2.3 அப்பர்

    இவர் திருவாமூரில் வளோளர் குடியில் பிறந்தார்.தந்தையார் பெயர் புகழனார். தாயார் பெயர் மாதினியார். இவரது பிள்ளைத் திருநாமம் "மருள்நீக்கியார்" என்பதாகும். இளமையில் பெற்றோரை இழந்த மருள் நீக்கியாரைத் தமக்கை திலகவதியார் அன்போடு வளர்த்தார்.

2.3.1 அப்பர் சமணராதல்

    சைவ சமயத்தில் பிறந்தும் மருள்நீக்கியார் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டார். பாடலிபுரம் சென்று சமண நூல்களை நன்கு பயின்றார். இவரது புலமையைச் சமணர் புகழ்ந்தனர். அவரைத் தம் தலைவராக்கினர். தருமசேனர் எனப் பெயரிட்டு அழைத்தனர்.

இதையெல்லாம் அவரது தமக்கையார் கொஞ்சமேனும் விரும்பவில்லை. தம்பியார் மீண்டும் சைவநெறிக்கு வரவேண்டும் என விரும்பினார்.

 • வயிற்றுவலியால் துன்புறல்
 •     திருவருளால் மருள் நீக்கியாருக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. சூலை நோய் எனப்பட்ட அந்த வயிற்றுவலியால் அவர் துடிதுடித்தார். குடைந்து குடைந்து நோயின் கொடுமை கூடியது. என்ன செய்வார்? தமக்கையாரே தஞ்சமென்று திலவதியாரிடம் சென்றார். நோயின் துன்பத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி அழுது கேட்டார்.

  2.3.2 முதல் தேவாரப் பாடல் பிறந்தது

      திலகவதியார் தம்பியாரை வீரட்டானேசுவரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை ஓதித் திருநீற்றை அள்ளிக் கொடுத்தார். "தம்பி! இறைவனிடம் உன் குறையைச் சொல்லு", என்றார். அழுதும் தொழுதும் நின்ற மருள்நீக்கியார் தம்மை அறியாது பாடினார். என்ன பாடினார்?. . "வீரட்டானத்து அம்மானே! யமன் போன்ற இந்த நோயை அகற்றிவிடும். முறுக்கி முடக்கி என்னைத் துன்புறுத்துகிறது. என்னால் தாங்க முடியவில்லையே! அறியாமல் பிழை செய்தேன். இரவும் பகலும் உம்மை வணங்குவேன். இந்த நோயிலிருந்து என்னைக் காப்பாற்றுவீர்!" என்றவாறு கொல்லிப் பண்ணில் தேவாரம் பாடினார். இதோ! இவர் பாடிய முதல் தேவாரப் பாடலைக் கேட்போமா?

  பண்: கொல்லி

  கூற்றாயினவாறு விலக்ககிலீர்!
       கொடுமை பல செய்தன நானறியேன்,
  ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
       பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
  தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
       குடரோடு துடக்கி முடக்கியிட
  ஆற்றேன் அடியேன்! அதிகைக் கெடில
       வீரட்டானத்து உறை அம்மானே!

  (நான்காம் திருமறை, 4150)

  (கூற்றாயினவாறு = கூற்றுவனைப் போல (கூற்று = யமன்), தோற்றாது = நோய் முதல் புலப்படாது, அகம்படியே = உள் உறுப்புகளையே, துடக்கி முடக்கியிட = செயல்படாமல் முடக்குதலால்)

 • சூலைநோய் நீங்கியது
 •     தேவாரப் பதிகத்தின் பத்துப் பாடல்களைப் பாடி முடித்தார். சூலை நோய் தானாக அகன்றது. இனிமையான தமிழில் பாமாலை பாடியதால் "நாவுக்கரசர்" என்றழைக்கப்பட்டார். நாவுக்கரசரும் சிவநெறி நின்று மகிழ்ந்தார்.

  2.3.3 கொடுமை செய்தனர்

      சமணர்கள் கோபத்தால் வெகுண்டு எழுந்தனர். சமண சமயத்தை விட்டுச் சென்ற நாவுக்கரசரைத் தண்டிக்க முயன்றனர். நாட்டை ஆண்ட பல்லவ மன்னனிடம் நாவுக்கரசர் பற்றிக் கோள் சொன்னார்கள். மன்னன் சமண சமயச் சார்புடையவன். எனவே நாவுக்கரசரைத் தண்டித்தான். எப்படி?

 • சுண்ணாம்புக் காளவாய்
 •     நாவுக்கரசரைக் கொடும் சுண்ணாம்பு அறையில் அடைத்தார். சிவபெருமானின் இணையற்ற திருப்பாதங்களை நிழலாக நினைத்த நாவுக்கரசருக்குச் சுண்ணாம்பின் வெப்பம் ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு அது எப்படி இருந்தது தெரியுமா? இனிமையான வீணை இசையும், மாலை நிலாவும், வீசும் தென்றலும், குளிர்ச்சியான பொய்கையும் போன்று இதமாக இருந்தது. இதை அவர் இப்படி, அழகாகப் பாடி இன்புற்றார்.

  மாசில் வீணையும் மாலை மதியமும்
  வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
  மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
  ஈசன் எந்தை இணையடி நீழலே

  (ஐந்தாம் திருமுறை, 6112)

  (மாசில் = குற்றமில்லாத, மாலை மதியம் = மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி, தென்றல் = தென்றல் காற்று,(இதமான காற்று) வீங்கு = பெருகிய, வண்டறை = வண்டுகள் மொய்க்கின்ற)

 • கல்லோடு கடலில் எறிந்தது
 •     கடைசி முயற்சியாக நாவுக்கரசரைக் கல்லோடு கயிற்றால் கட்டினார்கள். ஆழ்கடலில் வீசி எறிந்தார்கள். எமக்குத் துணை ஐந்தெழுத்தாகிய "நமசிவாய" என்று துதித்தார் நாவுக்கரசர். சிவ அன்பில் ஊறிய நம்பிக்கையில் தேவாரம் பாடினார். காந்தார பஞ்சமப் பண்ணில் பாடிய அப் பாடலைக் கேட்போமா?

  பண் : காந்தார பஞ்சமம்

  சொற்றுணை வேதியன் சோதி வானவன்
  பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
  கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
  நற்றுணையாவது நம சிவாயவே

  (நான்காம் திருமுறை, 4262)

  (சொற்றுணை = சொல்லளவான வேத முதல்வன், கற்றுணைப்பூட்டி = கல்லோடு சேர்த்துக் கட்டி)

      இவ்வாறு தொடங்கும் நமசிவாயப் பதிகப் பாடல்களைப் பாடி முடித்தார். சமணர்கள் கொடுமைகளிலிருந்து விலகினார் நாவுக்கரசர். பல்லவ மன்னனும் நாவுக்கரசரை வணங்கிச் சிவனடியாரானார்.

  2.3.4 நாவுக்கரசர் அப்பர் ஆனார்

      நாவுக்கரசர் பல சிவ தலங்களைத் தரிசித்துச் சிவத்தொண்டுகள் செய்தார். சிவன் பெருமையை வாயாரப் பண்ணோடு பாடினார். இவ்வாறு தம் வாழ்நாட்களைக் கழித்தார். இவ்வாறிருக்கையில் நாவுக்கரசரின் சிவத்தொண்டுகள் பற்றிக் கேள்வியுற்றார் சம்பந்தர். அவரைக் காண வேண்டும் என விழைந்தார்.

  நாவுக்கரசர் ஒருதடவை சீ்ர்காழி வந்தார். சம்பந்தர் அவரை அன்புடன் வரவேற்றார். அப்பொழுது நாவுக்கரசர் சம்பந்தர் கால்களைத் தொட்டு வணங்கினார். தம்மில் வயதில் முதிர்ந்த நாவுக்கரசரை அன்போடு "அப்பரே" என்று அழைத்தார் சம்பந்தர்.

      இருவரும் அன்பினால் பிணைக்கப்பட்டனர். அதுமுதல் நாவுக்கரசரை எல்லோரும் "அப்பர்" என்று அழைத்து மகிழ்ந்தனர்.

  2.3.5 திருக்கோயில் பாடல்கள்

      அப்பர், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பல கோயில்களுக்கும் சென்றார். இறைவனை மனமுருகிப் பாடினார். திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடூர், திருக்குறுக்கைவீரட்டம், திருநின்றியூர், திருநனிபள்ளி, திங்களூர், திருவாரூர், திருப்புகலூர், திருமறைக்காடு என ஏராளமான கோயில்களுக்குத் தலயாத்திரை சென்றார். அவ்வத் திருக்கோயில் பெருமானைக் கனிந்து உருகிப் பண்ணிசைத்துப் பாடினார்.

  2.3.6 அப்பர் நிகழ்த்திய அற்புதங்கள்

 • அப்பூதியடிகள்
 •     திங்களூர் என்னும் ஊரில் அப்பூதி அடிகள் என்பவர் வாழ்ந்தார். இவர் நாவுக்கரசரைத் தன் குருவாக மதித்தார். தமது பிள்ளைகள், தண்ணீர்ப்பந்தல், கிணறு, குளம், அறச்சாலை என எல்லாவற்றிற்கும் "நாவுக்கரசு" எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். இச் செய்தியைக் கேள்விப்பட்ட நாவுக்கரசர் அப்பூதி அடிகளார் வீட்டிற்குச் சென்றார்.

 • அமுது உண்ண அப்பரை அழைத்தல்
 •     ஆனந்தம் பெருக்கெடுக்க நாவுக்கரசரை வரவேற்றார் அப்பூதி அடிகளார். தமது வீட்டில் அமுது செய்தருள வேண்டும் என அன்புடன் கேட்டார். நாவுக்கரசரும் அவர் வேண்டுகோளுக்கு இசைந்தார்.

       அறுசுவை உணவு ஆக்கப்பட்டது. நாவுக்கரசருக்கு அதைப் படைக்க நல்ல வாழை இலை வேண்டும். தோட்டத்திலிருந்து அதை அரிந்து வரத் தன் புதல்வன் மூத்த நாவுக்கரசை அனுப்பினார். ஓடிச் சென்று வாழைக் குருத்தை அரிந்தான். ஐயோ! அங்கு இருந்த ஒரு நச்சுப் பாம்பு அவனைத் தீண்டியது. விஷம் தலைக்கு ஏறுமுன் ஓடிவந்து இலையைத் தந்தையிடம் கொடுத்தான். மயங்கி விழுந்தவன் விறைத்துப் பிணமானான்.

      "ஐயையோ! குருநாதர் திருஅமுது செய்யும் நேரத்தில் இந்த இடையூறு ஏற்பட்டதே!" என்று அப்பூதி அடிகள் கலங்கினார். யாருக்கும் தெரியாமல் மகனின் சடலத்தை மறைத்து வைத்தார். எதுவும் நடக்காதது போல், நாவுக்கரசரை அமுது செய்ய அழைத்தார்.

 • இறந்தவன் எழுந்தான்
 •     தம்மை அமுது உண்ணச் செய்வதற்காக மைந்தனின் மரணத்தை மறைத்த அப்பூதி அடிகளாரின் குரு பக்தியை நினைத்தார். கருணை கொண்டு இறைவனை வேண்டி, "ஒன்றுகொலாம்," எனத் தொடங்கித் தேவாரம் பாடினார். ‘இந்தளப்’ பண்ணில் உருக்கமாகப் பாடினார்.

  ஒன்று கொ லாமவர் சிந்தை யுயர்வரை
  ஒன்று கொ லாமுய ரும்மதி சூடுவர்
  ஒன்று கொலாமிடு வெண்டலை கையது
  ஒன்று கொலாமவ ரூர்வது தானே

  (நாலாம் திருமுறை, 4335)

  (உயர்வரை = உயர்ந்த கயிலை மலை, வெண்டலை = மண்டையோடு, ஊர்வது = காளை)

  2.3.7 உழவாரப்பணியும் கடவுளைக் காணலும்

      கோயிலின் வளாகத்தில் உள்ள புல்பூண்டுகளை அகற்றித் தூய்மைப்படுத்துதல், இப்பணிக்குப் பயன்படும் கருவி உழவாரப்படை.

      நீண்ட காலம் இம் மண்ணுலகில் வாழ்ந்த அப்பர் ஏராளமான தேவாரப் பதிகங்கள் பாடினார். கையில் உழவாரக் கருவி ஏந்திக் கோயில் திருவீதிகளைச் சுத்தம் செய்தார். கல், முள், பொன், மணி என எது இருந்தாலும் அவற்றை உழவாரத்தால் அகற்றினார். பொன்னும் மணியும் கூட அவரைப் பொருத்தவரை கல், முள் போன்றனவே. உலகத்தார் மதிப்பது போல் அவர் மதிக்கவில்லை.

  2.3.8 கடைசிப் பாடல்

      இறுதியாக அப்பர் திருப்புலூர் என்னும் தலத்தை அடைந்தார். "எண்ணுகேன்" எனத் தொடங்கிப் பாடினார். "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்" எனப் பாடித் தேவாரப் பதிகத்தை முடித்தார். இதுவே அப்பர் பாடிய கடைசித் தேவாரப் பதிகமாகும். அப்பர் தமது 81 ஆவது வயதில் திருப்புகலூரில் இறைவனடி எய்தினார்.

  எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
         எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
  கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
         கழலடியே கைதொழுது காணின் அல்லால்
  ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
         ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
  புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
         பூம்புகலூர் மேவிய புண்ணி யனே

  (ஆறாம் திருமுறை, 7215)

  (கண்ணிலேன்= வேறுகாட்சியில்லேன், ஒண்ணுளே= வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாகிய உடம்பு, ஒன்பது வாசல் = ஒன்பது துவாரங்கள் (வளைகள்)

 • அப்பர் பாடிய பதிகங்கள்
 •     அப்பர் சுமார் 49,000 தேவாரப் பதிகங்கள் பாடினார். இவற்றில் சில பதிகங்கள் தாள அமைப்பில் அமைந்தவை. இவை பண்ணாங்கப் பாடல்கள் எனப்படும். மற்றையவை தாள அமைப்பில்லாமல் பாடியவை. இவை சுத்தாங்கப் பாடல்கள் எனப்படும். திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்களாகும்.

      தாண்டகம் என்னும் பாவகையைப் பாடுவதில் பெருந்திறமை பெற்றவர் அப்பர். அதனால் அப்பருக்குத் "தாண்டக வேந்தர்" என்ற பெயரும் உண்டு.

  2.3.9 திருநாவுக்கரசர் தேவாரத்தில் பண்கள்

      திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களை நான்கு, ஐந்து,ஆறு திருமுறைகளாக வகுத்துள்ளனர். நான்காம் திருமுறை பண் அடிப்படையிலும், ஐந்து, ஆறு திருமுறைகள் யாப்பு அடிப்படையிலும் பெயரிடப் பெற்றுள்ளன. நாவுக்கரசர் பாடியவைகளில் பத்துப் பண்கள் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு :
  வ.எண்
  பண்
  திருப்பதிகங்கள்
  மொத்தம்
  1.
  கொல்லி
  திருப்பதிகம் திருநேரிசை 22 முதல் 79 வரை 58 திருவிருத்தம் 80 முதல் 113 வரை 34
  93
  2.
  காந்தாரம்
  2 முதல் 7 வரை
  6
  3.
  பியந்தைக் காந்தாரம்
  8
  1
  4.
  சாதாரி
  9
  1
  5.
  காந்தார பஞ்சமம்
  10-11
  1
  6.
  பழந்தக்க ராகம்
  12-13
  2
  7.
  பழம் பஞ்சுரம்
  14-15
  2
  8.
  இந்தளம்
  16-18
  3
  9.
  சீகாமரம்
  19-20
  2
  10.
  குறிஞ்சி
  21
  1
  ---
  ஆக
  ---
  113

      “தமிழோடு இசைபாடல் மறந்தறி” யாத திருநாவுக்கரசர் பாடிய பண்களில் பத்து நமக்குக் கிடைத்துள்ளன. இதில் முதல் பண்ணாகக் கொல்லிப் பண் அமைந்துள்ளது.

      ‘கூற்றாயின வாறு விலக்கலீர்,’ எனும் பதிகம்கொல்லிப் பண்ணினால் அமைந்தது. கொல்லிப்பண் பகைமையைக் கொல்லும் பண் ஆகும். தேவாரத்தில் அதிகமான பதிகங்களில் இப்பண் பயன்படுத்தப் பெறுகின்றது. இறைவன் இப்பண்ணை விரும்பி ஏற்பான் என்பதை, ‘கொல்லியாம் பண்ணுகந்தார் குறுக்கை வீரட்டனாரே’ என்று நாவுக்கரசர் போற்றுகிறார்.

  1.

  தேவார மூவரில் சமகாலத்தில் வாழ்ந்த இருவர் யார் ?

  [விடை]

  2.. சம்பந்தரின் பிள்ளைத் திருநாமம் என்ன ? [விடை]
  3. சம்பந்தர் பாடிய முதலாவது தேவாரப் பாடலின் பண் பெயரை எழுதுக. [விடை]
  4. "மந்திரமாவது நீறு" எனத் தொடங்கும் தேவாரத்தை என்ன பண்ணில் பாடினார்? [விடை]
  5. அப்பர் பாடிய முதல் தேவாரத்தின் தொடக்கத்தை எழுதுக. [விடை]
  6. அப்பரின் தமக்கையார் பெயர் என்ன? [விடை]
  7. அப்பூதி அடிகளார் மகன் எவ்வாறு இறந்தார்? [விடை]
  8. தாண்டக வேந்தர்’ என்பது யாரைக் குறிக்கும்? [விடை]