2.2 மதிப்பீட்டு முறைத் திறனாய்வு | |||||||||||||||||||
திறனாய்வின் பணி, இலக்கியத்தை மதிப்பீடு (Evaluation) செய்கிற பண்பினை அடியொற்றியது ஆகும். இலக்கியத்தைப் பகுத்தாய்வதும் விளக்கியுரைப்பதும் அதனுடைய சமுதாய நிலைகளையோ, உளவியல் பண்புகளையோ அளவிட்டுரைப்பது மட்டுமல்ல; அதே தளங்களிலிருந்து அவ்விலக்கியத்தை மதிப்பிட்டுரைப்பதும் ஆகும். உதாரணமாகக் குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தில் சமுதாயம் பற்றிய செய்திகள் எவ்வளவு ஆழமாகவும், உண்மையாகவும், திறம்படவும் சொல்லப் பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில் அவ்விலக்கியத்தை மதிப்பிடலாம். இவ்வாறு மதிப்பிட்டுரைப்பதுதான் மதிப்பீட்டு முறைத் திறனாய்வின் அடிப்படைக் கருதுகோள் ஆகும். திறனாய்வின் பல அணுகுமுறைகளின் போக்கிலும் நோக்கிலும், மதிப்பீட்டு முறை என்பது அடிநாதமாக விளங்குகிறது. காட்டாகப், புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் ஒன்றான கயிற்றரவு எனும் கதையில் அத்துவைத தத்துவம் இருக்கிறது; அதனைத் தத்துவ நோக்கில் ஆராய்கிற போது, அதன்வழி அந்தக் கதை மதிப்பிடவும்படுகிறது. | |||||||||||||||||||
|
|
||||||||||||||||||
2.2.1 மதிப்பீட்டு முறையின் நோக்கம் | |||||||||||||||||||
மதிப்பீட்டுத் திறனாய்வு என்பது, குறிப்பிட்ட இலக்கியத்தின் தரம், தகுதி, சிறப்பு, சீர்மை என்பவற்றைப் பேசுவதோடு, அவ்விலக்கியத்தில் அமைந்திருக்கும் கூறுகளும், பண்புகளும், உண்மைகளும் பிறவும் இலக்கிய மதிப்பு (Literary value) உடையவை என்பதையும் பேசுகிறது. இலக்கிய மதிப்பு என்பது மேலே குறிப்பிட்ட கூறுகளும் பண்புகளும், பிறவும் இலக்கியமாகியிருக்கின்ற கலைநேர்த்தி பற்றியது ஆகும். ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின்
நிறை குறைகளைக் கண்டு, குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி
மிக்கன கொண்டு அது இத்தகையது என மதிப்பீடு செய்தல், மதிப்பீட்டுத் திறனாய்வின்
நோக்கம் ஆகும். | |||||||||||||||||||
2.2.2 இலக்கிய மதிப்பீட்டு அளவுகோல் | |||||||||||||||||||
பல இலக்கியங்களுக்குப் பொதுவாகவும், பலராலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், அதேபோது, குறிப்பிட்ட இலக்கியத்திற்கு மிகவும் ஏற்புடையதாகவும் சிறப்புடையதாகவும் கருதப்படுவது இலக்கிய மதிப்பீடு எனப்படும். சொல்கிற செய்தி, சொல்லப்படுகிற உத்தி, உள்ளடக்க வீச்சு, செய்ந்நேர்த்தி முதலியவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்புக் கூறு அல்லது பண்பு அமைந்திருப்பது, இலக்கிய மதிப்பு எனப்படுகிறது. அத்தகைய மதிப்பினை இனங்கண்டறியவும், திறனறிந்து கூறவும் வழித்துணையாக இருப்பதே மதிப்பீட்டு முறையாகும். இதுவே இதன் அளவுகோல் ஆகும்.
| |||||||||||||||||||
|