாலானவை மணற் கல்லால் கட்டப்பட்டவையும் உண்டு. 
 இவற்றில் விமானங்கள் தான் மிகவும் உயர்ந்து நிற்கும். ஆயினும் 
 அவை 35 அல்லது 40 அடிக்கு மேல் இருப்பதில்லை.  
  
            
               
                |   தன் 
                    மதிப்பீடு : வினாக்கள் - I  | 
               
               
                |   1.  | 
                 
                    ‘அர்ச்சை’ என்றால் என்ன?   | 
                  | 
               
               
                |   2. 
                     
                      | 
                 
                    ஆலயம் என்பதை எப்படியெல்லாம் பொருள் கொள்ளலாம்?   | 
                  | 
               
               
                |   3. 
                     
                      | 
                 
                    மாமல்லபுரத்தில் தருமராசன்தேர் எப்படி அமைக்கப்பட்டுள்ளது?   | 
                  | 
               
               
                |   3. 
                     
                      | 
                 
                    காஞ்சியில் கயிலாசநாதர் கோயிலை எப்படி அழைப்பர்?   | 
                  | 
               
               
                |   5. 
                     
                      | 
                 
                    காஞ்சியில் பரமேசுவர விண்ணகரம் என்றால் எந்தக் கோயிலைக் குறிக்கும்? 
                      | 
                  | 
               
             
  |